ஐதராபாத்: இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கும் ரகுல் பிரீத் சிங்கின் சகோதரரும், தெலுங்கு மற்றும் இந்தி நடிகருமான அமன் பிரீத் சிங் மீது போதை பொருள் பயன்படுத்திய தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐதராபாத் மசாப் டேங்க் காவல் நிலையத்தில், கடந்த 2025 டிசம்பர் மாதம் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட போதை பொருள் கடத்தல்காரர்களிடம் நடத்திய விசாரணையில், அமன் பிரீத் சிங் தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்துபவர் என்றும், அவரிடம் இருந்து கோகைன் மற்றும் எம்.டி.எம்.ஏ போன்ற செயற்கை போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே 2024ல் சைபரா பாத் போலீசாரால் இதுபோல் ஒரு போதை பொருள் வழக்கில் அமன் பிரீத் சிங் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வரும் அமன் பிரீத் சிங், தன்மீதான முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) ரத்து செய்ய கோரி தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். அவரது வழக்கறிஞர் வாதாடுகையில், ‘இந்த குற்ற வியல் நடவடிக்கை சட்டப்படி நிலைக்கத்தக்கது இல்லை. எனவே, மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமலா தேவி ஈடா, இதுகுறித்து பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த வழக்கில் ரகுல் பிரீத் சிங்கிற்கு எந்த தொடர்பும் இல்லை என்று போலீசார் தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.
