விசுவாசத்துடன் செயல்படுதல்

(யோசுவா 3: 7-17)

சுமார் 450 ஆண்டு கால எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, 40 ஆண்டு கால வனாந்திரப் பயணத்தை முடித்து, தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பாலும் தேனும் ஓடுகிற கானான் நாட்டுக்குள் நுழைய எபிரேயர்கள் தயாராகின்றனர். இதற்கு இதுவரை தலைமையேற்றிருந்த மோசே இறந்துவிட யோசுவா அந்தப் பொறுப்பை ஏற்கிறார். எந்த விடுதலைப் போராட்டமும் குறைவுகள், தவறுகள், மீறல்கள், உயிர்ப்பலிகள் மற்றும் குற்றமற்றவர்களின் உயிர் பறிப்பு இன்றி நிகழ்ந்ததில்லை. இஸ்ரவேல் மக்களின் விடுதலைப் போராட்டமும் அத்தகையது தான்.

மேலும் இவை யாவும் கடவுளின் பெயரால் நியாயப்படுத்தப் பட்டுள்ளது என்பது இன்றைய அரசியல் நடைமுறையின்படி ஏற்பதற்கில்லை. அக்காலச் சூழலில் இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்வுடனும் மற்றும் இயற்கை சார்ந்தும் நடைபெற்ற அனைத்தையும் கடவுள் நம்பிக்கையுடன் தொடர்புபடுத்திக் கொண்டனர். இப்போது அவர்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து எரிகோ நகருக்குள் நுழைய வேண்டும். பாலஸ்தீனத்தில் விவசாயம் நடக்கும் பருவ காலம் என்பதால் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடியது. சுமார் 6 இலட்சம் பேர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர், நடக்க இயலாதவர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் ஆற்றைக் கடக்க வேண்டும்.

இங்கு இஸ்ரவேல் மக்கள் செங்கடலைக் கடக்க நேர்ந்த போது கடல் இரண்டாகப் பிரிந்து உலர்ந்த தரையில் அவர்கள் கடலைக் கடந்ததைப் போன்று, யோர்தான் ஆற்றிலும் மேற்பகுதி நீர் முன்னேறாது நிற்க, கீழ்ப்பகுதி நீர் சாக்டலுக்குள் ஓடி மறைய வறண்ட தரை வழி மக்கள் யோர்தான் நதியைக் கடந்தனர். விடுதலைப் பயணம் எளிதானது அல்ல. மலைக்கச் செய்யும் தடைகள், இடையூறுகளைக் கடந்து தான் விடுதலையை அடைய முடியும்.  ஒடுக்கப்பட்ட மக்கள் அதற்கான முயற்சியில் துணிந்து இறங்க வேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள் அவர்கள் விடுதலையை அவர்களே வென்றெடுக்க வேண்டும்.

விடுதலையை யாரும் வலிய வந்து தட்டில் வைத்து வழங்க மாட்டார்கள். ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் விடுதலைக்காகப் போராடியாக வேண்டும்.  போராட்டம் இன்றி விடுதலை இல்லை.   அது போன்ற சூழல்களில் கடவுள் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பார், வழிகாட்டுவார், துணை இருப்பார், ஆற்றல்படுத்துவார், விடுதலைக் காற்றை சுவாசிக்க உதவிடுவார் என்பது தான் நமக்குக் கிடைக்கும் செய்தியாகும்.

மேலும் இதற்கு கடவுள் மீதுள்ள உறுதியான நம்பிக்கையும், இலக்கினின்று மாறாத் தன்மையும், மக்களின் இணைந்த செயல்பாடும், ஒருங்கிணைக்கும் ஒப்பற்ற, உறுதிமிக்க தலைமையும் அவசியம். விடுதலை என்பது ஒருமுறை அடைந்து முற்றுப் பெறுவதில்லை. அது எல்லாக் காலத்திலும் நடைபெற வேண்டிய ஒரு தொடர் நிகழ்வாகும். விடுதலை சிந்தனைகளை மனமுவந்து ஏற்கும் சமூகம் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். விடுதலை சிந்தனைகளை ஏற்க மறுக்கும் சமூகம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

Related Stories: