பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்`

?என் மகனுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடம் கழித்து பேரன் பிறந்துள்ளான். கடவுள் அருளால் எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தபோது கேட்பார் பேச்சை கேட்டு குழந்தையையும் நகையையும் எடுத்துக்கொண்டு யாரிடமும் சொல்லாமல் மருமகள் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஏன் என்று கேட்டால் நான் யாரிடம் சொல்லணும்? 2 வருடம் கழித்து வருகிறேன் என்று பதில் சொல்கிறார். மகனின் வாழ்வு நல்லபடியாக அமைய நல்லதொரு வழி காட்டுங்கள்.

- சுப்ரமணியன், சென்னை.

உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகளின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. இருவரது ஜாதகங்களையும் அலசிப் பார்த்ததில் மருமகளின் ஜாதகமே வலிமை வாய்ந்தது என்பது மட்டுமல்லாது நியாயமும் அவர் பக்கம் உள்ளதாகவே தோன்றுகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் களத்ர ஸ்தான அதிபதி சூரியன் 12ம் வீட்டில் சுக்கிரன் மற்றும் ராகுவுடன் இணைந்திருப்பது தாம்பத்ய உறவில் ஒரு சில பிரச்னையை உண்டாக்கி இருக்கிறது. அதிலும் தற்போது ஆறாம் வீட்டில் உள்ள கேதுவின் புக்தி நடந்து வருகின்ற நேரமும் அத்தனை உசிதமாக இல்லை. உங்கள் மருமகள் கேட்பார் பேச்சைக் கேட்டு நடப்பவர் அல்ல. அவர் தனது சுயபுத்தியின்படியே செயல்படுகிறார். அவரது ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசியின் அதிபதி ஆகிய சனி ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் ஸ்திரமாக முடிவெடுத்து செயல்படக் கூடியவர்தான். உங்கள் மகனை நேரடியாகச் சென்று அவரது மனைவியிடம் மனம் விட்டு பேசச் சொல்லுங்கள். கணவன்- மனைவி இருவருக்கும் இடையே உள்ள பிரச்சினையில் மற்றவர்களின் தலையீடு

அவசியம் இல்லை. மனைவியை மதித்து நடக்கும் ஆண்களின் வாழ்வு என்றுமே நன்றாகத்தான் இருக்கும். புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகப்படி பெற்றோர் பிரிவதற்கான வாய்ப்பு இல்லை. பேரனின் நேரம் நன்றாக இருப்பதால் உங்கள் மகனும் மருமகளும் பிரிவதற்கான வாய்ப்பு இல்லை. திங்கட்கிழமை தோறும் ராகு கால வேளையில் உங்கள் மகனை அரச மரமும் வேப்ப மரமும் இணைந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் நாகருக்கு பால் அபிஷேகம் செய்து 18 சுற்றுக்கள் வலம் வந்து வணங்கச் சொல்லுங்கள். கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் காலையில் மூன்று முறை சொல்லி அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வருவதும் நல்லது. பிரிந்த தம்பதியர் விரைவில் ஒன்றிணைவார்கள்.

“வந்தே சம்பு உமாபதிம் ஸூரகுரும் வந்தே ஜகத்காரணம்

வந்தே பன்னக பூஷணம் ம்ருகதரம் வந்தே பசூனாம்பதிம்”

?எனக்கு 4 வயதாகும்போது என் தாயார் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து குழந்தை பிறக்க முடியாமல் இறந்து விட்டார்கள். அவரது வயிற்றில் இருந்தது பெண் சிசு என்றும் இருவரையும் சேர்த்தே தகனம் செய்துவிட்டதாகவும் சொல்லி இருக்கிறார்கள். சிறிய தாயாரின் அரவணைப்பில் நல்லபடியாக வளர்ந்த எனக்கு திருமணம் ஆகி விவாகரத்தில் முடிந்துவிட்டது. கர்ப்பிணியாக இறந்த என் தாயாரின் மரணத்தினால் தோஷம் உண்டாகி இருக்குமா? உரிய பரிகாரம் கூறுங்கள்.

- மதியழகன்.

வயிற்றில் சிசுவுடன் கர்ப்பிணிப் பெண் மரணிக்கும் பட்சத்தில் நிச்சயமாக தோஷம் என்பது உண்டு. இதற்கு பிராயச்சித்தமாக ஊருக்கு வெளியே சாலை ஓரத்தில் சுமைதாங்கி கல் நடவேண்டும் என்று கிராமப்புறத்தில் சொல்வார்கள். தந்தையின் இளைய தாரம் ஆகிய சிற்றன்னை உங்களையும், உங்கள் சகோதரரையும் சிறப்பாக எவ்வித குறையும் இன்றி வளர்த்துள்ளார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. அதே நேரத்தில் உங்களுடைய மணவாழ்வு ஒரே மாதத்தில் முறிவிற்கு வந்திருப்பது என்பது பரம்பரையில் உண்டாகியிருக்கும் தோஷத்தைப் பற்றி உங்களை யோசிக்க வைத்திருக்கிறது. சகோதரனின் திருமணமும் தாமதமாகிக் கொண்டே செல்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் தாயார் உயிர் நீத்த சமயத்தில் நீங்கள் இருவரும் சிறு பிள்ளைகள். வாரிசு என்ற முறையில் அவருக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களை உங்களால் செய்திருக்க இயலாது. அதே போன்று பிரதி வருடந்தோறும் அவருக்கு உரிய சிராத்த கர்மாவினை சரிவர செய்து வருகிறீர்களா என்பது பற்றிய குறிப்பு எதுவும் உங்கள் கடிதத்தில் இல்லை. உங்கள் குடும்ப புரோஹிதரை அணுகி மேற்சொன்ன விஷயங்களுக்கான பிராயச்சித்த கர்மாக்களை முறையாக செய்யுங்கள். அத்துடன் கர்ப்பிணிப் பெண் வயிற்றில் சிசுவுடன் இறந்ததற்கான சிறப்பு பிராயச்சித்த கர்மாவினையும் புரோஹிதர் மூலமாக செய்து முடியுங்கள். விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவக்கரை திருத்தலத்திற்குச் சென்று வக்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து புடவை சாற்றி வழிபடுவதோடு அங்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, வளையல்கள் மற்றும் மங்கலப் பொருட்களைத் தந்து சகோதரர்கள் இருவரும் நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளுங்கள். தாயார் இறந்து இதுநாள் வரை எத்தனை வருடங்கள் ஆகிறதோ அந்த எண்ணிக்கைக்கு குறையாமல் புடவைகளை வாங்கி அத்தனை பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும். வக்ரகாளியம்மனின் திருவருளால் உங்கள் குடும்பத்தில் உள்ள குறைகள் நீங்கி வளமான வாழ்க்கையை காண்பீர்கள்.

?என் மகளுக்குத் திருமணம் ஆகி பத்து மாதங்கள் ஆகிறது. இருவரும் இதுவரை ஒற்றுமையாக இல்லை. அடிக்கடி சண்டை சச்சரவு வந்துகொண்டே இருக்கிறது. மருமகன் குடிக்கிறான், போதை பாக்கு போடுகிறான். அவனுக்கு ஏதேனும் கிரக கோளாறு இருக்கிறதா? அவனை சரிசெய்வதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்.

- அம்பிகா, பாண்டிச்சேரி.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் புதன் புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. அவர்கள் இருவருக்குள்ளும் பொருத்தம் என்பது நன்றாகவே உள்ளது. மருமகனின் தவறான பழக்கவழக்கங்களையும் உங்கள் மகளால் மாற்றிவிட இயலும். உங்கள் மகளை கொஞ்சம் பொறுமையாகவும் பக்குவமாகவும் பேசச் சொல்லுங்கள். அதிகாரமாகப் பேசுவதை விட அன்பான வார்த்தைகளின் மூலமாக மருமகனை நல்வழிப்படுத்த இயலும். வருகின்ற 22.3.2022 முதல் வம்ச விருத்திக்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. குழந்தை பிறந்த பின்பு மருமகனின் நடவடிக்கையில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். அவருடைய ஜாதக பலத்தின்படி கிரஹங்கள் ரீதியாக பெரிய கோளாறு ஏதும் இல்லை. தம்பதியர் இருவரையும் பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள மொரட்டாண்டி பிரத்யங்கிரா தேவி ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை நாளில் அழைத்துச் சென்று மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடச் சொல்லுங்கள். அங்கு பிரசாதமாகத் தரும் குங்குமத்தை மருமகனுக்கு தினமும் நெற்றியில் வைத்துவிடச் சொல்லுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக போதை வஸ்துக்களின் பிடியில் இருந்து வெளியே வந்துவிடுவார். கவலை வேண்டாம்.

?என்னுடைய மகனுக்கு கடந்த இரண்டு வருடங்களாக வரன் தேடிக்கொண்டு இருக்கிறேன். திருமணம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறது. ராகு தோஷ பரிகாரமும் செய்துவிட்டேன். திருமணத்தடை நீங்க இன்னும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- கோவர்த்தனன், ஓசூர்.

பூசம் நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டின் அதிபதி செவ்வாய் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பது நல்ல நிலையே. தோஷம் எதுவும் இல்லை. அவர் பிறந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்தே உங்களுக்கு மிகவும் தெரிந்த குடும்பத்து பெண்ணாக அமைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தொலைதூரத்தில் தேட வேண்டிய அவசியம் இல்லை. வருகின்ற சித்திரை அல்லது வைகாசி மாத வாக்கில் நிச்சயம் செய்துவிடுவீர்கள். சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதோடு தாயார் சந்நதியில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள். திருமணம் முடிந்த கையோடு மகனையும் மருமகளையும் மணக்கோலத்தில்  அழைத்துவந்து தரிசிப்பதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். திருமலை திருப்பதியில் ஒருமுறை கல்யாண உற்சவ வைபவத்தில் பங்குபெற்று தரிசிப்பதும் உடனடி பலனைத் தரும். ஸ்ரீ நிவாஸ பெருமாளின் அனுக்ரஹத்தால் இந்த வருடத்திற்குள் உங்கள் வீட்டினில் கெட்டிமேளச் சத்தம் நிச்சயம் ஒலிக்கும்.

?ஐந்து வயதாகும் என் பேரனுக்கு இன்னும் பேச்சு வரவில்லை. ஆட்டிசம் பாதிப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள். மருத்துவர்களின் ஆலோசனைப்படி இரண்டு வருடங்களாக தெரப்பி கிளாஸுக்கு அனுப்பி வருகிறோம். எல்லா குழந்தைகளையும் போல எனது பேரனும் நன்றாகப் பேச என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

-கமலவேணி, கோவை.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேரனின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டின் அதிபதி சனி வக்ரம் பெற்ற நிலையில் செவ்வாயின் சாரம் பெற்றும் செவ்வாய் எட்டாம் வீட்டில் லக்னாதிபதி புதனுடன் இணைந்திருப்பதும் தோஷத்தினைத் தருகிறது. பேரனின் ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் ராகுவின் சாரம் பெற்று பன்னிரண்டாம் வீட்டிலும் 12ம் வீட்டின் அதிபதி புதன் வாக்கு ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து அமர்ந்திருப்பதும் நரம்பியல் ரீதியில் பிரச்னையைத் தந்திருக்கிறது. குழந்தையின் ஜென்ம தினம் ஆன தை மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் வீட்டினில் ஆயுஷ்ய ஹோமம் செய்யுங்கள். அன்றைய தினம் குடும்ப சாஸ்திரிகளுக்கு மரகதக் கல் அல்லது மரகதக் கல் பதித்த தங்கத்தால் ஆன மோதிரம் தானம் அளித்து நமஸ்காரம் செய்து அவரது ஆசீர்வாதத்தினை பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். புதன்கிழமை தோறும் பேரூர் பட்டீஸ்வரம் ஆலயத்திற்கு குழந்தையையும் அழைத்துச் சென்று மரகதாம்பிகை சந்நதியில் சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்து வரச் சொல்லுங்கள். வேதபாடசாலையில் படிக்கும் குழந்தைகளுக்கு உங்கள் மகனின் கரங்களால் வஸ்திர தானம் செய்வதும் பயன் தரும். வேதமாதாவின் திருவருளால் உங்கள் பேரனின் குறைபாடு விரைவில் நீங்கட்டும்.

Related Stories: