நின் புகழ்ச்சியன்றிப் பேணேன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்

வீணே பலி கவர்‌தெய்வங்கள்‌பாற்சென்று, மிக்க அன்பு

பூணேன்‌உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்‌நின் புகழ்ச்சியன்றிப்‌

பேணேன்‌; ஒருபொழுதும்‌; திருமேனி

ப்ரகாசமன்றிக்‌

காணேன்‌, இருநிலமும்‌திசை நான்கும்‌

ககனமுமே

(அறுபத்தி நான்காவது பாடல்)

“ஆதியாக”

இப்பாடலானது அபிராமிபட்டரின் உள்ளுணர்வை பற்றி பேசுகிறது. உள்ளுணர்வு என்பது ஒவ்வொருவருக்கும் அவர் முன்னமையே பெற்ற அனுபவத்தின் வழி இடம், காலம், நிகழ்வு இவைகளுக்கு உண்டான ஒரு நேர்க்கோட்டுத் தொடர்பு. ஒவ்வொருவருடைய அனுபவமும் வெவ்வேறு வகையில் அமையும் அனைவருக்கும் அது ஒன்றாக அமையாது.   வயது சார்ந்தும் உணர்வு மாறுபடும். உபாசனை நெறியில் உமையம்மையை கண்டால், கண்டவர்களின் உள்ளுணர்வு ஒரே மாதிரியாக அமைகிறது.

அப்படித்தான் அமையும் என்றார். இது உலகியல் உணவிற்கு முற்றிலும் மாறானது. உதாரணமாய் அபிராமிபட்டர், அப்பைய தீக்ஷிதர், காளிதாசர், இவர்கள் வெவ்வேறான காலத்தில் வாழ்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாதவர்கள்.

உமையம்மையை உபாசித்தவர்கள் இவர்களின் பாடல்களை கூர்ந்தாய்வு செய்தால் உமையம்மையை பற்றிய மூவர் கருத்தும் ஒன்றாகவே இருப்பதைக் கொண்டு உணரலாம். மேலும் உமையம்மையின் மீது கொண்ட அன்பும் ஒரே மாதிரியாகத் தோன்றும். மூவருக்கும் ஏற்பட்ட சிக்கல்களும் ஒரே மாதிரியாக இருப்பதை கண்டு நன்கு உணரலாம். இறையருள் சித்தி பெற்ற உபாசகனுக்கு தோன்றும் மனமாற்றம் ஒரே மாதிரியாகவே இருப்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது இந்த பாடல். இனி பாடலுக்குள் நுழைவோம்.

“அந்தாதி பொருட்ச்சொல் வரிசை”

*வீணே பலி கவர் தெய்வங்கள் பாற்சென்று, மிக்க அன்பு பூணேன்

*உனக்கு அன்பு பூண்டுகொண்டேன்

*நின் புகழ்ச்சியன்றிப் பேணேன்

*ஒருபொழுதும் திருமேனி ப்ரகாசமன்றிக் காணேன்

*இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே

 இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கத்தை இனி காண்போம்.

‘‘வீணே பலி கவர் தெய்வங்கள் பாற்சென்று, மிக்க அன்பு பூணேன்”

 தன் தேவைகளை நிறைவேற்றுவதை முதன்மையாகக் கொண்டு பக்தி செய்பவர்களை “வீணர்” என்கிறார். அந்த பலியை, தான் பெறாத போது அந்த தெய்வமும் அந்த ப்ரார்த்தனையை நிறைவேற்றாது. பலிக்காகத் தெய்வமும் அதன் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக பக்தனும் ஒருவருக்கொருவர் வழிபாடு செய்வதைத்தான் “வீணே பலிகவர் தெய்வங்கள்” என்கிறார். அபிராமிபட்டர் காலத்தில் ஒருசில சக்தியுடைய சிறு தெய்வங்கள் பல இருந்தன. அவற்றிற்கு பலியிட்டு வணங்கும் வழக்கமிருந்தது. அவை வேண்டியவருக்கு வேண்டியதை அருளும் தன்மைகொண்டிருந்தது என்றாலும், இத்தகைய வழிபாட்டின் குறைவு என்னவென்றால் குழந்தைகள் நலம் காக்கும் பேச்சியம்மன்.

கணவன் மனைவியரிடத்து அன்பை பெருக்கும் காட்டேரி. முக்காலத்தையும் சொல்லும் யக்ஷி, காணாமல்போன பொருளைக் காட்டும் காத்தவராயன் என்று ஒருசில ஆற்றல்களை மட்டுமே பெற்றிருப்பதால் அவற்றை “பலி கவர் தெய்வங்கள்” என்கிறார். முறையாக மந்திரம் பெற்று அதை தொடர்ந்து இடைவிடாது பயிற்சி செய்து அதன் விளைவால் உள்ளுக்குள் ஏற்படும் மாற்றத்தைப் போல, உமையம்மை மந்திரத்தை உணர்வுடனோ, உணர்வின்றியோ பல லட்சம் தடவை உச்சரித்தால் அதன் பயனாய் உலகியல் இன்பங்களில் மனது கவனம் செலுத்தாது.

உமையம்மையை குறித்தே செல்லும். ஆனால், உலகில் மக்கள் அனைவரும் தான் செய்யும் எந்த ஒரு வழிபாட்டையும் உமையம்மையின் உயர்வு கருதி துதிக்காமல் அவரவர்கள் வேண்டியது, நடப்பதை, நடந்ததை அடிப்படையாக கொண்டு அந்த தெய்வத்தின் வழிபாட்டை மிகுதியாக செய்வார்கள். உதாரணமாய் ஏதோ ஒரு தெய்வத்தை வேண்டிக்கொண்டால் செல்வம் பெருகும் என்றால், அப்படி வேண்டிக்கொண்டு சிலருக்கு செல்வம் பெருகினால், தானும் அவ்வாறு செய்து செல்வச்செழிப்பு தோன்றினால், அந்த தெய்வத்தை வணங்குவதை விட்டு விலக மாட்டார்கள். மேலும், அடிக்கடி பிரார்த்தனையை மாற்றிக் கொண்டு அதை தெய்வத்திடம் முறையிட்டு மது, அசைவம், போன்றவற்றை படைத்தால் பிரார்த்தனை சித்தியாகும் என்றால் அதை செய்யவும் தயங்க மாட்டார்கள்.

அது நடந்துவிட்டால் மேலும், மேலும் அந்த தெய்வத்தின் மீது அன்பு கொள்வார்கள். இத்தகைய வழிபாட்டைத்தான் அபிராமிபட்டர் “பலி கவர் தெய்வங்கள் பார் சென்று அன்பு பூணேன்” என்கிறார். இதன் நுட்பம் என்னவென்றால், பிரார்த்தனை நிறைவேறாவிட்டால் அந்த தெய்வத்தை வணங்கமாட்டார்கள்.பிறவற்றை அருள வல்லமை இல்லை. அசுரர்கள் பிரம்மனிடம் தவம் செய்து, இறவா வரம் கேட்டு அதை அளிக்கும் பண்பு தனக்கு இல்லை என்றும், அதற்கு ஒப்பானதை கேட்டு பெறுக என்றும், வரம் அளித்தாக புராணங்கள் வழி அறிய கிடைக்கிறது. இத்தகைய தெய்வத்திடம் [சிறு தெய்வத்திடம்தான்] மிக்க அன்பு பூணுவதில்லை என்கிறார் அபிராமிபட்டர்.

அன்பு பூணுவதில்லை என்று குறிப்பிடாமல் மிக்க அன்பு பூணுவதில்லை என்று குறிப்பிடுவதிலிருந்து பிற தெய்வத்தை இழிவு செய்யவில்லை. இழிவு செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பதை தெளிவாக நமக்கு அறிவுறுத்தவே “மிக்க அன்பு பூணேன்” என்கிறார். பட்டரின் உயர்ந்த அன்பை,

 `நன்றே வருகினும்‌, தீதே விளைகினும்‌, நான்‌அறிவது

ஒன்றேயும்‌இல்லை, உனக்கே பரம்‌எனக்‌குள்ளவெல்லாம்‌

அன்றே உனதென்‌றளித்துவிட்டேன்‌' (95)

என்பதனால் அபிராமி பட்டரின் உயர்ந்த அன்பு வெளிப்படுவதையும் ‘கடவுளர் யாவருக்கும் மேலே இறைவியுமாம்’ (44) ஒப்பாரும் மிக்காரும் அற்ற உயர்வர உயர்ந்த உமையம்மையினுடைய பண்பையும் நன்கு நாம் உணர்ந்து கொள்ளலாம். அபிராமியினிடம் தான் செலுத்தும் அன்பு, அபிராமியினுடைய அருள் இரண்டும் பலிகவர் தெய்வங்கள் அதனிடத்து செல்லும் பக்தர்களின் பண்பையும் வேறுபடுத்தி தெளிவுற விளக்கிக் காட்டவே “வீணே பலி கவர் தெய்வங்கள் பாற்சென்று, மிக்க அன்பு பூணேன்” என்கிறார்.

‘‘உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்”

இந்த வார்த்தையால் அபிராமிபட்டர் இறைவியின் மீது, தான் கொண்ட அன்பை பற்றி விளக்கி கூறுகிறார். தீக்ஷை எடுத்து கொண்டவர்கள் தீக்ஷா மந்திரத்திற்குரிய தேவதையை மட்டுமே ஆலயத்தில் தரிசிப்பர். பல தேவதைகள் இருந்தாலும் வணங்கமாட்டார். அவர்கள் குருவினால் அளிக்கப்பட்ட மந்திரம் தொடர்பான ஒரு பூஜா மூர்த்தியை உருவமாகவோ அல்லது ஸ்ரீசக்ரம் போன்ற யந்திர வடிவத்திலோ உமையம்மையை எழுந்தருளச்செய்து பூஜிப்பர். அந்த பூஜா விக்கிரகத்தின் மீது அனைத்து உறவினர்களையும்விட மிகுந்த அன்பு கொண்டிருப்பர்.

அதை பூஜித்தபிறகே உணவு உண்பர். வெளி ஊர்களுக்கு செல்லும்போதும் உடன் எடுத்து செல்வர். இதையே உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் என்ற வார்த்தையால் நமக்கு தெரிவிக்கின்றார். மேலும், பூஜை செய்யவில்லை என்றாலோ, ஆத்மார்த்த விக்ரஹம் காணாமல் போனாலோ, உணவருந்தாமல் பட்டினி கிடப்பார்கள். அந்த விக்ரஹத்தை மனைவி, மகனைகூட தொடவிடமாட்டார்கள். இத்தகைய நெருங்கிய தொடர்புடைய அன்பையே “உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்” என்றார்.

மேலும், மந்திரம் மற்றும் தேவதைக்கு தக்கவாறு மாதாந்திர, வருடாந்திர சிறப்பு விரதங்களை மேற்கொள்வர். இவை ஒவ்வொரு தேவதைக்கும் தனித்தனியே வரையறுக்கப்பட்டுள்ளது. பட்டரை பொருத்தவரை நவராத்திரி காலத்தில் சிறப்பாக வழிபாடு செய்வார். அமாவாசை, பௌர்ணமி, பஞ்சமி திதிகளில் மக நட்சத்திரம், பூரம் போன்ற நட்சத்திரங்களிலும், வாரம்தோறும் வெள்ளிக்கிழமையிலும், விரதமிருப்பார். இதுபோன்ற அனைத்து சாத்திர நெறிமுறைகளையும் உமையம்மையின் மீது கொண்ட மிகுந்த அன்பினால் சலிப்பின்றி செய்வர். வழிபாடு செய்யும் கோயில் பூசாரி, துறவியர், உபாசனை செய்து வரும் சக நண்பர்கள் அனைவரையும் உமையம்மையாகவே  போற்றி வழிபடுவர்.

கனவிலும் உமையம்மையை சிந்திப்பர். நினைவிலும், பூஜை, ஜெபம், தியானம், யோகம் முதலியவற்றை பயிலும் அத்தனை செயல்களையுமே “உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்” என்கிறார். அபிராமி பட்டரை பொறுத்தவரை ஸ்ரீசக்ர யந்ரம் ‘ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே’ (19) லலிதா பரமேஸ்வரி விக்ரஹம், சுவாசினி பூஜை, கன்யா பூஜை, ஆலயத்திலுள்ள அபிராமி விக்ரஹம் போன்றவைகளை தனது உயிர் சுவாசமாய் எண்ணி மிகுந்த அன்புடன் வழிபாடு செய்து வந்தார்.

வேதாந்தம் முதலிய சாஸ்திரங்களும், சந்தியாவந்தனம், போன்ற சாத்திர அனுஷ்டானங்களும், பிரம்மயக்ஞம் போன்ற வேள்விகளும், அபிராமியாகவே கருதத்தக்கது. ஆலயத்தில் உமையம்மையின் சந்நதியை தூய்மைப்படுத்துவது, அபிஷேகத்திற்கு நீர் கட்டுவது, உமையம்மைக்கு அலங்கரிக்க பயன்படும் புடவைகளை தூய்மை செய்வது.

நெய்வேத்தியம் தயார் செய்வது, சந்நதியை திறந்து விளக்கிடுவது. அபிஷேகத்திற்கு பொருட்கள் தயார் செய்து வைப்பது, அலங்காரத்திற்கு உதவுவது, சோடஷ உபசாரத்திற்கு உதவுவது என இவை அனைத்தையுமே கடமையாக செய்யாமல், உள்ள சலிப்பின்றி மகிழ்ச்சியுடன் அன்புடன் செய்வதையே “உனக்கு அன்பு பூண்டுகொண்டேன்” என்கிறார்.

‘‘நின் புகழ்ச்சியன்றிப் பேணேன்”

இது ஒரு உபாசனை கலைச்சொல்லாகும். சக்தித் தத்துவத்தைப் பொருத்தவரை உபாசனையில் பத்துவிதமான படித்தளங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும், ஒன்றிற்கு ஒன்று மேலானதும், ஒன்றிற்கு ஒன்று அடிப்படையானதுமாகும். ஒவ்வொரு ஸ்ரீ வித்யா உபாசகனும், பத்துவிதமான நடைமுறைகளை பின்பற்றுவதையே பேணேன் என்கிறார். அவை ஒவ்வொன்றும் என்ன என்பதை செம்மையுற அறிதல் இச் சொல்லின் செறிவை உணர்ந்துகொள்ள உதவும்.

*ஜபம் செய்பவர்கள் அட்ஷரத்திற்கு லட்சம் உரு [எண்ணிக்கை] ஜெபிக்க வேண்டும்.

‘மன்னியது உன் திருமந்திரம்’ (6)

*தர்ப்பணம் என்று இறைவனின் திருநாமங்களை சொல்லி நீர் வார்த்தலை செய்ய வேண்டும்.

‘நின் அருட்புனலால் துடைத்தனை’ (27)

*மார்ஜனம் என்று மந்திரம் சொல்லி தன் தலையில் புரோக்ஷித்து கொள்ள வேண்டும்.

*வேள்வித்தீயில் [ஹோமம்] உமையம்மையை எழுந்தருளச் செய்து நெய்யினாலும் உமைக்கு விரும்பிய பொருளினாலும் வணங்க வேண்டும்.

*தானம் என்று புடவை, அணிகலன்கள், மலர், போன்ற அறுபத்தி நான்கு மங்கலப் பொருட்களை கொண்டு மகளிரை உமையம்மையாக கருதி அவர்களுக்கு அந்த பொருட்களை வழங்கி வழிபட வேண்டும்.

*விரதம், போன்ற சிறப்பு நாட்களில் உணவருந்தாமல் காலை முதல் மாலை வரை இறையை சிந்தித்து இருக்க வேண்டும்.

‘தோத்திரம் செய்து தொழுது’ (67)

* பூஜனம் என்பது குருவாலோ, பரம்பரையில் உள்ள தெய்வத் திருமேனியிலோ தினசரி பஞ்சோபசாரங்களுடன் பூஜை செய்ய வேண்டும்.

*உபாசனை தேவதை கோயிலுக்கு சென்று அங்கு இருக்கும் பூசாரிகளின் வழி பூஜை செய்வித்து வணங்க வேண்டும்.  

*உபாசனை மந்திரங்களை உபதேசித்தவர்களை அழைத்து அவர்களை உமையம்மையாகவே கருதி வழிபட வேண்டும். துறவியரையும் வழிபடலாம், ஆலய அர்ச்சகரையும் வழிபடலாம், இவர்களுக்கு செய்யும் வழிபாடானது குரு ஆராதனம் எனப்படுகிறது.

‘நின் அடியாருடன் கூடி முறை முறையே பண்ணியது என்றும் உன் தன் பரமாக பத்ததியே’ (6)

இவை எல்லாவற்றையும் செய்துவிட்டுத்தான் பாராயணம் செய்ய வேண்டும். பாராயணம் என்பது தினசரி அல்லது தேவதைக்கு உரிய சிறப்பான நாட்களை தெரிவு செய்து தேவைக்கு தக்கவாறு மந்திரங்களை அந்தணர்களை கொண்டாவது, தானாக கற்றாவது சில மந்திரப்பகுதிகளை மீண்டும் மீண்டும் சொல்லச் செய்வதாகும்.

அதில் ராத்ரீ சூக்தம், ‌ஸ்ரீசூக்தம், துர்கா சூக்தம், சரஸ்வதி சூக்தம், பாக்கிய சூக்தம் போன்ற சில முக்கிய வேதப்பகுதிகள் சொல்லப்படுகிறது. தேவி மஹாத்மியம் என்ற ஒரு வடமொழி நூலில் எழுநூறு ஸ்லோகங்களுக்கு மேல் உள்ளது. அதை பிரித்தாவது, சேர்த்தாவது, பாராயணம் செய்ய வேண்டும். இவைகளையே “நின் புகழ்ச்சியன்றிப் பேணேன்” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Related Stories: