வழிபாடும் கடவுளின் வெளிப்பாடும்

கிறிஸ்தவ விவிலியத்தில் கடவுளின் வெளிப்பாடு விடுதலை மற்றும் சமத்துவச் சூழலில் நடைபெறுவதைக் காணலாம். விவிலியத்தில் அடங்கியுள்ள பழைய ஏற்பாட்டில் பண்டையக்கால இஸ்ரயேல் மக்கள் எகிப்தியப் பேரரசன் பார்வோனால் அடிமைப்பட்ட போது அவர்கள் வழிபடவும் நேரமின்றி ஓயாமல் உழைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்கள் விடுவிப்பாரின்றி கடவுளை நோக்கி கூக்குரலிட்டனர். அவர்களின் அபயக்குரலினை கேட்க கடவுள், பாலைநிலத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மோசேவை சந்திக்க எரிகின்ற முட்புதர் வடிவில் தோன்றினார். விடுதலைப்பணிக்கென மோசேவை ஆற்றல்படுத்தி “என் மக்கள் பாலை நிலத்தில் எனக்கு ஒரு விழா எடுக்க அவர்களைப் போகவிடு” என்று பார்வோனுக்கு ஆணையிட்டார். பல போராட்டங்களை கடந்து விடுதலை பெற்ற அடிமைகள் பாலைநிலத்தில் அவரை வழிபட்டனர்.

வழிபாடு என்பது விடுதலை, சமத்துவம், ஒற்றுமை, ஒருமனப்பாடு போன்ற உயரிய நோக்குடன் நடைபெறும்போது, கூடிவரும் மக்கள் இறை சமூகமாக மலர்கின்றன. மக்கள் வேற்றுமைகளைக் கடந்து ஒற்றுமையோடும், ஒருமனதோடும் கூடி வருதல் வழிபாட்டின் உன்னத நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறும் போது அங்கு இறைவன் எழுந்தருள்வார். “எங்கே இரண்டு பேரோ அல்லது மூன்று பேரோ என் பெயரினால் ஒன்றாகக் கூடினால் அங்கு நான் இருப்பேன்”, என்று ஆண்டவர் வாக்கு அருளியிருக்கிறார். ஆண்டவரின் பெயரினால் ஒன்று கூடும். கூடுகையில் ஏற்றத்தாழ்வு, சாதியப் பிரிவினைகள், பாலின வேறுபாடுகள் போன்றவை இருக்காது. அவ்வித கூடுகையே இறைவனின் வெளிப்பாடாக அமைகிறது.

இன்று கிறிஸ்தவ திருச்சபைகள் தங்கள் சபை கூடுதலை இவ்விதமே புரிந்து கொள்கின்றனர். கிறிஸ்தவத் திருச்சபைக்கு தலையாக உள்ளவர் ஆண்டவர் இயேசு. வேற்றுமைகளை துறந்து கூடிவரும் இறைமக்கள் ஆண்டவரின் உடல். அவ்வித ஒருமைப்பாட்டின் கூடுகையில்தான் ஒற்றுமையின் வழியே ஆண்டவர் தோன்றுகின்றார். ஆக எங்கு விடுதலை உண்டோ, எங்கு சமத்துவம் உண்டோ, எங்கு ஏற்றத்தாழ்வுகள் கலையப்படுகின்றதோ, எங்கு அன்பும் நல்லிணக்கமும் உண்டோ, அங்கே இறைவன் எழுந்தருள்கிறார். பிரம்மாண்டமான ஆலயத்தை எருசலேமில் கட்டி எழுப்பிய சாலமோன் அரசன் உணர்வதெல்லாம் கடவுள் மனிதரால் கட்டப்பட்ட ஆலயத்தினுள் அடங்கிவிட முடியாது என்பதே.

மேலும், தொழுகைக் கூடங்கள் கடவுளை தன்வயப்படுத்திவிட இயலாது என்பதே ஆகும். மாறாக கடவுள் காலங்களை கடந்து தலைமுறை தலைமுறையாய் தம் மக்களோடு பயணிக்கிறவர் என்பதைத்தான் இறைவழிபாடு உணர்த்துகிறது. சமுதாயத்தினூடே பயணிக்கும் கடவுளோடு ஓர் உடன்பயணியாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வழிபாடு உணர்த்துகிறது. உண்மை வழிபாடு ஒருவரை அநீதியின் சக்திகளோடு, தீமையின் ஆற்றலோடு, எவ்வித தயக்கமும் இன்றி எதிர்த்து நிற்க போதிக்கிறது. சக மனிதனை மறந்து கடவுளையே நினைக்கின்றேன் என்ற சிந்தையுள்ளவரது வழிபாடு ஒரு உண்மை வழிபாடாகாது. இங்கு தந்தை பெரியாரது கூற்று கவனிக்கத்தக்கது. கடவுளை நினை, உடன் மனிதரையும் நினை, மனிதனை மறந்து கடவுளை மட்டும் நினைத்தால், கடவுளை மற மனிதனை நினை என்பதாகும்.

Related Stories: