தினசரி இந்த இரண்டு விஷயங்களை மறக்க வேண்டாம்!

ஒருவன் வாழ்க்கையில் தாயை வணங்க வேண்டும். படைத்த இறைவனை வணங்க வேண்டும். இருவருக்கும் ஒரே பெயர்தான். “தாய்” ஆனால், பொருளில் வேறுபாடு உண்டு.

இறைவன், தான் ஒவ்வொருவருக்கும் துணையாக, எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால் தாயைப் படைத்தான் என்பார்கள். புத்தம் புதிதாக பூத்த மலரை விட அழகானது தாயின் அன்பு. ஒரு பெண் தாய்மை அடைந்து ஒரு குழந்தையைப் பெறுகிறாள் என்றால், அவளைப் ‘‘பெற்ற தாய்”. (Giving birth to child) என்கிறோம்.

அந்தக் குழந்தையைப் பெறுவதற்கு அவள் ஒரு கருவியாக அமைந்தாள். ஆயினும், அவளுடைய சிறப்பு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. இன்னும் சொல்லப் போனால், அவள் மூலமாக அந்தக் குழந்தை இந்த உலகத்தில் பிறந்தது. ஆனால், அந்தத் தாய் மூலம், அந்த குழந்தையைப் பிறக்க வைத்த தயாபரன் இறைவன் என்பதால் அவனையும் பெற்றதாய் (Creator) என்கிறோம். அதனால்தான், நம்முடைய சமய மரபில், தாயை இறைவனாகக் கொண்டாடினார்கள். இறைவனைத் தாயாகக் கொண்டாடினார்கள்.

“மாத்ருதேவோ பவ” என்பதுதான் முதல் மந்திரம். யார் ஒருவர், தன்னுடைய தாயை, கடைசிவரை பேணிக் காத்து வருகிறாரோ, அவர்களுக்கு தெய்வத்தின் அருள் தானே கிடைத்துவிடுகிறது. சொர்க்கமே அவர்கள் காலடியில் இருக்கிறது. ஒருவேளை, அவர்களால் கோயிலுக்குச் செல்ல முடியாவிட்டாலும்கூட, தெய்வ தரிசனம் அவர்கள் வீடு தேடி வந்து விடுகிறது என்பது நிதர்சனமான உண்மை. ஒருவர், தன்னுடைய பெரும் செல்வத்தை செலவழித்து, ஆயிரம் பேருக்கு அன்னதானம் போட்டார்.

 

ஊர் அவரை போற்றியது. ஆனால், விவரம் தெரிந்த ஒருவர் சொன்னார். ‘‘அவர் செய்தது நல்ல காரியம்தான். ஆனாலும், அவர் தன்னுடைய தாயைப் புறக்கணித்து விட்டாரே. தன்னைப் பெற்ற தாயை வீட்டில் வைத்து பராமரிக்காமல் கைவிட்டுவிட்டாரே. இப்பொழுது, இவர் எத்தனை பெரிய தர்மம் செய்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே” என்றார்.

பிராயச்சித்தமில்லாத ஒரு பாவத்தைச் செய்து விட்டு, புண்ணியத்தை எப்படித் தேட முடியும்? எங்கோ தொலைத்து விட்டு எங்கோ தேடினால், எது கிடைக்கும்? உண்மை அதுதான். தர்மம் சூட்சுமமானது. தாய்மை என்பது ஒரு தவம். குழந்தை அழுகிறது. பால் கொடுக்க வேண்டுமே என்கிற நினைப்பு ஒவ்வொரு தாய்க்கும் உள்ளுணர்வாகவே இருக்கும்.

வெறும் சத்துக்காக மட்டுமே குழந்தைக்கு தாய்மார்கள் பால் புகட்டுவதில்லை. தாய்ப்பால் கொடுக்கும் பொழுது, மார்போடு அணைத்துக் கொள்கிறாள். அப்பொழுது குழந்தைக்கு இரண்டு விஷயங்கள் கிடைக்கின்றன. ஒன்று தாயின் பரிவு, இதமான அரவணைப்பால் கிடைக்கிறது. தாயின் பாதுகாப்பு தனக்கு அரணாக இருக்கிறது என்ற உணர்வு குழந்தைக்கு மனவியல் ரீதியான நிம்மதியைத் தருகிறது.

எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும், வீட்டிலே தனக்காக சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடாமல் காத்திருப்பாள். அன்னை என்கின்ற நம்பிக்கை ஒருவருக்கு இருப்பதால், எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, ராத்திரி 11 மணிக்கு வந்து கதவைத் தட்டினாலும் காத்திருந்து பசியாற்றுகிறாள். அங்கே உணவு மட்டும் பரிமாறப்படுவதில்லை. அன்பும் பரிமாறப்படுகிறது. எவ்வளவு பெரிய தவறு செய்தவனாக இருந்தாலும்கூட, தாயின் பரிவு ஒருவருக்கு கிடைக்காமல் போவது இல்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு அப்படி கிடைக்காமல் இருந்தால், அவர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.

இதிலே உணரவேண்டிய மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், நமக்கு நமது தாய் எப்படி அதிர்ஷ்டமோ, அப்படி நமது பிள்ளைகளுக்கு நாம் அதிர்ஷ்டமாக இருக்க வேண்டும். “எப்படி இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றார்கள் என்கின்ற புகழ் இருக்க வேண்டுமே தவிர, ஏன் இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றார்கள்” என்கின்ற பழிச்சொல் இருக்கக்கூடாது.

இராமனைப் பெறுவதற்கு எண்ணிலா வருடம் தசரதன் காத்திருந்தான். சிறந்த யாகங்கள் பல செய்தான். அப்படி தவமிருந்து பெற்ற பிள்ளைதான் இராமன். இராமனைப் பிள்ளையாக பெற்றதால், தசரதனுக்கு பெருமை கிடைத்தது. நாம் பிறந்ததும் நமக்கு பிறப்பதும் கொடுப்பினை. கருமமும் கரும பலனும். இந்தப்

பிறவியிலேயே கிடைத்த அபூர்வமான ஒரு உறவு தாய் என்கின்ற உறவு. அந்தத் தாயைக் கொடுத்த தாய் இறைவன்.

திருச்சியில் உள்ள ஈசனுக்கு தாயுமானவன் என்ற திருப்பெயர். தாய்மையின் அன்பையும், கடமையையும், தானே தரணிக்குக் காட்டியவன் என்பதால், அவனுக்கு தாயுமானவன் என்று பெயர். மகள் பிரசவ வலியில் துடிக்கும் பொழுது, காவிரியில் வெள்ளம் ஓட, குறித்த நேரத்தில் தாய் வராத பொழுது, அந்தத் தாயை விட மேலாக, அந்தப் பெண்ணுக்கு அருகில் இருந்து பிரசவம் பார்த்தவன் அந்த ஈசன் என்பதால், தாயுமானவன் என்று போற்றுகிறார்கள்.

அதாவது, தாயும் ஆன இறைவனே தாயுமானவர். குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் தாயுமானவருக்கு வாழைத்தார் படைத்து, பாலாபிஷேகம் செய்து வழிபடுவது பக்தர்களின் வாடிக்கை. வாழையடி வாழையாகக் குடும்பம் தழைக்க வேண்டும் என்ற அடிப்படையில், வாழையைக் கருவறையில் வைத்துப் பூஜித்து, பின்பு அதைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.

இங்கே மட்டுவார்குழலி அம்பாள் தனிச் சந்நதியில் இருக்கிறாள். கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வந்து, இந்த அம்பிகைக்கு 21 கொழுக்கட்டை, 21 அப்பம் படைத்து, ஒரு துணியில் மஞ்சள், குங்குமம், வெற்றிலையைக் கட்டி அர்ச்சனை செய்து வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த லீலை, திருச்சி தாயுமானவர் ஆலயச் சித்திரைப் பெருவிழாவில் 5-ஆம் நாள் விழாவாக நடைபெறுகிறது.

இந்தப் பிறவியில் தாய், மகன் என்ற உறவு கொண்டு வந்த ஒரு உயிரினத்திற்கு மிகுந்த அக்கறையும் பரிவும் காட்டி வளர்க்கிறாள் என்றால், எல்லா உயிரினத்திற்கும், எல்லாப் பிறவிக்கும், எல்லா உலகங்களுக்கும் தாயான இறைவன் எப்படி எல்லாம் பரிவு கொண்டு காப்பாற்றுவான்? தாய்க்கும் தாய் அல்லவா (mother of all mothers) அந்த தயாபரன்.

ஒருவன் வாழ்க்கையில் எல்லா விதமான நன்மைகளை அடைய வேண்டும் என்று சொன்னால், அவன் இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும். இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும் என்பதுகூட முக்கியமல்ல. அந்த இரண்டு விஷயங்களை எப்படி செய்ய வேண்டும் என்பது முக்கியம்.

1) தினந்தோறும் காலையில் பெற்ற தாயை வணங்க வேண்டும்.

2) பூஜை அறைக்கு சென்று இறைவனை வணங்க வேண்டும். ஆனால் என்ன உணர்வில் வணங்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

1) பெற்ற தாயை வணங்கும் போது இறைவனாக நினைத்து வணங்க வேண்டும்.

2) பூஜை அறையில் இறைவனை வணங்குகின்ற பொழுது பெற்ற தாயாக நினைத்து வணங்க வேண்டும்.

இதை மட்டும் செய்து பாருங்கள். வாழ்க்கையின் உன்னதத் தருணங்களை நீங்கள் உணர்வீர்கள்.

தொகுப்பு : தேஜஸ்வி

Related Stories: