வள்ளுவர் சொல்லும் வித்து!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

குறளின் குரல்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

தமிழ் மூதாட்டி அவ்வையார் தாம் எழுதிய நல்வழி என்ற செய்யுள் நூலில் முளைக்காத விதைகளைப் பற்றிப் பேசுகிறார்.‘பூப் பூக்காமலே காய்க்கிற மரங்கள் சில உண்டு. அதுபோல், ஏவல் செய்வதற்கு முன்பே குறிப்பறிந்து பணிபுரியும் வேலையாட்கள் ஒருசிலர் உண்டு. தூவி விதைத்தாலும் முளைக்காத விதைகளும் உலகில் உண்டு. அதுபோல், மூடர்களுக்கு எத்தனை உரைத்தாலும்தான் என்ன? அவர்கள் ஒருபோதும் மாறவே மாட்டார்கள்!’ என்கிற கருத்தைச் சொல்கிறது அவ்வையின் நல்வழி காட்டும் அந்த வெண்பா;

‘பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்

ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா

விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு

உரைத்தாலுந் தோன்றா துணர்வு!’

ஒரு செயலைச் செய்யும்போது இறைவனைச் சரணடைந்து பொறுமையோடு செய்து முடிக்க வேண்டும். பதற்றம் கூடாது என்று சொல்கிறார் மகாகவி பாரதி. சக்தியையே சரணடைந்து வாழ்ந்தால், நாம் சஞ்சலங்களைத் தவிர்க்கலாம் என்கிறார் அவர். பொறுமைக்கு, வித்து முளைக்கும் தன்மையை உவமையாக்குகிறார்.

‘பக்தியுடையார் காரியத்தில்

பதறார் மிகுந்த பொறுமையுடன்

வித்து முளைக்கும் தன்மைபோல்

மெல்லச் செய்து பயனடைவார்

சக்தி தொழிலே அனைத்துமெனில்

சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?

வித்தைக் கிறைவா கணநாதா!

மேன்மைத் தொழிலில் பணியெனையே!’

ஞானியாரடிகள் இந்துமதத்தின் தெய்வ வடிவங்கள் குறித்த தத்துவத்தையே விதை மூலம் விளக்கிவிடுகிறார். ஒரு விதை, விதையாக இருக்கிறபோது அதன் சக்தி வெளிப்படாமல் மறைந்திருக்கிறது. அதுபோன்றது கடவுளை உருவமற்று வழிபடும் அருவ வழிபாடு. சிதம்பரத்தில் சிவபெருமான் உருவமற்று ஆகாயமாகக் காட்சி தருகிறார். வெட்டவெளிக்கு அங்கு தீபாராதனை நடத்தப்படுகிறது. விதையிலிருந்து கேள்விக் குறிபோல் செடிமுளைக்கும்போது அது லிங்க வடிவம்போல் தோன்றுகிறது. அதாவது சரியான உருவமற்ற நிலை. அதுவே சிவ பெருமானின் அருவுருவம் கலந்த லிங்க வடிவம். அதற்கு வடிவம் என ஒன்று உண்டு என்றாலும், அடையாளம் காணும்படி கண், காது, மூக்கு போன்றவை இல்லை அல்லவா?

பின்னர், அது முளைத்து செடியாக, கொடியாக மேலெழும்போது எத்தனை எத்தனை வடிவங்கள்! மல்லிகை, முல்லை, ரோஜா, மா, பலா, தென்னை என்றெல்லாம் எண்ணற்ற வடிவங்கள் விதையிலிருந்துதானே தோன்றுகின்றன! நம் இந்துமதத்தின் முப்பத்து முக்கோடி தேவ வடிவங்களும் அப்படி ஒரே கடவுள் சக்தி யின் வெவ்வேறு வடிவங்கள்தான் என்கிறார் ஞானியாரடிகள். உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வகைத் தெய்வ நிலையையும் விதையை அடிப்படையாக்கி அழகாக விளக்குகிறார் அவர். பல வீடுகளில் கல்யாணம் போன்ற மங்கல நிகழ்வுகளில் பாலிகை வளர்க்கும் வழக்கம் உண்டு. பாலிகை என்பது நவதானியங்களை விதைக்கும் சிறு மட்பாண்டத்தின் பெயர். அதில் மண்ணைக் கொட்டி நவதானிய விதைகளை விதைத்து நீர் தெளித்து வளர்ப்பார்கள்.

பயிர் செழித்து வளர்வதைப் போலவே, தங்கள் குலமும் வளரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில், நிகழ்த்தப்படும் புனிதச் சடங்கு இது. நவதானியப் பயிர்கள் விளைந்த மட்பாண்டங்களை எடுத்துச் சென்று ஆறு, குளம் போன்றவற்றில் விடும் திருவிழா சில அம்மன் ஆலயங்களில் நிகழ்த்தப் படுகிறது. இந்தத் திருவிழா முளைப்பாரி என அழைக்கப்படு கிறது. ‘முத்துமாரி அம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவம்’ என்றெல்லாம் ஆலயங்களை ஒட்டி இவ்விழா ஒரு கொண்டாட்டத்துடன் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

விதை சார்ந்து பல பழமொழிகள் தமிழில் உலவுகின்றன. ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழி ஆடிமாதத்தில் விதை விதைக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. ‘விரையொன்று போடச் சுரையொன்று முளைக்குமா?’ என்ற பழமொழி அவரவர் இயல்புப் படியே அவரவர் இருப்பார்கள் என்று வலியுறுத்துகிறது. பழமொழிகள் நம் முன்னோரது கனிந்த அனுபவத்தின் உன்னத வெளிப் பாடுகள் அல்லவா? தங்கள் அறிவுச் செல்வத்தைப் பழமொழிகளில்தானே அவர்கள் பொதிந்து வைத்திருக்கிறார்கள்?

ஓர் ஆப்பிளில் எத்தனை விதை இருக்கிறது என்று எண்ணிவிடலாம். ஆனால், ஒரு விதையிலிருந்து பின்னாளில் எத்தனை ஆப்பிள் பழங்கள் தோன்றும் என்று எப்படி எண்ணக்கூடும் எனக் கேட்பதுண்டு.ஒரு விதை மரமாகி, அந்த மரத்துப் பழங்களெல்லாம் விதையானால் அப்படித் தொடரும் சங்கிலியில் எத்தனை எத்தனை கோடி ஆப்பிள் பழங்கள் விளையுமோ, யார் சொல்ல முடியும்? ஒரு சிறிய விதை என்பது அளக்கவியலாத மாபெரும் எதிர்காலத்தைத் தன்னில் தாங்கியுள்ளது என்பதுதானே உண்மை? ‘மக்களைப் பெற்ற மகராசி’ திரைப்படத்தில் கவிஞர் மருதகாசி எழுதி கே.வி.மகாதேவன் இசையமைப்பில், டி.எம்.செளந்தரராஜன் குரலில் ஒலிக்கும் பாடலொன்று புகழ்பெற்றது. ‘மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏருபூட்டி வயக்காட்டை உழுதுபோடு செல்லக்கண்ணு’ எனத் தொடங்கும் அந்தப் பாடல், வயலில் விதை விதைப்பதைப் பற்றிப் பேசுகிறது.

‘ஆத்தூரு கிச்சடிச் சம்பா

பாத்து வாங்கி விதை விதைச்சு

நாத்தப் பறிச்சு நட்டுப்போடு

சின்னகண்ணு தண்ணிய

ஏத்தம் புடிச்சு எறைச்சிப்போடு

செல்லக்கண்ணு...’

என உழவுத்தொழிலின் மேன்மையையும் அதன் வளர்ச்சிப்படிநிலைகளையும் அழகாக விவரிக்கிறது அந்தப் பாடல்.வள்ளுவர் அறிவுறுத்தும் நெறியை நாம் பின்பற்றுவோம். அறிவு என்னும் அங்குசத்தால், நமது ஐம்புலன்கள் என்ற யானைகளை அடக்கி ஆள்வோம். வள்ளுவர் வழியில் வாழ்வாங்கு வாழ்வோம்.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

Related Stories: