நாடெங்கிலும் நவராத்திரி

* சக்திபீடங்களில், மணிகர்ணிகா பீடமாகத் திகழ்வது காசி. தட்ச யாகத்தின் போது, கோபமடைந்த சிவன், அம்பாளின் உடலைத் தூக்கி ஆடும் போது, மணிகர்ணிகை என்னும் அம்பிகையின் குண்டலம் விழுந்த தலம் இது. கங்கைக்கு நிகரான நதியும் இல்லை, காசிக்கு நிகரான பதியும்(ஊர்) இல்லை என்பது சொல்வழக்கு. வாழ்வில் ஒருமுறையாவது காசிக்குச் சென்று கங்கையில் நீராடவேண்டும் என்பது லட்சியமாகப் பலருக்கும் இருக்கிறது.

மோட்சத் தலங்கள் ஏழில், காசியே முதன்மையானது. உயிர்களின் பாவத்தைப் போக்கி, பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்கும் தோணியாக விஸ்வநாதரும், விசாலாட்சியும் இங்கு வீற்றிருக்கின்றனர். காசியில், மரணம் அடையும் உயிர்களை விசாலாட்சியே தன் மடியில் கிடத்தி முந்தானையால் வீசி விடுவதாகவும், விஸ்வநாதர் அவர்களின் காதில் ராமநாமத்தை ஓதி முக்தி அளிப்பதாகவும் ஐதீகம்.

விசாலாட்சி என்பதற்கு விசாலமான கண்களைக் கொண்டவள் என்பது பொருள். தன் அகன்ற கண்களால் பக்தர்களின் மீது அருள்மழையை விசாலாட்சி பொழிகிறாள். பாசபந்தங்களைப் போக்கி, முக்திவாசலைத் திறந்து விடுகிறாள். காசியில் வாரணம், அசி என்னும் ஆறுகள் வடக்கிலும் தெற்கிலுமாக ஓடுவதால், `வாரணாசி’ என்ற பெயரும் உண்டு. கிரகங்களில் ஒருவரான புதன், காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டு கிரகபதவி அடைந்தார். இதனால், இங்கு வழிபட்டவர்களுக்குக் கல்வி வளர்ச்சி, ஞானம் கிடைக்கும். இங்குவிமரிசையாக நடக்கும் விழாக்களில் நவராத்திரி முக்கியமானது.

* திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவிலில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெறும். இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீவேதவல்லி தாயாருக்கு தனி சந்நதி இருப்பது முக்கிய அம்சமாகும். ஸ்ரீவேதவல்லி தாயார் தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருளுகிறார். முதல்நாள் தாமரை வாகனம், மறுநாள் கிளி வாகனம், மூன்றாவதுநாள் சேஷ வாகனத்தில் வரும் அவர், 4-ஆம் நாள் யாளி வாகனத்தில் எழுந்தருளுகிறார். 5-ஆம் நாள் மீண்டும்தாமரை வாகனத்திலும், 6-ஆம் நாள் குதிரை வாகனம், 7-ஆம் நாள் ஹம்ச வாகனம், 8-ஆம் நாள் யானை வாகனத்திலும் உற்சவம் காண்கிறார். 9-ஆம் நாள் வேதவல்லித் தாயார், ஸ்ரீரங்கநாதருடன் எழுந்தருளுகிறார்.

* திருமீயச்சூர் லலிதாம்பிகையின் நெய்க்குள தரிசனம் மிகப் பிரபலமானது. விஜயதசமி அன்று அம்பாள் கருவறை முன் 15 அடி நீளத்திற்கு வாழை இலை போட்டு, அதில் 4 அடி அகலம், 1 ½ அடி உயரத்திற்கு சர்க்கரைப் பொங்கலைப் பரப்புவர். அதன் நடுவே குளம்போல் அமைத்து அதனை நெய்யினால் நிரப்புவர். அதன் பின்னரே கருவறையின் திரையை விலக்குவர். அலங்கரிக்கப்பட்ட அன்னையின் திருவுருவம் நெய்க்குளத்தில் அதி அற்புதமாகப் பிரதிபலிக்கும். இந்த நெய்க்குள தரிசனத்தினைக் காண்போருக்கு மறுபிறவியே இல்லை என்பது நம்பிக்கை.

* தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்திலுள்ள முத்தாரம்மன் சமேத ஞான மூர்த்தீஸ்வரர் ஆலய தசரா, கிராமியக் கலை விழாவாகப் புகழ்பெற்றது. குலசையில் தசரா விழா பன்னிரண்டு நாட்கள் கோலாகலமாக நடக்கும். பக்தர்கள், சுமார் ஒருமண்டலம் விரதமிருந்து ஏதேனும் ஒரு தெய்வம்போல் வேடம் அணிந்து சுவாமி ஊர்வலம் வரும்போது கூடவே வருவார்கள். காளிவேடத்தை ஆண்கள் மட்டுமே புனைவார்கள். ஊர்வலத்தில் கரகாட்டம், மயிலாட்டம், மேளம், தாளம், தாரை, தப்பட்டை, ஒயிலாட்டம் என கிராமியக் கலைகளும் இடம்பெறும். ஒவ்வொரு வருடமும் இவ்விழா கலை நயத்தோடும் மிகுந்த பக்தியுடனும் சிறப்பாக நடைபெறும்.

* திருவரங்கத்தில் மிகச் சிறப்பாக நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படுகிறது. அங்கே பெரிய அளவில் கொலு வைக்கப்படுகிறது. திருவரங்கத்தில் மகாளய அமாவாசை அன்று நவராத்திரி உற்சவம் தொடங்கிவிடும். அன்று நம்பெருமாள் புறப்பாடு கண்டருளுவார். சந்தனு மண்டபத்தில் அவருக்கு 81 கலச திருமஞ்சனம் நடைபெறும். அதற்கு அடுத்த நாள் வளர்பிறை பிரதமையில் இருந்து கோயிலில் நவராத்திரி உற்சவம் ஆரம்பமாகும்.

ஸ்ரீரங்க நாச்சியாருக்கு, கர்ப்பக்கிரகத்தில் திருமஞ்சனம் நடைபெறும். பெருமாள் எழுந்தருளும் தங்கக் குதிரைக்கும், ஸ்ரீ ரங்கநாச்சியாருக்கும் ரக் ஷாபந்தனம் நடக்கும். தோளுக்கினியானில் பிராகார வலம் வந்து நாலுகால் மண்டபத்தில் திருவாராதன வைபவங்கள் மிகச் சிறப்பாக நடக்கும். சரஸ்வதி பூஜை அன்று கொண்டாடப்படும் ஒன்பதாம் நாளில், அக்கோயிலில் உள்ள எட்டு மூர்த்திகளுக்கு திருவாராதனம் நடைபெறுவது கண் கொள்ளாக்காட்சியாகும்.

எட்டு மூர்த்திகள் யார் என்று கேட்கிறீர்களா? கருவூல நாச்சியார், நாயகர் அறை நாச்சியார், சுக்கிரவார நாச்சியார், அரவிந்த நாச்சியார், ஹயக்ரீவர், சரஸ்வதி, செங்கமல நாச்சியார், குருகூர் நாச்சியார். ஏழாம் நாள் உற்சவத்தில் ஸ்ரீரங்கநாயகியார் திருவடி சேவை சிறப்பு. சரஸ்வதி பூஜையன்று ஸ்ரீரங்கநாச்சியாருக்கு, விசேஷமான திருமஞ்சனம்   நடந்து ரக்ஷாபந்தன விசர்ஜனம் நடைபெறும். தங்கக்குதிரை வாஹனம் நம்பெருமாள் சந்நதிக்குக் கொண்டுவரப்படும். அங்கு பெருமாளுக்கும் தங்க குதிரைக்கும் ரக்ஷா பந்தனம் செய்யப்படும்.

அடுத்த நாள் விஜயதசமி காலை நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடு கண்டருளி, காட்டழகிய சிங்கர் சந்நதி சென்று அடைவார். அங்கே உபய உபசாரங்கள்  நடந்து மாலையில் குதிரை வாகனத்தில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெறும். அது முடிந்தவுடன் அடையவளைந்தான் வீதி, சாத்தார வீதி வழியாக ஆஸ்தானம் சென்று அடைவார்.

* இமயமலையில் அமைந்துள்ள குலுமணாலியில் இவ்விழா 10 நாட்கள் நடக்கும். இத்தலத்தில் அருள்புரியும் ரகுநாத் ஜீ தெய்வத்தை ஸ்ரீராமனே தன் கட்டை விரல் அளவில் செய்து கொடுத்திருப்பதாக தல வரலாறு சொல்கிறது. நவராத்திரி சமயத்தில், குலு பள்ளத்தாக்கிலுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட மலை தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து ரகுநாத் ஜீக்கு மரியாதை செய்வார்கள்.

* சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ளது ஜகதல்பூர். இத்தல நாயகி தண்டேஸ்வரி. இங்கே ஒரு நாள் அல்ல இருநாள் அல்ல எழுபத்தைந்து நாட்கள் தசரா விழாவைக் கொண்டாடுவார்கள்.

* கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மகாலட்சுமி மந்திர் என்னும் அழகிய ஆலயத்தில் சரஸ்வதி, துர்கா, மகாலட்சுமி ஆகிய மூன்று தேவிகளும் கருவறையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் நவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கும். மிகப் பெரிய அளவில் இங்கு கொலு வைக்கப்படுவதுண்டு. தினசரி இந்த கொலுவைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

* தில்லைத் திருச்சித்திர கூடத்தில், நவராத்திரி உற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அமாவாசை அன்று தாயாருக்கு லட்சார்ச்சனை தொடங்கி, இருவேளையும் நடந்து, சரஸ்வதி பூஜை அன்று மாலையோடு நிறைவுபெறும். தினந்தோறும் காலையில் தாயாருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறும். சிறப்பு அலங்காரத்தோடு தாயார் கண்ணாடி அறையில் சேவை தருவார்.

இரவு பிராகார புறப்பாடு நடந்து, பெருமாள் சந்நதியில் மாலை மாற்றுதல் நடைபெறும். பிறகு சேர்த்தி ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். மகாநவமியான சரஸ்வதி பூஜை அன்று பெருமாள் மூலவருக்கும், உற்சவருக்கும் திருமஞ்சனம் செய்யப்படும். அன்று தாயார், பெருமாள் தேவாதி தேவனோடு சேர்த்தியாக எழுந்தருளுவார். விஜய தசமியன்று பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு கண்டருளுவார். அன்று வன்னிமரத்துக்கு அம்பு போடும் சேவை நடைபெறும்.

* உடுப்பி கிருஷ்ணனுக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் மைசூர் மகாராஜா சமர்ப்பித்த பட்டுப்புடவைகளை அணிவிக்கிறார்கள்.

* ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள திருக்கூடலையாற்றூரில் நர்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சந்நதிகள் உள்ளன. இவற்றுள் ஞானசக்தி அம்மன்சந்நதியில் குங்குமமும்; பராசக்தி அம்மன் சந்நதியில் விபூதியும் பிரசாதமாகத் தரப்படுவது வித்தியாசமானது.

* இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி, ஆதிசக்தி, பராசக்தி, குடிலாசக்தி என ஆறு அம்சங்களையும் ஒருங்கே கொண்டு தேவி அருள்பாலிக்கும் தலங்கள் ஒன்பது. அவை காஞ்சி காமாட்சி, ஸ்ரீசைலம் பிரமராம்பாள் தேவி, கோல்ஹாப்பூர் மகாலட்சுமி, உஜ்ஜயினி காளிகாதேவி, கயா மங்களாதேவி, அலகாபாத் அலோபிதேவி, உத்தரப்பிரதேசம் விந்தியவாசினி, நேபாளம் குஹ்யகேஸ்வரி, வாரணாசி விசாலாட்சி.

* புரி ஜெகன்நாதர் ஆலயத்தில் நவராத்திரியை, 16 நாட்கள் கொண்டாடுகின்றனர். ஒன்பதாம் நாள், ஆயுதபூஜையன்று ஜெகன்நாதரின் சங்கு சக்கரங்களுக்கு சிறப்புப் பூஜை நடைபெறும்.

* கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில், தேவநாதசுவாமி கோயில் உள்ளது. 108 வைணவத் தலங்களில் முதன்மை பெற்ற இக்கோயிலில், தேவநாத பெருமாள் நின்ற கோலத்தில்  காட்சி தருகிறார். கோயிலில் பிரதானமாக பூஜிக்கப்படும் தாயார் அம்புருவர வாசினி, ஹேமாம்புஜநாயகி, தரங்கமுகநந்தினி, செங்கமலத் தாயார், அலைவாய் உகந்த மகள் முதலிய பல திருநாமங்களுடன் விளங்குகிறார். இந்தத் தாயாருக்கு புரட்டாசி நவராத்திரி உற்சவம் வெகு கோலாகலமாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் தாயாரின் புறப்பாடு வெகு அற்புதமாக இருக்கும்.

* திருமலையில் நவராத்திரியை ஒட்டி, நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. லட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அடையும் பொருட்டு, ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதையுண்டு. அதன் காரணமாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதாகவும் கூற்று உள்ளது.

* கும்பகோணம் நாச்சியார் கோயில், வஞ்சுளவல்லித் தாயாருக்கு நவராத்திரி  நாட்களில் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து அதிமதுர பாயசமும் சர்க்கரைப்  பொங்கலும் நிவேதித்தால், சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

* கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சக்கரப்பள்ளி, அரிமங்கை, சூலமங்கலம், நந்தி மங்கலம், பசுபதிமங்கலம், தாழை மங்கலம், புள்ளமங்கலம் ஆகிய ஏழு ஊர்களையும் சப்தமங்கலத் தலங்கள் என்று கூறுவர். இத்தலங்களில் முறையே அபிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டியாக அம்பிகை பூஜை செய்ததாகக் கூறுகின்றனர்.

தொகுப்பு - குடந்தை நடேசன், ஸ்ரீராம்

Related Stories: