ஜயத்ரதன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே, ஒவ்வொரு வகையில் மனித குலத்திற்குப் பாடம் புகட்டக் கூடியவை. வியாசர், ஏதோ போகிற போக்கில் பக்கங்களை நிரப்புவதற்காக எழுதிவைக்க வில்லை. அந்த வகையில், அவர் படைத்த `ஜயத்ரதன்’ எனும் கதாபாத்திரத்தைப் பற்றிய தகவல்கள்!ஜயத்ரதன்; துரியோதனன் முதலான நூறு பேர்களுக்கும் ஒரே தங்கையான துச்சலையின் கணவன். சிந்து தேச மன்னரான விருத்தக்ஷத்ரன் என்பவரின் மகன். என்ன இருந்து என்ன செய்ய? மகாபாரதயுத்தம் தொடங்குவதற்கு முன்பே, முறையற்ற செயலில் ஈடுபட்டு, பீம - அர்ஜுனர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு, தர்மர் கருணையால் உயிர் பிழைக்க நேர்ந்தது.

பஞ்ச பாண்டவர்களும் திரௌ பதியும் வனவாசம் என்ற பெயரில், காட்டில் வசித்த காலம். அவர்கள் இருந்த காட்டில் ஜயத்ரதனுக்குக் கெட்டநேரம் ஆரம்பமானது. ஜயத்ரதன் சால்வ தேசத்தை நோக்கிக் காட்டுவழியாக, போய்க்கொண்டிருந்தான். வழியில் ஓர் ஆசிரமத்தின் வாசலில் ஒரு பெண் நிற்பதைக் கண்டான். உடனே, அவள் யாரென்று தகவல் அறிந்து வரும்படி ஒருவனை ஏவ, அவனும் சென்று வந்து, ‘‘ஆசிரமத்தின் வாசலில் நிற்பவள் திரௌபதி’’ என்றான். அதைக் கேட்ட ஜயத்ரதன், ஆறு வீரர்களை அழைத்துக்கொண்டு திரௌபதி இருந்த ஆசிரமத்திற்குப் சென்றான்.

சென்றவன் தன் எண்ணத்தை, அப்படியே திரௌபதியிடம் வெளிப்படுத்தினான். ‘‘திரௌபதி! படித்த பெண்கள் பணக்காரனைத்தான் ஏற்பார்கள்; ஏற்க வேண்டும். அவனிடம் பணம் குறைந்தால், அவனை விட்டுவிட்டு, வேறொரு பணக்காரனை அடைய வேண்டும். உன் பஞ்ச பாண்டவர்கள் அனைத்தையும் இழந்து, காட்டில் வசிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். அவர்களை விட்டுவிடு! என்னை உன் கணவனாக ஏற்றுக்கொள்! ராணியாக இருப்பாய்’’ என்றெல்லாம் ஆசை வார்த்தை காட்டிப் பேசினான்.

தன் எண்ணம் நிறைவேற வேண்டும் என்பதற்காக, ஆசையைத் தூண்டும் விதமாக, எப்படியெல்லாம் மனிதன் பேசுவான் என்பதைப் பாடம் நடத்து கிறார் வியாசர். படித்த பெண்கள், கணவனிடம் பணம் இல்லையென்றால் அவனை விட்டுவிட்டு, வேறு ஒருவனை மணக்க வேண்டுமாம்; அவனிடம் பணம் இல்லையென்றால், அவனையும் விட்டுவிட வேண்டுமாம். ஆகா!ஆகா! அற்புதமான ‘ஜயத்ரத உபதேசம்’!என்னதான் ஆசையைத் தூண்டும் விதமாக ஜயத்ரதன் பேசினாலும், திரௌபதி எச்சரிக்கையாகவே இருந்தாள். இப்படி நேரிடையாக வந்து முறைதவறிப் பேசுபவன், எதை வேண்டுமானாலும் செய்வான். இப்படிப்பட்டவன் எதற்கும் துணிந்தவனாக இருப்பான் என்பதால், திரௌபதி ஜயத்ரதனுக்குப் புத்திமதி சொல்லத் தொடங்கினாள்.

வெளியே காட்டிற்குள் உணவு முதலானவைகளைத் தேடிப் போயிருக்கும் பாண்டவர்கள் அதற்குள் வந்துவிட மாட்டார்களா, என்ற எண்ணத்திலேயே திரௌபதி பேசத் தொடங்கினாள். ‘‘முட்டாளே! பாண்டவர்களைப் பற்றி உனக்குத் தெரியாதா? அவர்களைப் பார்த்தாலே போதும்; பயந்துபோய், நீயாகவே உயிரை விட்டுவிடுவாய். பேச்சா பேசுகிறாய்?’’ என்று பலவிதமாகவும் இடித்துப் பேசினாள் திரௌபதி. அவள் பேசும் எதையும் ஏற்க, ஜயத்ரதன் தயாராக இல்லை. வலுக்கட்டாயமாகத் திரௌபதியுடன் தேரில் ஏறி, வேகமாக ஓட்டத் தொடங்கினான். திரௌபதி அலறினாள்.

அவள் அலறினாள் ஆயிற்றா? திரௌபதியுடன் தேரில் ஏறிப் போய்விட்டான் ஜயத்ரதன். தகவல் அறிந்து ஓடி வந்தார்கள் பாண்டவர்கள். ஜயத்ரதனுடன் வந்த படைவீரர்கள் அனைவரும் கொல்லப் பட்டார்கள். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ஜயத்ரதன், திரௌபதியை விட்டுவிட்டு, ஒரே ஓட்டமாக ஓடினான். திரௌபதியைத் தர்மரிடம் ஒப்படைத்துவிட்டு, பீமனும் அர்ஜுனனும் ஓடிச் சென்று, ஜயத்ரதனைப் பிடித்தார்கள். கோபம் தாங்காத பீமனோ, ஜயத்ரதனைத் தூக்கிப் போட்டு மிதித்தான். அடித்து, உதைத்து எனப் பலவாறாகவும் துன்புறுத்தினான். ‘‘விடு! விடு! அவனைக் கொன்றுவிடாதே!’’ எனத் தடுத்தான் அர்ஜுனன்.

பீமன் தன் கோபத்தை வேறு விதமாக வெளிப் படுத்தினான். பிறை நிலவு போன்ற ஓர் அம்பால், ஜயத்ரதன் தலையில் ஐந்து குடுமிகளை உண்டாக்கினான். அது மட்டுமல்ல! ‘‘ஜயத்ரதா! இனிமேல் நீ, சபைகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் ‘பாண்டவர்களின் அடிமை நான்’ என்று சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் உயிரோடு இருக்க மாட்டாய்’’ என்று மிரட்டினான் பீமன்.

உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் ‘‘அப்படியே செய்கிறேன்’’ என்றான் ஜயத்ரதன். அவனைக் கட்டி இழுத்து வந்து, தர்மரின் முன் நிறுத்தினான் பீமன். தர்மரைப் பார்த்த ஜயத்ரதன் அவருக்கு நமஸ்காரம் செய்து, ‘‘நான் பாண்டவர்களின் அடிமை’’ என்றான் பரிதாபமாக. அவனை மன்னித்த தர்மர், ‘‘அற்பனே! அறிவு கெட்டவனே! இனிமேல் இப்படிச் செய்யாதே! உன்னை அடிமைத் தளையில் இருந்து விடுதலை செய்கிறேன். போ!’’ என்று சொல்லி வழிஅனுப்பிவைத்தார்.

மிகுந்த மன வருத்தத்துடன் அவமானத்தால் தலைகுனிந்தபடியே, அங்கிருந்து புறப்பட்டான் ஜயத்ரதன். புறப்பட்டவன் நேரே, கங்கை உற்பத்தியாகும் இடத்திற்குச் சென்றான். சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் செய்யத் தொடங்கினான். பொறி - புலன்களைத் தன் வசப்படுத்தி, பசி - தாகம் என்னும் அனைத்தையும் துறந்து தவம்புரிந்தான். உடம்பு இளைத்துப்போய் நரம்புகள் வெளியே தெரியும்படியாகத் தவம்புரிந்தான். பழைமையான வேத மந்திரத்தை உச்சரித்துச் சிவபெருமானை நோக்கித் தவம்புரிந்தான்.

ஜயத்ரதனின் கடுமையான தவம், சிவபெருமானை அவன் முன்னால் நிறுத்தியது. தவம் செய்யும்போது, மனத்தைத் தன் வசப்படுத்தியிருந்த ஜயத்ரதன், சிவபெருமானிடம் வரம் கேட்கும்போது, அதை முழுவதுமாகப் பாண்டவர்கள் பக்கம் திருப்பினான். ‘‘ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும் ஜோதியே! பாண்டவர்கள் அனைவரையும் நான், போரில் வெல்ல வேண்டும்’’ என வரம் கேட்டான்.

சிவபெருமான் மறுத்தார்; ‘‘நர-நாராயணர்களான அர்ஜுனனையும் கண்ணனையும் உன்னால் வெல்ல முடியாது. பாண்டவர்களில் அர்ஜுனன் ஒருவனைத் தவிர, மற்ற பாண்டவர்களை ஒரே ஒரு நாள் தடுப்பாய் நீ! உன் விருப்பப்படி அந்த வரத்தைத் தந்தேன்’’ என்ற சிவபெருமான் அவன் பார்வையில் இருந்து மறைந்தார். முழுமையாக அணைக்கப்படாத தீயும், முழுமையாக ஒழிக்கப்படாத பகையும், எந்த நேரத்திலும் முன்பை விட மிகுந்த பலத்துடன் எழுந்து, அழித்துவிடும். ஜயத் ரதன் விஷயத்தில் இது உண்மையானது.

பாண்டவர்களால், ‘போனால் போகட்டும்’ என்று உயிருடன் விடப்பட்ட ஜயத் ரதன், பாண்டவர்களுக்குப் பெரும் தீங்கைச் செய்தான். ஆம்! சிவபெருமானிடம் இருந்து பெற்ற இந்தப்பெரும் வரத்தால், மாபெரும் வீரனான அபிமன்யுவின் முடிவிற்கு அடிப்படைக் காரணமானான் ஜயத்ரதன். மகாபாரத யுத்தம் தொடங்கியது. கௌரவர்கள் பக்கம் முதல் பத்து நாட்கள் தலைமை ஏற்று நடத்திய பீஷ்மருக்குப் பிறகு, துரோணர் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

துரோணரின் தலைமையில் கௌரவர்கள் போர்புரிந்த வேளையில், சமசப்தகர்கள் என்பவர்கள் அர்ஜுனனைப் போருக்கு அழைத்தார்கள். அர்ஜுனனும், கண்ணனும் அங்கு சென்றுவிட்டார்கள். அந்த நேரத்தில் துரோணர் பத்ம வியூகம் வகுத்து, பாண்டவர்களுக்குப் பெருத்த சேதத்தை உண்டாக்கினார். அதைக் கண்ட தர்மர், அபிமன்யுவை நெருங்கி, ‘‘அப்பா! அபிமன்யு! அர்ஜுனன் இங்கு இல்லாத இந்த நேரத்தில் ஏற்பட்டுள்ள இத்துயரில் இருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டியவன் நீ தான். போ! போய் அந்தத் துரோணரின் பத்ம வியூகத்தை உடை!’’ என்றார்.

அபிமன்யு நாகரிகமாக மறுத்தான். ‘‘துரோணரின் இந்த வலுவான வியூகத்தை எப்படி உடைப்பது; எப்படி அழிப்பது என்பவைகளை எல்லாம், என் தந்தை அர்ஜுனன் எனக்குச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார். ஆனால், எதிர்பாராமல் ஓர் ஆபத்து நேரிட்டால் என்னால் வெளியே வர தெரியாது எனக்கு’’ என்றான். அதைக்கேட்ட தர்மர் - பீமன் முதலானவர்கள் எல்லாம், ‘‘அபிமன்யு! நீ வியூகத்தை உடைத்து விடு! அது போதும். நாங்கள் அனைவரும் உன்னைப் பின் தொடர்ந்து வந்து, வியூகம் மறுபடியும் ஒன்றுசேராதபடிச் சிதறடிப்போம். தைரியமாகப் போ! வியூகத்தை உடை! நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என்றார்கள்.

வேறு வழியற்ற நிலையில், அவர்களின் வார்த்தைகளை நம்பிய அபிமன்யு, துரோணரின் வியூகத்தை உடைத்து உள்ளே புகுந்தான். அவனைப் பின்தொடர்ந்து, மற்ற பாண்டவர்களும் வீரர்களும் ஓடினார்கள். எதிர்பாராமல் வியூகம் உடைக்கப்பட்டு, பாண்டவர்கள் ஆவேசமாக ஓடி வருவதைக்கண்ட கௌர வீரர்கள், பயந்துபோய் அப்படியே திரும்பி ஓடினார்கள்.

அந்த நேரத்தில், ஜயத்ரதன் அங்கு வந்தான். சிவபெருமானிடம் இருந்து பெற்ற வரபலத்தால், அம்புகளை வாரி இறைத்து, பாண்டவர்கள் உட்பட அனைவரையும் தடுத்து நிறுத்தினான். பிறகு என்ன? பலம் மிகுந்த பாண்டவர்களை ஜயத்ரதன் தடுத்து நிறுத்திய அந்தச்செயலால், வியூகத்தின் உள்ளே தனியாக அகப்பட்ட அபிமன்யு, மோசமான முறையில் கொல்லப்பட்டான். பாண்டவர்கள் துடித்தார்கள். விவரம் அறிந்த அர்ஜுனன் கொதித்தான். ‘‘நாளை மாலை சூரியன் மறைவதற்குள் ஜயத்ரதனைக் கொல்வேன். இது சத்தியம்! இல்லாவிட்டால், தீயில் புகுந்து இறப்பேன்’’ எனச் சபதம் செய்தான் அர்ஜுனன். அதைக் கேட்ட கண்ணன் அப்போதே, தன் பாஞ்சஜன்யம் எனும் சங்கை முழங்கினார்.

அர்ஜுனனின் சபதத்தை அறிந்த ஜயத்ரதன் நடுங்கினான். அவனுக்குத் தைரியம் சொன்ன துரோணர், துரியோ தனன் முதலானவர்கள், ஜயத்ரதனின் பாதுகாப்பை உறுதிசெய்தார்கள். இதன் பிறகு, அர்ஜுனனின் சபதத்தை நிறைவேற்றுவதற்காக  கண்ணன், அர்ஜுனனை அழைத்துக்கொண்டு கைலாயம் சென்று, சிவபெருமானைத் தரிசித்துத் துதித்துப் பாசுபதம் எனும் அஸ்திரம் பெற்றுத் திரும்பினார். இத்தகவல்களை வியாசர் விரிவாக ஏராளமான சுலோகங்களில் - பாடல்களில் விவரித்துள்ளார்.

துரோணர், பெருமளவில் சகட வியூகம் வகுத்தார். அதன் முக்கியமான இடங்களிலும் முன்னணியிலும் மாவீரர்கள் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் ‘சூசி’ (ஊசி) வியூகம் அமைத்து, அங்கே மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருந்தான் ஜயத்ரதன். அர்ஜுனன் யுத்தகளத்தில் நுழைந்தான்; மிகுந்த வெறியோடு ஒருசில நிமிடங்களில், துரோணரின் வியூகத்தை உடைத்து உள்ளே புகுந்தான். பெரும்பெரும் வீரர்கள் எல்லாம் கொல்லப்பட்டார்கள்.

அதற்காக  துரோணரின் தலைமையில் இருந்த துரியோதனன், கர்ணன் முதலானவர்களும் அசரவில்லை. கடுமையாகப் போரிட்டார்கள். சூரியன் மேற்குத் திசையில் சாயத் தொடங்கியது. துரியோதனன் கர்ணனை நெருங்கி, ‘‘நண்பா! இன்னும் சற்று நேரம்தான். விடாதே! உன் பலம் முழுவதையும் காட்டி அர்ஜுனனைத் தடுத்து நிறுத்து! சூரியன் மறையும்வரை ஜயத்ரதனைக் காப்பாற்றிவிட்டால், தன் சபதம் நிறைவேறாததால் அர்ஜுனன் தீயில் விழுந்து இறந்து விடுவான். பிறகென்ன? பாண்டவர்களுக்கு அஸ்தமனம்தான். ஆகவே இன்னும் சற்றுநேரம் சூரிய அஸ்தமனம் வரை அர்ஜுனனைத் தடுத்து நிறுத்து!’’ என வேண்டினான்.

அர்ஜுனனோ தொலைதூரத்தில் தெரிந்த பன்றிக்கொடியை அடையாளம் வைத்து, ஜயத்ரதனின் இருப்பிடத்தை அறிந்துகொண்டான். வாயைப்பிளந்து கொண்டு அலையும் யமனைப்போல, ஜயத்ரதன் இருந்த இடத்திற்கு விரைந்தான். தன்னை நோக்கி விரைந்துவரும் அர்ஜுனனைக் கண்ட ஜயத்ரதன், அர்ஜுனன் மீதும் கண்ணன் மீதும் அம்புகளை ஏவி அடித்தான்.

கோபம் தாங்காத அர்ஜுனன் ஜயத்ரதனின் கொடியை அறுத்துத் தள்ளியதுடன், அவன் தேரோட்டியையும் கொன்றான். கௌரவ வீரர்கள் ஏராளமானோர் ஜயத்ரதனைச் சூழ்ந்து பாதுகாப்பாக நின்று, அர்ஜுனனைத் தடுத்துப் போரிட்டார்கள். அர்ஜுனனோ சூரியனைப் பார்ப்பதும் ஜயத்ரதனின் இருப்பிடத்தை நோக்குவதுமாகவே இருந்தான்.

பார்த்தார் கிருஷ்ண பகவான்; ‘‘அர்ஜுனா! ஏதாவது செய்தாலொழிய ஜயத்ரதனைக் கொல்லமுடியாது. சூரியனை மறைக்கும் விஷயத்தில், அதற்குண்டான வழியைச் செய்யப்போகிறேன் நான். அதைப்பார்த்து ஜயத்ரதன், ‘சூரியன் மறைந்து விட்டான். அர்ஜுனன் சபதம் பொய்யாகிவிட்டது. அழிந்தான் அர்ஜுனன்’ என்று மகிழ்ந்து வெளிப்படுவான். தன்னைக் காத்துக் கொள்ள சக்தியற்றவன் ஆவான். அப்போது கொல் அவனை!’’ என்றார் கிருஷ்ண பகவான்.

சொன்னது மட்டுமல்ல; சக்கராயுதத்தை ஏவி சூரியனை மறைக்கவும் செய்தார் கண்ணன். பகவான் பக்தனுக்காக - பார்த்தனுக்காகச்செய்த இந்நிகழ்வை, அருணகிரிநாதர் தான் பாடிய `முத்தைத்தரு’ எனும் முதல் திருப்புகழிலேயே விவரிக்கிறார். ‘பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக’ எனச் சக்கராயுதத்தால் சூரியனை மறைத்ததைச் சொல்லி, ‘பத்தர்க்கிர தத்தைக்கடவிய பச்சைப்புயல்’ எனப் பகவான் தேரோட்டியதையும் சொல்லியிருக்கிறார்.கண்ணன் இவ்வாறு சக்கராயுதத்தை ஏவிச் சூரியனை மறைத்ததும், இருள் சூழத் தொடங்கியது.

அதைக் கண்டதும் பாண்டவ வீரர்கள் அனைவரும் மிகுந்த துயரத்தை அடைந்தார்கள். கௌரவ சேனையோ, ‘‘ஹ...அழிந்தான் அர்ஜுனன்’’ என்று மிகுந்த மகிழ்ச்சியோடு, தலையைத்தூக்கிப் பார்த்தார்கள். ஜயத்ரதனும் தலையைத் தூக்கிப் பார்த்தான். அதைக்கண்ட கண்ணன், ‘‘அர்ஜுனா! அதோ பார்! ஜயத்ரதன் தலையைத்தூக்கிப் பார்க்கிறான். அம்பை எடுத்து அவன் தலையை அரிந்து - அறுத்து விடு!’’ என்றார். அர்ஜுனனும் உடனே அம்பை எடுத்து ஜயத்ரதன் தலையை அறுத்தான். அது கீழே விழுவதற்குள், ‘‘அர்ஜுனா! அந்த ஜயத்ரதன் தலை கீழே விழாதபடி அம்புகளால் தூக்கு!’’ என்றார். அர்ஜுனன் அவ்வாறே செய்தான். அம்புகளை ஏவி, ஜயத்ரதன் தலையைத் தட்டிக் கொண்டு போனான்.

காரணத்தைச் சொல்லத் தொடங்கினார் கண்ணன். ‘‘அர்ஜுனா! இந்த ஜயத்ரதனின் தந்தை, `என் மகன் தலையை எவன் கீழே தள்ளுவானோ, அவன் இறக்க வேண்டும்’ என,  வரம் வாங்கி இருக்கிறார். அவர் இப்போது இந்த யுத்தக் களத்திற்கு வெளியே, தவம்செய்துகொண்டிருக்கிறார். அவர் மடியில் தள்ளு இந்தத் தலையை’’ என்றார் கண்ணன். அதைக் கேட்ட அர்ஜுனன், அம்புகளாலேயே ஜயத்ரதன் தலையை அடித்துக் கொண்டுபோய், தவம்செய்து கொண்டிருந்த ஜயத்ரதன் தந்தையின் மடியில் தள்ளினான்.

அவர் எழுந்ததும் மடியிலிருந்த தலை கீழே விழ, அவர் வாங்கிய வரத்தின்படி அவரே இறந்தார். ஜயத்ரதன் தலை துண்டாடப்பட்டதையும், அவன் தந்தை இறந்ததையும் கண்ட துரியோதனன் முதலானோர் அதிர்ச்சி அடைந்தார்கள். அதே சமயம் கண்ணன், சக்கராயுதத்தை விலக்கிக்கொள்ள, சூரியன் வெளிப்பட்டு ஔி வெள்ளம் பளிச்சிட்டது.

விவரம் அறிந்த பாண்டவ வீரர்கள், வெற்றிச்சங்கம் முழங்க, கெளரவர்களோ, ‘‘இது எல்லாம் கண்ணன் செய்த வேலை” என்று சொல்லி வருந்தினார்கள். வேறு என்ன செய்யமுடியும்? உயர்ந்த இடத்தில் இருந்தும், காட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் முறைகேடான நடவடிக்கைகளில் இறங்கிய மகன் - ஜயத்ரதன்; மகன் தலையைக் கீழே  தள்ளுபவன் இறக்க வேண்டும் என விபரீதமான வரத்தை வாங்கி, அதற்குத் தானே பலியான தந்தை; என இருவர் மூலமாகவும் பலவிதமான பாடங்களை: நடத்துகிறார் வியாசர்.

- பி.என்.பரசுராமன்

Related Stories: