×

தசம தனலட்சுமி யோகம்

காலநேரம் வரும் போது எல்லாம் கூடி வரும் என்பது படித்தவர் முதல் பாமரர் வரை சொல்லும் வழக்கு மொழியாகும். இந்த கால, நேரம் எதற்கு வருகிறதோ இல்லையோ, நிச்சயமாக ஜீவனம் எனும் தொழில், வியாபாரத்திற்கு வந்தே ஆக வேண்டும். ஏனென்றால் வியாபாரம், தொழில் இல்லாமல் இந்த உலகத்தில் வாழ்வது கடினம். மனிதரின் ஜாதக அமைப்புக்கு ஏற்ப, அவரவர் பூர்வ புண்ணிய யோகத்தின்படி இந்த வியாபாரம் யோகம் அமைகிறது. இந்த யோகம் ஒரு சிலருக்கு சிறிய முயற்சியிலேயே அமைந்து விடுகிறது. சிலருக்கு விடாமுயற்சியின் பேரில் கிடைக்கிறது. ஒரு சிலர் பல நஷ்டங்கள், கஷ்டங்களை சந்தித்தபின், பெரிய அளவில் தொழில் வளர்கிறது.

ஒருவர் குடும்பத் தொழிலை மேலும் வளர்த்து செல்வந்தர் ஆகிறார். சிலருக்கு தகப்பனார் ஆரம்பித்த தொழில் கை கொடுக்கிறது. இன்னும் சிலருக்கு மனைவி வந்தவுடன் தொட்டதெல்லாம் துலங்குகிறது. சில மகா பாக்கியவான்கள் பிறக்கும் போதே பெரிய தொழில் அதிபர் வீட்டில் பிறக்கிறார்கள். பலருக்கு ஜாதகக் கட்டத்தில் நீச்ச பங்க ராஜ யோகம், விபரீத ராஜ யோகம், தசம தனலட்சுமி யோகம். பஞ்சமகா புருஷ யோகம், தர்மகர் மாதிபதி யோகம் போன்ற யோகங்கள் அமையப் பெற்று அந்த யோகம் பலன் தரும்போது வியாபாரமும் தொழிலும் கொடிகட்டிப் பறக்கின்றன.

வியாபார ஸ்தானமும் கிரகங்களும்

ஜாதகக் கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு பலன், அமைப்பு உண்டு. அந்த வகையில் வியாபார ஸ்தானம் என்பது லக்னத்திற்கு தசம கேந்திரமான பத்தாம் இடமாகும். இந்த இடமும் இந்த வீட்டின் கிரகமும் தான் ஒருவர் தொழிலோ, வியாபாரமோ செய்ய முக்கிய காரணம். அதற்கு அடுத்தபடியாக வியாபார கிரகமும் வித்தைக்கு அதிபதியுமான புதனுடைய பலம் அவசியமாகும். வியாபாரத்திற்கு தனம் எனும் பணம் முக்கியம். இதைக் கொடுப்பது இரண்டாம் இடமும் லாபத்தை தரும். பதினொன்றாம் இடமுமாகும். அடுத்து நான்காம் இடமும் பத்தாம் இடமும் முக்கியத்துவம் பெறுகின்றன.

வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்க வேண்டுமானால் ஐந்தாம், ஒன்பதாம் இடங்களின் அதிபதிகள் பலம் பெறுவது மிகவும் அவசியம். இந்த அம்சங்கள் எல்லாம் இருந்தால்தான் பல் தொழில் வித்தகர், பிரபல தொழில் மேதை என்றெல்லாம் சிறப்புடன் விளங்க முடியும். நடத்தும் தொழில்கள் எல்லோருக்கும் ஒன்று போல் அமைவதில்லை. ஒருவர் ஒரே நேரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபடுவார். சிலர் ஒரு தொழிலை கவனிப் பதற்கே சிரமப்படுவார்கள். சிலர் தொழில்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இதற்கெல்லாம் கிரக சார அம்சங்களே காரணமாகும். பத்தாம் அதிபதி ராசி சக்கரத்தில் பலமாக இல்லாவிட்டாலும் நவாம்ச சக்கரத்தில் பலம் பெற்று இருக்க வேண்டும்.

பத்தும் - நான்கும்

லக்னத்திற்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் ஏதாவது கிரகம் இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. பத்தில் கேது இருந்தால் பல தொழில்கள் செய்ய யோகம் உண்டு. பத்தில் சூரியன், ராகு இருந்தால் வியாபார யோகம் உண்டாகும். பத்தாம் இடத்தில் கிரகம் இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் நான்காம் வீட்டிலாவது மேற்சொன்ன கிரகங்கள் இருக்க வேண்டும். இதன் மூலம் தொழில் வளர்ச்சியடையும் பத்தாம் அதிபதி நீச்சம் அடையாமலும் 6,8,12ல் மறையாமலும் நீச்ச கிரகத்துடன் சேராமல் இருப்பது அவசியமாகும்.

தொழில் கொடி கட்டி பறக்கும் நேரம்

எந்த துறையில் ஈடுபட்டாலும் ஏதாவது யோகம், அதிர்ஷ்ட தசைகள் இல்லாமல் முன்னேற்றம் என்பது கிடைக்காது. கடின உழைப்பு, உரிய ஊதியத்தைத் தரும். ஆனால் கூடவே அதிர்ஷ்டமும் சேர்ந்தால் உயர்வும் ஏற்படும். அத்தகைய யோகத்தை தரக்கூடியது தான். ‘தர்ம கர்மாதிபதி ராஜ யோகம்’ அதாவது ஜாதகக் கட்டத்தில் ஒன்பதாம் இடத்து அதிபதியும் பத்தாம் இடத்து அதிபதியும் ஒன்று சேர்ந்தோ, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோ இருப்பது இந்த யோகத்துள் அல்லது லக்னாதிபதி, இரண்டாம் அதிபதி, நான்காம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி. பத்தாம் அதிபதி, பதினொன்றாம் அதிபதிகளின் தசாபுக்தி, அந்தரத்தில் யோகம் நேரம் உண்டாகும். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால்! இந்த கிரகங்கள் எல்லாம் மறைவு, நீச்ச ஸ்தானத்தில், இல்லாமல் பலம் பெற்றிருந்தால் மிகப்பெரிய ராஜயோகம் பலன்கள் ஏற்படும்.

பத்தாம் அதிபதி நவாம்ச சக்கரத்தில் இருக்கும் பலன்

பத்தாம் அதிபதி எந்த கிரகமாக இருந்தாலும், அந்த கிரகம் நவாம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறதோ அதற்கேற்ப தொழில் வியாபாரம் அமையும்.

பத்தாம் அதிபதி நவாம்சத்தில் மேஷம், விருச்சிகம், ஆகிய ராசிகளில் இருந்தால் நெருப்பு சம்பந்தமான தொழில், செங்கல் சூளை, தங்கம், வெள்ளி உருக்கும் கடை, ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில், டீ, ஹோட்டல், பேக்கரி, எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்கள், சினிமாத்துறை போன்றவை அமையும்.

பத்தாம் அதிபதி, நவாம்சத்தில் ரிஷபம், துலாம், ஆகிய ராசிகளில் இருந்தால் பெண்கள் ஆடைகள், உள்ளாடைகள், பேன்ஸி ஸ்டோர், அணிகலன்கள், வெள்ளி வியாபாரம், பெரிய ஷோரூம், சீரியல் படம் தயாரித்தல், சூப்பர் மார்க்கெட், ஏஜென்ஸி போன்றவை அமையும்.

பத்தாம் அதிபதி, நவாம்சத்தில் மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் இருந்தால் பல தொழில் செய்யும் யோகம் உண்டு. மார்க்கெட்டிங், ஏஜென்ஸி, கமிஷன் காண்ட்ராக்ட், கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள், பல் பொருள் அங்காடி, நாட்டு மருந்து கடை, புத்தகம், பதிப்பகம், பிரிண்டிங் போன்றவை அமையும்.

பத்தாம் அதிபதி, நவாம்சத்தில் கடகத்தில் இருந்தால் தண்ணீர் சம்பந்தமான தொழில், பழக்கடை, பழமண்டி, காய், கனி, பூ, வியாபாரம், பாஸ்ட்ஃபுட், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், கெமிக்கல், ஜாம், ஊறுகாய், அப்பளம் போன்றவை அமையும்.

பத்தாம் அதிபதி நவாம்சத்தில் சிம்மத்தில் இருந்தால் ஹோட்டல், பேக்கரி, அரசாங்க காண்ட்ராக்ட், கேண்டீன், நகைக்கடை, ஜவுளிக்கடை, மருத்துவ தொழில், நெருப்பு சம்பந்தமான தொழில் அமையும்.

பத்தாம் அதிபதி, நவாம்சத்தில் தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் இருப்பதால் தங்க வியாபாரம், நவரத்தின வியாபாரம்,  துணிக்கடை, மளிகைக்கடை, ரெடிமேடு கடை, ஹோட்டல் போன்றவை அமையும்.

பத்தாம் அதிபதி, நவாம்சத்தில் மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் இருந்தால் எண்ணெய் சம்பந்தமான தொழில், இரும்பு, கட்டுமான தொழில் ஹார்ட்வேர் வியாபாரம், பழைய - புதிய வாகன விற்பனைத் தொழில், ஸ்கிராப், அச்சகம், பத்திரிக்கை புத்தகம் வெளியிடுதல் போன்றவை அமையும்.

Tags : Decimal Dhanalakshmi ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?