திருக்காளத்தி தரிசனத்தைக் காட்டிய திருக்கண்டியூர்

சாதாதாப முனிவர் என்றொரு முனிவர் இருந்தார். ஒவ்வொரு பிரதோஷத்திற்கும்  திருகாளத்தி சென்று  திருகாளத்தி நாதனை, மனம், மொழி, மெய்களால் ஒன்றுபட்டு தரிசனம் செய்து வந்தார். இதை, தன் வாழ்நாள் முழுக்க கடைபிடிக்க வேண்டும் என்பதை ஒரு கொள்கை யாகவே வைத்திருந்தார். இப்படி விடாப்பிடியாக கொள்கைகளை வைத்திருப்பவர்களுக்கு, சில சோதனைகளை இறைவன் செய்வது உண்டு. சாதாதாப முனிவர் ஒருமுறை திருக்கண்டியூர் வந்தார்.

இங்குள்ள ஈசனின் இறைவழிபாட்டில் ஆழங்கால் பட்டு, மெய்மறந்து பூஜை செய்து கொண்டிருந்தார்.

திடீரென்று நினைவுக்கு வந்தது.“ஆகா, இன்று பிரதோஷ காலம் ஆயிற்றே. காளத்திக்குச் செல்ல வேண்டுமே மறந்து விட்டோமே” என்று நினைத்த போது, பிரதோஷ காலம் முடிந்துவிட்டது. காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. மனம் துடித்தார். அப்போது திருக்கண்டியூர் இறைவன் அம்முனிவருக்குக் காட்சி தந்து, ‘‘யாம் வேறு, காளத்தி நாதன் வேறு அல்ல. ஆயினும், இப்போதே, இத்தலத்திலேயே, நீ இழந்ததாகக் கருதும் காளத்தி தரிசனத்தை காட்டி அருளுவோம்” என்று இத்தலத்திலேயே திருக்காளத்தி தரிசனத்தைக் காட்டியருளினார் என்பது வரலாறு.

இப்படி திருக்காளத்தி தரிசனத்தைக் காட்டி அருளிய திருத்தலம் தான் தஞ்சாவூர் திருவையாறு பாதையில் உள்ள திருக்கண்டியூர் பிரமசிரக் கண்டீசுவரர் கோயில் .

“சாதாதாப” முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு ‘ஆதிவில்வாரண்யம்' என்றும் பெயர்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற அற்புதமான சிவாலயமாகும். சேக்கிழார் பெருமான் பல இடங்களில் இத்தலத்தின் பெருமையைப் பாடுகின்றார்.

அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று. அட்டவீரட்டத் தலங்களுள்ளும், சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாக இத்திருத்தலம் விளங்குகிறது. சோழ நாடு காவிரி தென்கரைத் தலங் களில் அமைந்துள்ள 12வது தலம் இது. பிரம்மன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் எனப் பெயர் பெற்றது. மூலவர் சுயம்பு மூர்த்தி; பாணம் சற்று உயரமாக உள்ளது.

கல்வெட்டில், இப்பெருமான், “திருவீரட்டானத்து மகாதேவர்”, “திருக்கண்டியூர் உடைய மகாதேவர்” எனக் குறிக்கப்படுகிறார். திருஞானசம்பந்தர், திருக்கண்டியூரில் அருளியது, `வினவினேன் அறியாமையில்’ எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

அழகான தமிழ்.

வினவினேன்அறி யாமையில்லுரை

செய்ம்மினீரருள் வேண்டுவீர்

கனைவிலார்புனற் காவிரிக்கரை

மேயகண்டியூர் வீரட்டன்

தனமுனேதனக் கின்மையோதம

ராயினாரண்ட மாளத்தான்

வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ்

வையமாப்பலி தேர்ந்ததே.
 

இப்பதிகம் முழுமையும் பெருமானின் திருமேனியிற்காணும் அணிகலன்கள் பற்றியும், அவன்மேற் கொண்ட அருட்செயல்களில் சிலவற்றைப் பற்றியும் அடியவர்களிடம் அவற்றிற்கான காரணங்களை வினவுவதாக அமைந்துள்ளது. இவ்வாறான பதிகத்தை வினாவுரைப் பதிகம் என்பர்.

மேற்கு நோக்கிய இக்கோயிலில் அழகான ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால், கவசமிட்ட கொடிமரம் வரவேற் கும். நந்தி, பலிபீடங்களைக் கடந்தால்  கொடிமர விநாயகர் காட்சி தருகிறார். இடதுபுறம் முருகன் சந்நதி தனிக்கோயிலாக மண்டபத்துடன் உள்ளது. மூலவர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் மேற்குப் பார்த்த நிலையில் காட்சி தருகிறார். இத்தலத்தில் பிரமனுக்கு தனிக் கோயில் உள்ளது.

பெரிய கோயில். எல்லா தேவதைகளுக்கும் சந்நிதிகள் உண்டு. அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலத்தில்,அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களோடு காட்சி தரும் அழகு அற்புதம். சந்நதிக்கு வலதுபுறம் விநாயகர் உள்ளார். உள்வாயிலில் இடதுபுறம் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் காட்சி தருகிறார். மகாலட்சுமி சந்நதியும் உண்டு. அதன் எதிரில் நடராஜ சபையும் உள்ளது. விஷ்ணு துர்க்கை சந்நதி உள்ளது. பைரவரும், ஒரே சந்நதியில் அடுத்தடுத்து 7 விநாயகர்களும் உள்ளனர்.  

அர்த்தநாரீஸ்வர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர். சண்டேஸ்வரர் சந்நதி தனிக் கோயிலாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக பிரமன், லிங்கோத் பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன. சூரியன் வழிபட்ட தலமாதலின், மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் சூரிய ஒளி சுவாமிமீது படுகிறது. நவக்கிரக சந்நதியில் சூரியன் இரு மனைவியருடன் காட்சித் தருகிறார்.

திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்திருவிழா வில்  சுவாமி இங்கு வந்து இறங்கி, சற்று இளைப்பாறி செல்லும் அன்று தயிர்சாதம், புளியோதரை- கட்டித் தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்து வருகின்றது. இங்குள்ள இறைவனை தரிசிக்கும்போதுதிருஞானசம்பந்தரின் இந்த தேவாரப் பாடலை நினைத்துக் கொள்ளுங்கள்.

உள்ளவாறுஎனக்கு உரைசெய்மின், உயர்வு

ஆயமாதவம் பேணுவீர்,

கள்அவிழ்பொழில் சூழுங்கண்டியூர்

வீரட்டத்துஉறை காதலான்,

பிள்ளைவான்பிறை செஞ்சடைம்மிசை

வைத்ததும், பெரு நீர்ஒலி

வெள்ளம் தாங்கியது என்கொலோ,மிகு

மங்கையாள் உடன்ஆகவே.

- இப்பாடலுக்கு என்ன பொருள் தெரியுமா?

உலகில் சிறந்த பெரிய தவநெறியில் நிற்பவர்களே!  எனக்கு நீங்கள் உண்மையை உள்ளவாறு சொல்ல வேண்டும்! தேன்கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்கண்டியூரில் காட்சி தருகின்ற ஈசன் எப்படி இருக்கிறான் பாருங் கள். தனக்கு ஒப்பாரும், மிக்காருமில்லாதபடி உமாதேவியோடு வீற்றிருந்தருளுகிறான். அந்த சிவபெருமான் அழகானஇளம்பிறைச் சந்திரனைச் சிவந்த சடையின்மீது வைத்திருக்கிறானே, பெருநீர்ப் பெருக்காகிய கங்கையைச் சடையில் தாங்கி இருக்கிறானே என்ன காரணம்? சொல்லுங்கள்.

இங்குள்ள ஈசனைப் பார்க்கின்ற பொழுது நமக்கும் இப்படிக்  கேட்கத்தான் தோன்றும். இத்தலத்திற்கு பக்கத்திலேயே திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் இருக்கிறார். இருவரையும் தரிசித்து விட்டு வரலாமே. இரண்டு தலங்களுமே தோஷங்களை நீக்கும் தலங்கள்தான். அவசியம் ஒரு முறை சென்று வாருங்கள். இத்தலம் தஞ்சாவூர், திருவையாறு பாதையில் அமைந்துள்ளது.

தொகுப்பு: சுதர்சன்

Related Stories: