அன்பு மகனே..!

இஸ்லாமிய வாழ்வியல்

டாக்டர் முஸ்தபா சபாயி, உலகப் புகழ்பெற்ற மார்க்க அறிஞர். சிரியாவில் வாழ்ந்தவர். இவர் மரணப் படுக்கையில் இருந்தபோது, தம் மகனை அழைத்துக் கூறிய அறிவுரைகளில், இறை நம்பிக்கையுள்ள ஒரு தந்தையின் துடிப்பைப் பார்க்கலாம்.

‘‘என் அன்பு மகனே, கண்மணியே! நீ எங்களைப்போல் பெரியவனாகும்போது உன் பொறுப்புகளை நீயே சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கட்டம் வரும்போது நன்மை தரும் செயல்களில் ஈடுபடும் குழுவில் நீ இருக்க விரும்புகிறாயா? அல்லது இறைவனை மறந்து, மக்களுக்கு நன்மை தராத செயல்களைப் புரியும் குழுவில் இருக்க விரும்புகிறாயா?

நீ இதைப் பற்றியெல்லாம் என்ன நினைக்கிறாய் என்பதை நான் அறிய மாட்டேன். ஆனால், ஒரு விஷயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். உன் வீரமிக்க தோள்கள் என்னென்ன சுமைகளைத் தாங்க வேண்டும் என்பதை, ஒரு தந்தை எனும் முறையில், உனக்கு எடுத்துச் சொல்வது என் கடமை.

அன்பு மகனே, எப்போதும் நேர்வழியில் நடைபோடு. இறையச்சத்தை இதயத்தில் இருத்திக்கொள். நேர்வழியில் செல்லும்போது ஏற்பட இருக்கும் தொல்லைகளைக் கோடிட்டுக் காட்டி, அதற்காக உன்னைத் தயார் செய்வதும் என் கடமையே.

மனித குலத்துக்குத் தலைமை தாங்கி, வாழ்வின் நேர்வழியை மக்களுக்கு நீ எடுத்துரைக்க வேண்டும். எது சத்தியம், எது அசத்தியம் என்பதை மக்களுக்கு நீ தெளிவாக்க வேண்டும். இந்தக் கடமையை நீ நிறைவேற்றிவிட்டால், என் விருப்பம் பூர்த்தியாகிவிடும். அதுவே, எனக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கும். அந்த ஆற்றலை இறைவன் உனக்கு வழங்கவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

ஆனால், இக்கடமைகளை நிறைவேற்றும் பொறுப்புணர்வோடு நீ வளரவில்லை எனில் என்னுடைய பணி என் கடமைகளைச் செய்வது மட்டுமே என்றாகிவிடும்! சத்தியத்தின் செய்தியை ஒளிவு மறைவின்றி உனக்குச் சொல்வதே என் பொறுப்பு.

‘என் தந்தை எனக்கு இந்த நேர்வழியைக் காட்டவில்லை’ என்று நீ மறுமையில் இறைவனின் முன்னிலையில் என் மீது குற்றம் சுமத்தாத அளவுக்கு உனக்கு இந்த வழிமுறைகளை எடுத்துச் சொல்வதே என் கடமையாகும்’’.

அடடா…! எப்படிப்பட்ட அறிவுரைகள்…! மற்ற தந்தையரைப் போல, தன்னுடைய மகன் பணக்காரனாகவோ, சுகங்களை அனுபவிப்பவனாகவோ வளர்வதை அவர் விரும்பவில்லை. மாறாக, தம் மகன் ஓர் உண்மையான இறைநம்பிக்கையாளனாக, மற்றவர்களுக்கும் சத்தியத்தை நேர்வழியை எடுத்துரைப்பவனாக வளர்வதையே விரும்பினார்.

இவரைப் போலவே, இன்று ஒவ்வொரு தந்தையும் இருந்துவிட்டால் பிள்ளைகளின் வாழ்வே சொர்க்கமாகும். இந்த மண்ணிலேயே விண்ணைத் தரிசிக்கலாம்.

- சிராஜூல் ஹஸன்

இந்த வார பிரார்த்தனை

இறைவா, இறையச்சத்தை எங்களுக்கு வழங்குவாயாக. மேலும் நீ எதன் மூலம் எங்களை உன்னுடைய சுவனத்தில் சேர்ப்பாயோ அத்தகையக் கீழ்ப்படிதலை எங்களுக்கு வழங்குவாயாக!” (திர்மிதி)

Related Stories: