சகல வித்தைகளையும் அருளும் சரசுவதி அந்தாதி

தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கெனத் தனிச் சிறப்பிடம் பெற்றவர் கம்பர். கம்பரால் தமிழ்நிலம் தனிப்பெறும் சிறப்புப் பெற்றது. எனவேதான் பாரதியும் ‘கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ எனப் பாராட்டியுரைக்கின்றார். மேலும், ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல் இளங்கோவைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை’ எனவும் புகழ்ந்துரைப்பார்.

இத்தகைய சிறப்பிற்குரிய கம்பரது கவித்திறமையும் புகழும் மக்களால் இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றது. ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவர் மக்களால் புகழப்படுகிறார். சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சிறந்த அறிவாற்றல் பெற்றிருந்த கம்பர் வடமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தமிழில் ராமாவதாரமாய்ச் செய்தளித்தார்.

கம்பர் தமிழின்மேல், மக்கள் கொண்ட தனிப்பெறும் காதலால் ராமவதாரம் கம்பரின் பெயரால் கம்பராமாயணம் என்றே அழைக்கப்படலாயிற்று. ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த காவியமாகக் கருதப்படுகிறது. கம்பராமாயணம் உலகக் காப்பியங்களுடன் ஒப்பவைத்து எண்ணப்படும் பெருமையைக் கொண்டு அமைந்துள்ளது. கம்பராமாயணம் தவிர ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்றவற்றையும் அவர் படைத்தளித்தார். அவற்றுள் ‘சரசுவதி அந்தாதி’ என்னும் இலக்கியம் கலைமகளைப் போற்றி எழுதப்பட்டதாகும்.

சரசுவதி அந்தாதி என்பதனுள் அமைந்துள்ள ‘அந்தாதி’ என்பது தமிழில் அமைந்துள்ள தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கிய வடிவங்களுள் ஒன்றாகும். அந்தாதி என்பது அந்தத்தை ஆதியாக உடையது ஆகும். ‘அந்தம்+ ஆதி’ எனப் பிரித்தல் வேண்டும். வடமொழித் தொடர் என்பதால் ‘அந்தாதி’ எனத் தீர்க்க சந்தியாகப் புணர்ந்து நின்றது. ஒரே வகைச் செய்யுளால் நூறு பாடல்கள் அந்தாதியாகத் தொடரப் பாடுவதே பெரும்பாலும் அந்தாதி எனப்படும். ஆனால் சரசுவதி அந்தாதி முப்பது பாடல்களால் அமைந்தது ஆகும்.

காப்புச்செய்யுள் இரண்டினையும் சேர்த்து இந்நூலில் முப்பத்திரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சரசுவதி அந்தாதியின் காப்புச் செய்யுள் ஒன்று சரசுவதி ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் தருபவள் என்று குறிப்பிடுகிறது. இவ் அறுபத்து நான்கு கலைகளையும் கிருஷ்ணர் கற்றதாகப் புராணம் குறிப்பிடும்.

அதாவது, துவாரக யுகத்தில் கிருஷ்ணரும் பலராமரும் குருகுலக் கல்வி முறையை சாந்திபினி என்ற குருவிடம் கற்றனர். இவர்கள் குரு ஒருமுறை சொன்னாலே உள்வாங்கிக்கொண்டு கற்றுக் கொண்டனர், இவ்வாறு அறுபத்துநான்கு நாட்களில் அறுபத்துநான்கு கலைகளையும் கற்றுக் கொண்டனர் என்பது அச்செய்தியாகும். கலைமகள் தூய பளிங்கு போன்ற மேனியைக் கொண்டவளாய் அமைந்துள்ளாள் என்றும் குறிப்பிடுகிறது சரசுவதி அந்தாதி. இதனை,

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய வுணர்விக்கும் என்னம்மை - தூய

உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பளிங்கு வாராது இடர்.

(காப்புச்செய்யுள்)

 - என்பதனால் அறியலாம். மேலும் சரசுவதியின் மேனியானது படிகம் போலும் நிறத்தினைக் கொண்டதாகும். திருச்செவ்வாயோ பவளத்தின் நிறத்தினை ஒத்ததாய் அழகியதாய் அமைந்துள்ளது. அவளின் திருக்கரங்களோ மணம் பொருந்திய தாமரைபோலும் தன்மையைக் கொண்டவை. இத்தகைய சிறப்பினை உடைய அன்னையின் திருவடிவினை கல் துதித்தாலும் அதற்குக் கவி சொல்லும் ஆற்றல் வந்தமையும் எனில் மானுடர்கள் துதிப்பார்களின் அவர்களுக்குக் கிடைக்கும் அறிவாற்றல் குறித்துக் கேட்கவும் வேண்டுமோ? அவர்களுக்கு கல்வியும் கவிபாடும் ஆற்றலும் தானாய் வந்தமையும் என்கிறார் கம்பர். இதனை,

படிக நிறமும் பவளச்செவ் வாயும்

கடிகமழ்பூந் தாமரைபோற் கையுந் - துடியிடையும்

அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்

கல்லுஞ்சொல் லாதோ கவி. (காப்புச் செய்யுள்)

என்ற பாடல் விளக்கியுரைக்கும். மானுடசமூகம் வளர்ச்சிபெற சிந்தையில் தெளிவு என்பது மிகவும் இன்றியமையாதது ஆகும். ஆனால் சிந்தையில் தோன்றும் வெளிச்சத்தைக் கெடுப்பது அறியாமை என்னும் இருளே ஆகும். இத்தகைய அறியாமை என்னும் இருளினைப் போக்கி அறிவென்னும் ஆனந்தத்தினை அள்ளித்தருவது கலைமகளின் அருளே ஆகும். எனவே, அறிவை அறிய விரும்புகின்ற உயிர்கள் அனைத்தும் ‘தாய்’ எனப் போற்றி வழிபடுவது கலைமகளையே ஆகும். எனவேதான் கம்பரும் உலகில் உள்ள எல்லா உயிர்களும் போற்றி வழிபடுகின்ற வேதமாய் விளங்குபவள் கலைமகள் என்று குறிப்பிடுகிறார். இதனை,

புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந்து இருளை

அரிகின்ற தாய்கின்ற எல்லா அறிவினரும்

பொருளைத் தெரிகின்ற இன்பங் கனிந்தூறி

நெஞ்சந்தெளிந்துமுற்ற விரிகின்ற தெண்ணெண்

கலைமான் உணர்த்திய வேதமுமே.(பா:13)

என்ற பாடலால் அறியலாம். கலைமகளின் அருளைப்பெற்று அறிவினை உணர்ந்தவர்கள் உணர்வதற்கு என்று உலகில் ஏதும் இல்லை. அவளின் திருவருளே உலகில் அறிவனவற்றையெல்லாம் அறியச் செய்யும் ஆற்றல் பெற்றதாகும். அத்தகைய சிறப்பினை உடைய கலைமகள் தாமரைமலரில் உறைகின்ற பிரம்மனின் மனைவி ஆவாள். மேலும், இந்த உலகம் யாவையும் பெற்ற பெருஞ்சிறப்பிற்கு உரியவளும் அவளே ஆவாள் எனக் குறிப்பிடுகிறது சரஸ்வதி அந்தாதி. இதனை,

இனிநான் உணர்வது எண்ணெண் கலையாளை

இலகுதொண்டைக் கனிநாணுஞ் செவ்விதழ்

வெண்ணிறத் தாளைக் கமலவயன் தனிநாய

கியை அகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்

பனிநாண் மலருறை பூவையை ஆரணப் பாவையையே. (பா:8)

மூவுலகும் செயலால் அமைத்த கலைமகளே.(பா:4)

என்ற பாடல் அடிகள் விளக்கியுரைக்கும். பிறிதோர் பாடல் கலைமகளின் தெய்வத்தன்மையை விரித்துரைப்பதாய் அமைகின்றது, சரசுவதி, அடையாள நாண்மலரோடு தன் கையில் ஏட்டினை வைத்திருப்பவள். மணிவடம் பூண்டிருப்பவள். உபநிடதங்களையே தன் படையாகக் கொண்டிருப்பவள். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் படைப்பவள். மணம் நிறைந்த தாமரை மலர் போலும் கைகளைப் பெற்றிருப்பவள். இத்தகைய சிறப்புடையாளைத் தொழாமல் பிற யாரைத் தொழுவது என்கிறார் கம்பநாட்டாழ்வார். இதன்மூலம் துணையும் தொழும் தெய்வமுமாகவும் இருப்பவள் சரசுவதி என்பது தெரியவருகின்றது. இதனை உணர்த்தி நிற்கும் பாடல்,

அடையாள நாண்மலர் அங்கையில் ஏடு மணிவட

மும் உடையாளை நுண்ணிடை யன்று மிலாளை

உபநிடதப் படையாளை எவ்வுயிரும் படை

ப்பாளைப் பதுமநறும் தொடையாளை அல்லது

மற்றினி யாரைத் தொழுவதுவே.(பா:24)

என்பதாகும். இவ்வுலகில் உள்ள மானுடர் அனைவரும் பல்வேறு கலைகளைப் பற்றிப் பேசுகின்றனர். அத்தகைய கலைகளை எல்லாம் தந்தருளும் ஆற்றல் பெற்றவள் கலைமகளே ஆவாள். அவளையன்றி இந்நிலப்பரப்பில் உள்ள எவரும் அவற்றைத் தருதல் என்பது இயலாது. அக்கலைமகளே எனக்குக் கவிபாடும் ஆற்றலைத் தந்தருளிய பெருமை உடையவள் ஆவாள் எனப் போற்றி உரைக்கின்றார் கம்பர் என்பதனை,

உரைப்பார் உரைக்குங் கலைகளெல்லாம்

எண்ணில் உன்னையன்றித் தரைப்பால் ஒரு

வர் தரவல்ல ரோதண்டரளமுலை வரைப்பால்

அமுதுதந்து இங்கெனை வாழ்வித்த மாமயிலே

விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி

மெல்லியலே.(பா:3)

என்ற பாடலானது எடுத்துரைக்கின்றது. மேலும் சரசுவதியானவள் உலகின் புறஇருளைப் போக்குகின்ற ஆதவனின் ஒளியிலும் குளிர்ச்சி நிறைந்ததாய்க் காணப்படும் சந்திரனின் ஒளி என்னும் வெள்ளத்திலும் மிளிர்ந்து தோன்றும் அழகின் வடிவமாய்த் திகழ்பவள்.

செந்தமிழின் பாவையாய்த் திகழும் செம்மை பெற்றவள். நான்கு முகங்களை உடையவனாகிய பிரம்மனின் மனைவியாய் இருந்து அருள் செய்பவள். மேலும் என்னை ஆட்கொண்டு அறிவு தந்து அருளிய மடமயிலாய் அமைந்த நாயகி எனவும் புகழ்ந்து போற்றுகின்றார் கம்பர். அம்பிகையின் இத்தகைய அருட்திறத்தினைப் பெற்று மானுடர்கள் மட்டுமல்ல, விண்ணில் அமைந்திருக்கும் தேவலோகத்தில் இருக்கின்ற தேவர்களும் அவர்களின் தலைவனாகிய இந்திரனும் நான்கு மறைகள் போற்றுகின்ற சிவபெருமான், திருமால், பிரம்மன் என்று சொல்கின்ற மூவரும் முனிவர்களும் ஏனையோரும் இவர்கள் நீங்கலாகிய ஏனைய உயிர்களும் ஞானம் பெறுகின்றனர் எனக் குறிப்பிடுகிறது சரசுவதி அந்தாதி. இதனை,

தேவரும் தெய்வப் பெருமானும் நான்மறை

செப்புகின்ற மூவரும் தானவரா கியுள் ளோரு

முனி வரரும் யாவரும் ஏனையவெல் லாவுயிரும்

இதழ் வெளுத்த பூவரும் மாதினருள் கொண்டு

ஞானம்புரி கின்றதே.( பா:12)

என்ற அடிகள் விளக்கியுரைக்கின்றன. இந்த உலகில் மிகப்பெரிய திருவும் அடியவர் நெஞ்சில் இருந்து அருட்பாலிக்கும் செஞ்சொல் வஞ்சியாகிய சரசுவதியைத் தொழுபவர்கள் பொருந்திய ஞானமும் இன்பவேதப்பொருளும் திருந்திய செல்வமும் பெற்று இன்புற்று வாழ்வார்கள். எனவே இந்த சரசுவதி அந்தாதியைப் பாடி கலைமகளின் திருவருள் பெற்று உயர்வோமாக!

முனைவர் மா. சிதம்பரம்

Related Stories: