வீட்டில் செல்வம் நிலைத்திருக்க 20 வழிகள்

வீட்டில் செல்வம் நிலைத்திருக்க சில நடைமுறைகளை கடை பிடிக்க சொல்லியிருக்கிறார்கள் முன்னோர்கள். அவர்கள் சொன்னதில் சாஸ்திரமும் இருக்கிறது. மனவியலும் இருக்கிறது.மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டும் என்று சொன்னால், வீட்டில் சில பொருள்களை அவசியம் வைத்துக்கொள்ள வேண்டும். சில பொருள்களை வீட்டில் வைத்துக்கொள்ளாமல் தூக்கி எறிந்து விட வேண்டும். வைத்துக்கொள்ள வேண்டிய பொருள்களும் கூட இன்ன இடத்தில், இப்படித் தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நியதிகள் இருக்கின்றன. உதாரணமாக சிலர் வீட்டில் நுழையும் பொழுது, காலணிகளை  இரண்டு பக்கத்திலும் நிலை வாசலுக்கு நேராக தாறுமாறாகப்  போட்டிருப்பார்கள்.

ஒரு காலணி ஒரு பக்கத்தில் இருக்கும். இன்னொரு காலணி இன்னொரு பக்கத்தில் இருக்கும். உள்ளே நுழையும் போதே அதை மிதித்துக் கொண்டு செல்வது போல போட்டிருப்பார்கள். அப்படிப்  போடக்கூடாது. குறிப்பாக, தலைவாசலுக்கு நேராக காலணிகளை போடவே கூடாது. இயன்ற அளவு அது கண்ணில் படும்படியாக இருக்கக்கூடாது. அக்காலத்தில் வீடுகளில் ரேழிகளில் மறைவாக காலணி வைப்பதற்கு என்று உள்ளடங்கியது போல ஒரு தனி இட அமைப்பை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள்.

காலணிகளை வீட்டுக்கு வெளியே இயன்ற அளவு மறைவான இடத்தில் ஒழுங்காகப் போட வேண்டும். சில பொருட்களை எக்காரணத்தை முன்னிட்டும் வீட்டிலேயே வைத்துக் கொள்ளாதீர்கள். அது எதிர்மறை சக்திகளை ஆகர்ஷணம் செய்து வீட்டில் செல்வ நிலையை குறைக்கும். மனக் குழப்பத்தை ஏற்படுத்தும். முன்னேற்றத்தை

தடுக்கும்.

அப்படிப்பட்ட பொருட்களின் வரிசைதான் இது

1. உடைந்த கண்ணாடியை எப்பொழுதும் உபயோகப்படுத்தாதீர்கள். சிலர் வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி, ஓரமாக உடைந்து போயிருக்கும். “உடைந்து போனாலும் முகம் தெரிகிறதே? ஏன் புதிது வாங்கி காசு வீணாக்க வேண்டும்” என்று, உடைந்த கண்ணாடியில் முகம் பார்ப்பார்கள். சிக்கன நடவடிக்கை என்பதற்காக, உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்க வேண்டாம். அது எதிர்மறை ஆற்றலைத் தூண்டி செல்வ வளத்தை குறைக்கும்.

 

2. அதைப்போலவே மூக்குக் கண்ணாடி உடைந்து இருந்தாலும், அதை உடனே மாற்றிவிட வேண்டும்.

3. உடைந்த சீப்பில் தலை வாராதீர்கள். அதைப்போலவே அழுக்கு சீப்பில் தலை வாரக்கூடாது. இன்னொருவர் கேசம் சீப்பில் இருக்கும்பொழுது, அதே சீப்பை எடுத்து நீங்கள் பயன்படுத்தாதீர்கள். அதனால் பல துன்பங்கள் வரும்.

4. வீட்டின் ஈசான்ய பகுதியில் அதாவது வடகிழக்கு திசையில் இயன்ற அளவு குப்பைகளையோ, வேறு தூய்மையற்ற பொருளையோ போடாதீர்கள். அங்கே எந்த கனமான பொருள்களையும் வைக்காதீர்கள். இயன்ற அளவு ஈசானிய மூலையை சுத்தமாக வைத்திருக்க முயலுங்கள்.

5. கண்ணுக்குத் தெரியும் படியாக உடைந்த கட்டில் உடைந்த கம்பிகள் இவை களையெல்லாம் வீட்டில் கண்ணுக்குத் தெரியும் படியாக போட்டு வைக்காதீர்கள்.

6. எக்காரணத்தை முன்னிட்டும் உடைந்த அல்லது  நசுங்கிய பாத்திரங்களைப்  பயன்படுத்தாதீர்கள்.

7. குறிப்பாக பூஜை அறையில் பயன்படுத்தப்படும் பஞ்ச பாத்திரங்கள், பூஜைத் தட்டு, தீர்த்தம் எடுக்கும் உத்தரணி முதலிய பொருள்கள் உடைந்தும் நசுங்கியும்  இருக்கும்படியாக வைத்துக் கொள்ளாதீர்கள்.

8. தினமும் பூஜை அறையை நன்கு துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

9. பூஜை அறையில் உள்ள படங்களில் ஒட்டடை படிய விட வேண்டாம். அதோடு நீங்கள் பூஜையும் செய்தால்  அது சில எதிர்மறை விளைவுகளைத்தான் கொடுக்கும்.

10. உடைந்துபோன தூப தீப கால்களை பயன்படுத்தாதீர்கள்.  சாத்திர ரீதியாக சரியல்ல. தவிர பயன்படுத்தும்போது கைகள் சுட்டுவிடும் ஆபத்தும் இருக்கிறது.

11. இயன்ற அளவு விளக்குகளை சுத்தமாகத் துடைத்து பளிச்சென்று இருக்கும் படியாக பார்த்துக் கொள்ளவும்.

12. கிழிந்த படங்களும் உடைந்த கண்ணாடிச் சட்டங்களில் இருக்கும் படங்களையும் பூஜையறையில் வைக்க வேண்டாம்.

13. அதேபோலவே சிலர் வீட்டில் மாட்டியிருக்கும் கடிகாரத்தில் கண்ணாடி உடைந்து போயிருக்கும். கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கும் என்பதால் அதை அப்படியே விட்டுவிட வேண்டாம்.

ஒன்று, கண்ணாடியை மாற்றுங்கள். இல்லை எனில் கண்பார்வைக்கு தெரியும் படியாக  கடிகாரத்தை  மாட்டாதீர்கள்.

14. உடைந்த புகைப்படங்களை எக்காரணத்தை முன்னிட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள். அதிலிருந்து பிரதி எடுத்து வேறு படங்களை நன்றாக பிரேம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

15. நிலைவாசல் கதவின் பிடி அல்லது தாழ்ப்பாள் உடைந்துபோய் இருந்தால் உடனே மாற்றி விடுங்கள். கதவு திறக்கும் பொழுது “க்ரீச், க்ரீச்'' சத்தம் வராமல் நன்றாக எண்ணெய் போட்டு பராமரிக்கவும். கதவு திறக்கும் போது சப்தம் வருவது வீட்டின் செல்வ வளத்தை குறைக்கும்.

வீட்டில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து எப்பொழுதும் சண்டை சச்சரவுகளாக இருக்கும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

16. பழுதுபட்ட கதவுகளை பயன்படுத்த வேண்டாம்.

17. அதைப்போலவே தண்ணீர் ஒழுகுகின்ற குழாய்களை உடனடியாக மாற்றி விடவும். தண்ணீர் ஒழுகி வீணானால் தரித்திரம் வரும் என்று பெரியவர்கள் சொன்னதை மறந்துவிட வேண்டாம்.

18. சில வீட்டில் டாய்லெட் பேசின் மற்றும் வாஷ் பேசின் அழுக்கு படிந்து கறை யோடு இருக்கும். “நேரமில்லை” என்று சொல்லாமல் உடனடியாக இவற்றை சுத்தப்படுத்துங்கள். இந்த அழுக்குகள் கிருமிகளை உண்டாக்கும் அபாயத்தை கொடுக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படும். சாத்திர ரீதியாகவும் இது எதிர்மறை சக்திகளை ஏற்படுத்தும்.

19. வீட்டின் வரவேற்பறை, நிலைவாசல் பகுதிகள் இவற்றிலெல்லாம் ஒட்டடைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

20. அதுமட்டுமின்றி உடைந்த ஸ்விட்ச் பாக்ஸ், வயர்களை பயன்படுத்த வேண்டாம். அது வீட்டின் அழகை கெடுப்பது மட்டுமல்ல, ஆபத்தையும் வரவழைக்கும். சப்தமிடும் மின்விசிறிகளை பயன்படுத்த வேண்டாம்.  ஒன்று அதை உடனடியாக சரி செய்து பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் வேறு மாற்றிவிடுங்கள்.

சத்தமிடும் மின்விசிறிக்கு கீழ் நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் இருந்து பார்த்தால் உங்கள் மன ஆற்றல் குறைவதையும், உங்களை அறியாமலேயே, ஒரு எதிர்மறை சக்தி உள்ளுக்குள் பரவுவதையும், எரிச்சல், கோபம் முதலிய உணர்வுகள் ஏற்படுவதையும், மனத் தடுமாற்றத்தையும் நீங்கள் உணர முடியும்.

இயன்ற அளவு மேற்கண்ட பொருள்களை அப்புறப்படுத்தி வீட்டை தூய்மையாக வைத்துக் கொண்டால் நீங்கள் அழைக்காமலேயே, தூய்மையான இடத்தைத் தேடி மகாலட்சுமி வந்துவிடுவாள்.

உங்கள் ஆற்றல் சிறப்பாக செயலாற்றும். அதனால் வீட்டில் நிம்மதியும் செல்வ நிலையும் நிலைக்கும். செய்துதான் பாருங்களேன். செலவுகள் இல்லாத செயல்கள்தானே.

தேஜஸ்வி

Related Stories: