சிரமங்களை போக்கிடுவாள் சிவனம்மாள்

நம்ப ஊரு சாமிகள்

உசிலம்பட்டி, மதுரை

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை அன்பு, பாசம், வீரம், காதல் என அனைத்து உணர்வோட்டங்களுக்கும் பெயர்போன தூங்காநகரம் மதுரை. மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் திருமலை நாயக்கர். இவர் கி.பி 1623 முதல் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவரது காலத்தில் மதுரைக்கு மேற்கேயுள்ள உசிலம்பட்டி பகுதியில் எட்டுப் பகுதிகளை பிரித்து அதற்கு உட்பட்ட 24 உபகிராமங்களை நிர்வகிக்கவும், அக்கிராம குடிமக்களிடம் வரிவசூல் செய்து மன்னருக்கு கப்பம் கட்டவும் எட்டு ஜமீன்தார்களை நியமனம் செய்திருந்தார். அவர்களே அந்த பகுதிகளில் ஜமீனாக வலம் வந்தனர்.

அந்த வகையில் வந்த கண்டமனூர் ஜமீன்தாருக்கு பாதுகாவலனாக இருந்தவர் நல்லதேவன். இவரது பெரியம்மா மகன் நல்லதேவன்பட்டியைச் சேர்ந்த வெள்ளப்பின்னத்தேவன். இவர் வளர்த்துவந்த சேவலை, தான் தோற்றுப்போக காரணமாக இருந்தது என்றெண்ணி, வெள்ளப்பின்னத் தேவரின் சொந்தக்காரனான படிவு என்பவர், விஷம் தேய்த்த கத்தியால் கொன்று விடுகிறார்.

இதை கண்டமனூர் ஜமீனின் பாதுகாவலனான தனது தம்பி நல்லதேவனிடம் வெள்ளப்பின்னத்தேவன் கூறினார். அண்ணனுக்காக நல்லதேவன், படிவை, ஆடி 18 அன்று  விதைப்பு அன்று வயலில் வைத்து கொலை செய்தான். இது முடிந்த சில நாட்களில் நல்லதேவனின் மற்றொரு பெரியம்மா மகன் அல்லிகுண்டத்தைச் சேர்ந்த இருளப்பத்தேவனுக்காக மீண்டும் ஒரு கொலையைச் செய்தார் நல்லதேவன். இப்படி தனது அண்ணன்மார்கள் குடும்பத்துக்காக பகைவர்களை பழிதீர்த்தான்.

இதனால் நல்லதேவனுக்கு எதிராளிகள் அதிகமாகினர். வீரனாகவும், துடிப்பு மிக்க இளைஞனாகவும் விளங்கிய நல்லதேவனுக்கு வரிவசூல் பணத்தை மதுரைமன்னர் திருமலைநாயக்கருக்கு மாதாமாதம் குதிரையில் சென்று செலுத்திவரும் பணிக்கு கண்டமனூரு ஜமீன், நல்லதேவனையே நியமித்திருந்தார். ஒருநாள் பணத்தை செலுத்திவிட்டு வரும்போது, உரப்பனூரில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிவனம்மாளைக் கண்டு பிரமித்துப்போனான் நல்லதேவன். ஒவ்வொரு மாதமும் குதிரையில் வரும்போது காத்திருந்து சிவனம்மாளை சந்தித்து பேசலானான். நல்லதேவன் சிவனம்மாள் பெற்றோரிடம் பெண் கேட்டான்.

அவர்கள் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர். ஒருநாள் மன்னரிடம் வரியை செலுத்திவிட்டு வரும்போது உரப்பனூரில் வயல்பகுதியில் இருந்த சிவனம்மாளை குதிரையில் தூக்கிக்கொண்டு கண்டமனூர் சென்றுவிட்டான். இத்தகவலறிந்த உரப்பனூரிலிருந்து சிவனம்மாள் பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் திரண்டு அல்லிகுண்டம் இருளப்பத்தேவனிடம் வந்தனர். அப்போது இருளப்பத்தேவன் மற்றும் குடும்பத்தினர்கள் சிவனம்மாளை, நல்லத்தேவன் கண்கலங்காமல் காப்பாத்துவான் நீங்க கவலைப்படவேண்டாம் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

ஆண்டுகள் இரண்டு கடந்த நிலையில் கண்டமனூரில் நடைபெற்ற மிகப்பெரிய திருவிழாவில் ஜமீனின் தலைமையில் வழுக்குமரம் ஏறும் போட்டி நடைபெற்றது. அதில் ஏராளமானோர் போட்டியில் கலந்துகொண்டு மரம் ஏறமுடியாமல் தோற்றனர். நல்லதேவன் எண்ணெய் தடவிய வழுக்குமரத்தில் ஏறத்துவங்கினான். அதன் உச்சியிலுள்ள பொற்காசுகள் முடித்துள்ள துணியை எடுத்தான். அந்த நேரம் கூட்டத்தின் பின்னே இருந்த ஒருவன் ஈட்டியில் விஷம் தடவி நல்லதேவன் முதுகை நோக்கி வீசினான்.

ஈட்டி பாய்ந்த வேகத்தில் ரத்தம் பீறிட வழுக்குமரத்தின் உச்சியிலிருந்த பொற்காசுகளின் மஞ்சள்துணியை கையில் பிடித்தபடியே  கீழே விழுந்தான். விஷம் தடவிய ஈட்டி என்பதால் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து இறந்தான். இறந்த நல்லதேவன் உடலை எரிக்க ஜமீன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. சிவனம்மாள் நல்லதேவன் இறந்தபின்பு ‘‘அவரில்லாமல் என்னால் வாழமுடியாது. அவர் உடம்பில் எரியும் நெருப்பு என்னையும் எரிக்கட்டும்’’ என்றாள். இது உடன்கட்டை ஏறுவது. அவ்வளவு சுலபமில்லை. என்றனர்.

அப்போது தான் குழந்தை முதல் குமரி ஆனது வரை அனுதினமும் வணங்கிவந்த குலதெய்வம் சின்னக்கருப்பசாமியை வேண்டினாள் சிவனம்மாள். ‘‘ஏம்மா, உன் தெய்வம் சக்தி உள்ளதா இருந்தா, நீ போய் மதுரை மன்னரிடம் சென்று உடன்கட்டை ஏற அனுமதி பெற்று, அதற்கான தீக்கங்குகள் வாங்கி வரவேண்டும்.

அதுவும் உனது சேலை முந்தானையில் கொண்டு வரவேண்டும் முடியுமா’’ என்றனர் ஜமீனும், ஊர்ப் பெரியவர்களும்.

சரியெனக்கூறி சிவனம்மாள் மதுரை மன்னரைக் காணச் சென்றாள். தனது அண்ணனை துணைக்கு அழைக்க (தெய்வம்) சின்னக்கருப்பசாமியை வேண்டிக்கொண்டே சென்றாள். அப்போது சிவனம்மாள் அண்ணன் உருவத்தில் சின்னக்கருப்பசாமி சிவனம்மாளுக்குத் துணைக்குச் சென்றது. மதுரை மன்னரிடம் அனுமதி பெற்றாள். தீக்கங்குகள் கேட்டாள், சேலை தீப்பற்றுமே என்றனர். ‘‘என் கணவன் மீது நான்கொண்ட பதிபக்தி உண்மையானால், நான் உத்தமி என்பது உண்மையானால், என் குலசாமி சின்னக் கருப்பன் சக்தி உள்ள தெய்வம்தான் என்பது உண்மையானால் சேலையில் போட்ட தீக் கங்கு, என் உடல் மீது பற்றும் வரை படராமலும், அணையாமலும் இருக்கும். போடுங்கள் தீக்கங்கை’’ என்றாள்.

அரண்மனை ஊழியர் தீக்கங்கை போட, அதை முந்தானையில் வாங்கிக் கொண்டு நல்லதேவன் இறந்து கிடக்கும் கண்டமனூருக்கு சின்னக்கருப்பசாமி உதவியுடன் வந்து சேர்ந்தாள். அப்போது உடன் வந்த அண்ணனை காணவில்லை, அப்போதுதான் உடன் வந்தது அண்ணன் இல்லை சின்னக்கருப்பசாமி என சிவனம்மாளுக்கு தெரியவந்தது. நல்லதேவன் உடலருகே அழுதபடி நின்று கொண்டிருந்தான் சிவனம்மாளின் அண்ணன்.

ஊர் மக்கள் அனைவரும் சிவனம்மாள் ஒரு தெய்வப்பிறவி சேலை முந்தானையில் தீக்கங்கை எடுத்து வந்துவிட்டாளே என காலில் விழுந்து வணங்கினார்கள். விறகுகள் அடுக்கிவைக்கப்பட்டு அதன் மேல் நல்லதேவனின் உடல் வைக்கப்பட்டிருந்தது கொண்டுவந்த தீக்கங்குகளை போட்டுவிட்டு சிவனம்மாள் உடன்கட்டை ஏறினாள். இரண்டு உடல்களும் எரிந்து சாம்பலானது. சிவனம்மாள் தீக்கங்குகள் கொண்டுவந்த முந்தானை மட்டும் தீயில் வேகாமல் புத்தம்புதியதாக இருந்தது.

தீயில் எரிந்துபோகாத சிவனம்மாள் சேலை முந்தானையையும், அவர்களது அஸ்தியையும் வைத்து உறவினர்களும், ஊராரும் அல்லிகுண்டம் ஊருக்கு மேற்கு எல்லையில் தற்போதுள்ள சிவனம்மாள் கோயில் உள்ள இடத்தில் வைத்து வழிபடலாயினர். இன்றும் சிவனம்மாளை வணங்கி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி குடும்பங்கள் சிறந்து விளங்கும் என்பது இவர்களின் முழுமையான நம்பிக்கையாக உள்ளது. இந்த கோயிலில் மாசி மாதம் சிவராத்திரியையொட்டி 3 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Related Stories: