ஓரியூரில் 800 ஆண்டு பழமையான பாண்டியர் கால சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் கீழக்குடியிருப்பில் ஒரு கல்வெட்டு இருப்பதாக நாகணி ஆசிரியர் அர்ச்சுணன், ஓரியூர் கண்ணன் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டை ஆய்வு செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில்,சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையில் திரிசூலம் பொறித்த சூலக்கற்கள் நடுவது வழக்கம். சேதுபதி மன்னர் கால சூலக்கற்களில் பெரும்பாலும் கல்வெட்டு இருக்கும். ஆனால் பாண்டியர் கால சூலக்கற்களில் கல்வெட்டு இருப்பதில்லை. சூலம் மட்டுமே இருக்கும். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக பாண்டியர் கால கல்வெட்டுடன் கூடிய சூலக்கல் ஓரியூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓரியூர் கீழக்குடியிருப்பு கால்வாய் பகுதியில் 2 அடி உயரமும், 1½ அடி அகலமும் உள்ள ஒரு கருங்கல்லில் ஒருபுறம் 10 வரிகள் உள்ள கல்வெட்டும், மறுபுறம் திரிசூலமும் பொறிக்கப்பட்டுள்ளது.   ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கி உ என கல்வெட்டு முடிகிறது. இக்கல்வெட்டில் வானவன் மாதேவி நல்லூர், உலகுய்யவந்த நல்லூர் ஆகிய இரு நல்லூர்கள் உள்ளன. இதில் உலகுய்யவந்தான் என்பது முதலாம் குலோத்துங்க சோழனுடைய சிறப்புப் பெயர். வானவன் மாதேவி என்பவர் முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவியும், முதலாம் குலோத்துங்க சோழனின் தாய் வழி பாட்டியும் ஆவார். இதில் வானவன் மாதேவி நல்லூர் தற்போதைய ஓரியூர் ஆகும். ஆனால் உலகுய்யவந்த நல்லூர் எங்குள்ளது என அறிய இயலவில்லை. தன் பெயரிலும், தன் பாட்டி பெயரிலும் முதலாம் குலோத்துங்கசோழன் நல்லூர்களை உருவாக்கியுள்ளதை அறிய முடிகிறது. ஓரியூர் தேவதானமாக வழங்கப்பட்ட தகவல் திருப்புனவாசல் கோயில் கல்வெட்டுகளில் இல்லை. இதன் எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டு கி.பி.13ம் நூற்றாண்டின் (800 ஆண்டு பழமையானவை) பிற்பகுதியைச் சேர்ந்தது எனலாம் என்றார்….

The post ஓரியூரில் 800 ஆண்டு பழமையான பாண்டியர் கால சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: