வீர வசந்த வைபோகர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வசந்தம் என்பது இனிமையும், இதமும் எங்கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும். சிவபெருமான் வசந்த காலத்தில் அழகிய பூஞ்சோலைகளுக்கு இடையே அமைந்த வசந்த மண்டபத்தில் அமர்ந்து அதன் இனிமையை நுகர்வதால் வசந்தன்

எனப்படுகின்றான்.

வசந்தன் என்பது மன்மதனுக்குரிய பெயர்களில் ஒன்றாகவும் இருக்கிறது. அவன் வசந்த காலத்தில் மனைவி இரதி தேவியுடன் தென்றல் தேரில் உலாவந்து உயிர்களின் மனதில் இன்பத்தை ஊட்டி மகிழ்விக்கிறான். அவனின்று வேறுபடுத்திக் காட்ட சிவபெருமானை வீர என்ற அடைமொழியுடன் வீரவசந்த வைபோகர் என்றழைக்கின்றனர்.

திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானுக்கு வீர வசந்த வைபோகர் என்பது பெயர். இங்கு வீரம் என்ற சொல் வீரம் விளைப்பது என்பதுடன் வீர்யம் என்பதையும் குறிக்கிறது. இதற்கு வளரச் செய்தல், பெருகச் செய்தல் என்பது பொருளாகும். தான் இன்பத்தில் ஆழ்ந்திருப்பது போலவே, உயிர்களையும் இன்பத்தில் மூழ்கச் செய்து களிப்படைய வைப்பதால் அவன் வீரவசந்த வைபோகன் என்று அழைக்கப்படுகிறான். சங்கீத உலகில் வீர வசந்தா என்ற பெயரில்ராகம் ஒன்றும் உள்ளது.

இந்த ராகத்தில் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் வீரவசந்தனான தியாகராஜர் மீது கீர்த்தனைகளைப் பாடியுள்ளார்.  திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரான சோமாஸ்கந்த மூர்த்திக்கும் வீர வசந்தவைபோகர் என்பது பெயர்.

அவரை மகனாகப் பெற்றதால் வல்லாள மகாராஜன் வீரவசந்த வைபோக வல்லாள மகாராஜன் என்று அழைக்கப்படுகின்றான். வீரவசந்தனான சிவபெருமான் உயிர்களுக்கு இன்பத்தை ஊட்டி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதுடன், அவர்கள் வம்சத்தை வளரச் செய்து மேன்மையடைய வைக்கின்றான்.வீரவசந்த வைபோகரான சோமாஸ்கந்தரை வழிபட்டு இன்னருள் பெற்று மகிழ்வோம்.

தொகுப்பு: அருள்ஜோதி

Related Stories: