புண்ணியம் பெருக்கும் சித்ரா பௌர்ணமி

சித்ரா பௌர்ணமி : 26 - 04 - 2021

ஈசன், திருமால், அம்பிகை மூவருமே

பக்தர்களைக் காக்க தங்கள் விழிகளாக சூரியனையும், சந்திரனையும் வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு அமாவாசையன்றும் சந்திர-சூரிய சந்திப்பு  நிகழும். சித்திரை மாத பௌர்ணமி, சித்ரா பௌர்ணமியாக விமரிசையாக தலங்கள் தோறும் கொண்டாடப்படுகின்றது. மதுரையில் கள்ளழகர்  ஆயிரம்பொன் தங்கச் சப்பரத்தில் மீனாட்சியன்னைக்கு சீர் கொண்டு வருவார். வைகையாற்றில் இறங்கும் போது அன்னையின் திருமணம்  முடிந்ததைக்கேட்டு திரும்பி வண்டியூரில் சைத்யோபசார விழாக் காண்பார். பகவானின் தசாவதார திருக்கோலங்களை அன்று பக்தர்கள் தரிசிக்கலாம்.இந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க சித்ரா பௌர்ணமியன்று மதுரைக்கு வந்து சுந்தரேஸ்வரரை பூஜிப்பதாக ஐதீகம். திருக்குற்றாலம் சித்ரா நதியில் இன்று நீராடுவது விசேஷமாகக் கருதப் படுகிறது. இன்று சித்ரகுப்த பூஜை செய்வது பல பக்தர்களின் வழக்கம். இன்று வாழையிலையில் பலகாரங்கள், பாயசம், சாதம், பால், தயிர், நெய்,  தேன், உப்பு, மோர்க்குழம்பு, கதம்ப கூட்டு, இவற்றை நிவேதிப்பது வழக்கம். பின் ஒரு அந்தணருக்கு புது முறத்தில் நவதான்யங்கள், உப்பு, கற்பூரம், பருத்தி, பேனா,  பென்சில், நோட்டு, முடிந்த அளவு தட்சணை வைத்து தானம் அளிக்க வேண்டும். அமராவதி எனும் பெண் எல்லா விரதங்களையும் இருந்து சித்ரகுப்த  விரதம் முடிக்காததால் மீண்டும் பூலோகம் வந்து அந்த விரதத்தை முடித்து சொர்க்கம் சென்றாள் என்று ஒரு கதை சொல்லப்படுவதிலிருந்தே இந்த  விரத மகிமையை அறியலாம்.

அன்றைய தினம் பூஜை அறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானை மையத்தில் வைத்து, அருகில் ஒரு வெண்கலச் சட்டியில்  மண்ணுடன் தண்ணீர் கலந்து வைத்து அதன் மேல் ஒரு செம்பு வைத்து, அந்தச் செம்பில் முக்கால் அளவிற்கு மேல் தண்ணீர் நிரப்பி வைத்து,  மாவிலை, தேங்காய் வைத்து, அதைக் கரகமாக நினைத்து வழிபட வேண்டும். அதன் அருகில் குத்துவிளக்கு ஏற்றிக் கோலமிட வேண்டும். பொங்கல்  பொங்கும் பொழுது சங்கு ஊத வேண்டும். நவதானியம் பரப்பி வைத்து, வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து ‘சித்ரகுப்தன் படியளப்பு’ என்று  எழுதி வைப்பர். சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கி பொங்கல் வைத்து பொங்கல் பொங்கும் பொழுது சித்ரகுப்தனை சிந்தையில் நினைத்து வழிபட  வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல்,

பச்சரிசிக்கொழுக் கட்டை, இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றையும் இலையில் வைத்து, பலாச்சுளை, நுங்கு, திராட்சை, மாம்பழம், இளநீர், நீர்மோர்,  மாவிளக்கு போன்றவற்றை வைத்துப் படைக்க வேண்டும். பச்சரிசி சாதத்திற்கு தட்டைப்பயறு மாங்காய் குழம்பு வைப்பது வழக்கம். பருப்பு நெய்யும்  வைக்க வேண்டும்.

சித்ரகுப்த என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி   ஒன்று (நமக்கு  தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து) இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.முரட்டுத்தனமும், கோபமும் அதிகமுள்ள ஒருசிறுவன் தவறான செயல்களில் ஈடுபட்டான். இதனால் கவலைப்பட்ட அவனது தாய் மகனே  ‘சித்ரகுப்தாய நம’ என தினமும் சொல்லிக்கொண்டே வா! சித்ரகுப்தன் உனக்கு நல்வழிகாட்டுவார் என்றாள். அவனும் சித்ரகுப்தன் பெயரை  உச்சரித்துக்கொண்டே வந்தான். ஒருநாள் சித்ரகுப்தன் மகிழ்ந்து அவன் ஏட்டைப் புரட்டிபார்த்த போது, அவன் மரணம் அடைய ஏழு நாட்களே  இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சித்ரகுப்தன் பெயரை கூறிய அந்த ஒரு நல்ல செயலைத்தவிர அவன் வேறு எதையும் செய்யவில்லை.  அவன் மீது இரக்கம் கொண்ட சித்ரகுப்தன் அவன் கனவில் தோன்றி, உன் நிலத்தில் ஒரு குளத்தை வெட்டு. அதில் ஒரு மாடு நீர் அருந்தினால்  மூணே முக்கால் நாழிகை வரை உனக்கு சொர்க்கம் கிடைக்கும்.

மரணமடைந்ததும் உன்னிடம் எமன், முதலில் சொர்க்கத்துக்கு செல்கிறாயா? நரகத்துக்கு செல்கிறாயா? என்று கேட்டால், முதலில் சொர்க்கத்துக்கு  போகச்சம்மதிக்கிறேன் என்று சொல்லி விடு என்று

ஆலோசனை கூறிவிட்டு மறைந்தார்.சித்ரகுப்தன் கனவில் கூறியபடி அந்தச் சிறுவன் செய்ய, ஒருமாடு தண்ணீர் குடித்தது. அதற்குள் சிறுவன் உயிர்பிரிந்தது. எமன் அவன் கணக்கை  கூறும்படி கூறினார். சித்ரகுப்தன் இவன் சாகும் முன்பு ஒரு குளத்தை வெட்டியிருக்கிறான் அதில் ஒரு மாடு தண்ணீர் குடித்து இருக்கிறது என்றார்.  இதைக்கேட்ட எமதர்மராஜா உனக்கு மூன்றே முக்கால் நாழிகை சொர்க்கவாசம் உண்டு. முதலில் சொர்க்கவாசம் அனுபவிக்கிறாயா? நரகத்திற்கு  செல்கிறாயா?  எனக் கேட்டார். அதற்கு சித்ரகுப்தன் தன் கனவில் சொன்னபடி முதலில் சொர்க்கத்துக்கு செல்கிறேன் என்று சிறுவன் கூறினான்.  இதற்கிடையே அவன் வெட்டிய குளத்தில் தண்ணீர் ஊற, ஊற்றினில் மாடுகள் வந்து தண்ணீர் குடித்தன. அவனது புண்ணிய கணக்கும்  ஏறிக்கொண்டே இருந்தது. சொர்க்கத்திலேயே அவனுக்கு நிரந்தர இடம் கிடைத்தது. சித்ரகுப்தன் பெயரைச்சொன்னதற்காகவே, ஒருவன் சொர்க்கவாசம் அனுபவித்தான் என்றால் ஒவ்வொரு பௌர்ணமியிலும் சித்ரகுப்தனுக்கு விரதம்  இருந்து அவரை வழிபட்டால் அவரது மகிமையால்

அளவுகடந்த புண்ணியம் கிடைக்கும்.

 - ராதாகிருஷ்ணன்

Related Stories: