வாழ்வை செழுமையாக்கும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி!

மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் செஞ்சி தாலுகா, விழுப்புரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அங்காள பரமேஸ்வரியை புற்று தேவி என்றும் அழைக்கிறார்கள். யாகத்தின் போது உயிர் துறந்த பார்வதியின் உடலை சிவபெருமான் சுமந்து கொண்டு ஆக்ரோஷமாக நடனமாடிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தபோது அவருடைய கோபத்தை தணிக்க விஷ்ணுவானவர் பார்வதியின் உடலை பல துண்டுகளாக வெட்டி எறிந்தார். அப்போது அவளது உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் அனைத்தும் சக்தி பீடங்களாக ஆயிற்று. அப்படி நடந்த நிகழ்ச்சியில் பார்வதியின் வலது கை விழுந்த இடமே மேல்மலையனூர். அவளை அங்கு உருவமில்லாத நிலையில் இருக்குமாறும் தான் வந்து அவளை மணப்பதாகவும் சிவன் கூறியதாகவும், ஆகவேதான் பார்வதி புற்று உருவில் அங்கு வந்து தங்கினாள் என்ற ஒரு புராணக் கதை உள்ளது.

இன்னொரு கதையின்படி, ஒரு முறை தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்த அசுரர்களை அழிக்க விஷ்ணு பகவான் பார்வதியின் துணையை நாடினார். அப்போது புற்று உருவில் இருந்த பார்வதி அவர் வேண்டுகோளை ஏற்று ஒரு அகோர உருவான காளியாக வெளிவந்து அவருக்கு உதவி செய்து அசுரர்களைக் கொன்றாள். அதன் பிறகும் அவளின் கோபம் தணியவில்லை. ரத்தவெறி பிடித்து அலைந்தாள்.

அவளை சாந்தப்படுத்த விஷ்ணு பகவான் ரதத்தில் வந்தவர், தேவியை அதில் ஏற்றிக் கொண்டு அந்த ரதத்தை மேல்மலையனூரில் உள்ள மயானத்தில் இருந்த புற்றின் மீது விழ வைத்தார். அதில் தன்னிலைக்கு வந்தவள் அங்கேயே புற்று வடிவில் அமர்ந்தாளாம். அதனால்தான் அங்காள பரமேஸ்வரிக்கு வருடாந்திர திருவிழாவின்போது மயானக் கொள்ளை என்ற பெயரில் பெரிய விழாவே நடக்கின்றது. அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள்.

ஒரு முறை தேவர்களை துன்புறுத்தி வந்த அரக்கர்களான சண்டோபி மற்றும் சுந்தரர் என்பவர்களை அழிக்க பிரம்மா யாகம் ஒன்றை மேற்கொண்டார். அதில் இருந்து அப்ஸராக்களும் திலோத்தமையும் வெளி வந்தார்கள். திலோத்தமை பார்வதி தேவியின் அவதாரம். அவள் அழகில் மயங்கிய பிரம்மா அவளை அடைய அவளை பின் தொடர்ந்து கைலாசம் வரை சென்றார். அப்போது பிரம்மாவிற்கு ஐந்து தலைகள் உண்டு.

தன்னை பின் தொடர்ந்து வந்தது சிவனாரே என நினைத்தவள் அவரை கீழே விழுந்து வணங்கினாள். அதன் பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டது தெரியவர சிவபெருமானிடம் அவள் அது குறித்துக் கூற, கோபம் கொண்ட சிவ பெருமான் பிரம்மாவின் ஐந்தாவது தலையை கிள்ளி எறிந்துவிட்டார். அதனால் பார்வதி மீது கோபம் அடைந்த பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி, பார்வதி அகோர உருவத்தை அடையுமாறு சாபமிட்டாள்.

அது மட்டும் அல்லாமல் சிவபெருமானும் தாகத்தினாலும் பசியினாலும் சுற்றித் திரிய வேண்டும் என்றும், அவர் கையில் பிரம்மாவின் கிள்ளி எறியப்பட்ட தலை கபாலமாக ஒட்டிக் கொண்டு இருக்கும் என்றும், அந்த கபாலம் அவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உணவையும் உண்டு விடும் எனவும் சாபமிட்டாள். சாப விமோசனம் பெற பார்வதி விஷ்ணுவை வேண்ட, அவரும் அவளை மேல்மலையனூரில் உள்ள நதிக் கரையில் ஐந்து தலை நாகமாக புற்றில் இருந்தால் சிவபெருமான் அங்கு வந்து அவளுக்கு சாப விமோசனம் தந்து மீண்டும் மணப்பார் என்றார்.

அவர் கூறியது போலவே அங்கு வந்த பார்வதி வெகு காலம் சிவனுக்காக காத்திருந்தாள். சிவனும் பசியோடு அங்கும் இங்கும் அலைந்து கடைசியில் மேல்மலையனூரில் இருந்த நதிக் கரையை அடைந்தார். அகோர உருவில் இருந்த பார்வதி வந்தவர் சிவன் என்று அறிந்து அவருக்கு உணவு அளிக்கும் போது அது தவறி கீழே நழுவிவிட, சிவனின் கையில் ஒட்டிக் கொண்டிருந்த கபாலம் கீழே இறங்கி உணவைக் கவ்வியது. இந்த தருணத்திற்காக காத்திருந்த தேவி விஸ்வரூபம் எடுத்து அந்த கபாலத்தை காலால் மிதித்து சுக்குநூறாக உடைத்தாள்.

கபாலம் உடைந்த அந்த தருணத்தில் சிவபெருமான் சாப விமோசனம் பெற்றார். தனக்கு சாபவிமோசனம் அளித்த தேவியை சிதம்பரத்துக்கு வருமாறும் அங்கு மணப்பதாக கூறினார். அகோர உருவில் இருந்த பார்வதி தன்னுடைய பழைய உருவை அடைய தேவர்கள் மற்றும் முனிவர்கள் அவளை ஒரு தேரில் ஏற்றிக் கொண்டு சிதம்பரத்துக்குச் செல்ல அங்கு அவள் சிவபெருமானை மணந்தாள். அதே நேரத்தில் தான் மேல் மலையனூரில் அவளை வேண்டித் துதிக்கும் பக்தர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழித்து, பக்தர்களுக்கு ஏவப்படும் பில்லி சூனியங்களை ஒழித்து, அவர்கள் நலனை என்றும் காத்தருளிக் கொண்டு இருப்பதாக கூறிய தேவி மேல் மலையனூரில் புற்று வடிவில் காத்து ரட்சிப்பதாக ஐதீகம்.

அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கின்றார்கள். வருடாந்திர உற்சவத்தின் போது கிராமத்தினர் புதிய தேர் அமைத்து அதில் தேவியை ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் வந்து வணங்குவதற்கு இணங்க 24 மணி நேரமும் ஆலயம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. பல கிராமங்களில் இருந்து வரும் மக்கள், பொங்கல் படைத்து தேவியை வழிபடுகின்றனர்.

பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அங்காள பரமேஸ்வரிக்கு நடைபெறும் வருடாந்திர திருவிழாவின்போது மயானக் கொள்ளை என்ற பெயரில் பெரிய விழாவே நடைபெறும். அந்த விழாவின் போது, பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு அர்ப்பணிக்கின்றனர். அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும் அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம். விழுப்புரத்தில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

Related Stories: