கருணை பொங்கும் சப்த கன்னியர் தரிசனம்

மதுராந்தகத்தை அடுத்த முதுகரை கிராமக் குளக்கரையில் உள்ள சப்தகன்னியரை பொங்கல் வைத்து வணங்கி வழிபட தாலிபாக்கியம் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள காளிகோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சப்தகன்னியரைத் தரிசிக்கலாம். இவர்களுக்கு முன் உள்ள பிரார்த்தனை பீடத்தில் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுதி கட்டினால் அவை விரைவில் நிறைவேறிவிடுகின்றன!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் புற்று மண்டபத்தின் வலப்புறம் கன்னிகோயில் என்ற இடத்தில் சப்தகன்னியர் அருள்கின்றனர். அன்னையின் ஆணைப்படி எழுப்பப்பட்ட சந்நதி இது.

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே, வேம்புலியம்மன் ஆலயத்தில், தனி மண்டபத்தில், சுதை உருவில் சப்த மாதர்கள் தத்தமது வாகனங்களில் எழுந்தருளியிருக்கிறார்கள்.

ஈரோடு, அம்மாப்பேட்டையை அடுத்த நெருஞ்சிப்பேட்டைகாவிரியாற்றின் நடுவே உள்ள கன்னிமார் திட்டில் சப்தகன்னியர் புடைப்புச் சிற்பமாக அருள்கின்றனர். ஆடி மாதம் இவர்களுக்கு பொங்கலிட்டு வழிபட்டால், படகு விபத்து ஏற்படாமல் இவர்கள் காப்பார்கள்.

திண்டுக்கல், நத்தம் அருகே கரந்தமலையில் அருளும் சப்தகன்னியர்கள் குடும்ப ஒற்றுமைக்கும், தொழில் அபிவிருத்திக்கும் அருள்கின்றனர்.

நாகை, தரங்கம்பாடி செம்பனார்கோயிலில் உள்ளது சுவர்ணபுரீஸ்வரர் ஆலயம். இங்கு, ஒன்பது இலையில் மங்கலப்பொருட்களை வைத்து சப்தகன்னியரை வணங்கி, ஏழு இலைகளை தானமாகவும், ஒரு இலையை பூஜை செய்பவருக்கும் மற்றுமொரு இலையை யாரேனும் உறவினருக்கும் தர, அந்த தோஷங்கள் நீங்குகின்றன.

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள கச்சிராபாளையத்தில் நாகபுத்து மாரியம்மன் ஆலயத்தில் சுதைவடிவிலும் 7 புற்றுகள் வடிவிலும் சப்தகன்னியரை வணங்கலாம். நாகதோஷத்தைவிலக்கும் தலம் இது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் ரங்கசாமிகுளம் பகுதியில் உள்ள ஆகாய கன்னியம்மன் ஆலயத்தில் சப்தகன்னியரை தரிசிக்கலாம். இங்கு ஒவ்வொரு அமாவாசையன்றும் சிறப்பு அன்னதானம் செய்யப்படுகிறது.

 முஷ்ணம் பூவராகர் ஆலயத்தில் அம்புஜவல்லித் தாயாரின் தோழிகளாக சப்தகன்னியர் தனி சந்நதியில் வழிபடப்படுகின்றனர். சில பக்தர்கள் பங்குனி மாத உற்சவத்தின்போது வெவ்வேறு வேடம் புனைந்து இந்த சப்தகன்னியருக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

திருப்போரூர்-செங்கல்பட்டு பாதையில் உள்ள செம்பாக்கம் கிராமத்தில் ஜம்புகேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்குள்ள சப்தகன்னியர்க்கு பொங்கல் வைத்து வழிபட திருமணத்தடைகள் நீங்குகின்றன.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தின் அருகே செல்லியம்மன் ஆலயத்தில் செல்லியம்மனுடன் மற்ற ஆறு மாதர்களும் அருள்கின்றனர். அதிகாலை நேர அபிஷேக நேரத்தில் மட்டுமே அவர்களை தரிசிக்க முடியும்.

கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் அம்பிகை பெரியநாயகிக்கு தவத்தின் போது உதவிய சப்தகன்னியரை தனி சந்நதியில் தரிசிக்கலாம். வைகாசித் திருவிழா தொடங்கும்முன் இவர்களுக்குதான் முதல் பூஜை.

தாம்பரம் - காஞ்சிபுரம் சாலையில் ஒரகடம் கூட்டுரோடு அருகே 3 கி.மீ. தொலைவில் உள்ள எழுச்சூரில், மும்மூர்த்திகளுடன் சப்த கன்னியரை தரிசிக்கலாம்.

திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறம் உள்ள சப்தகன்னியர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று விசேஷமாக வழி

படப்படுவதால், அதை ஞாயிற்றுக்கிழமை கோயில் என்றே அழைக்கின்றனர். வைகாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள் கரும்பு, பூப்பந்தல் அமைத்து இந்த சப்தகன்னியரை வழிபடுகின்றனர்.

திருச்சி, திருப்பைஞ்ஞீலியில் உள்ள ஞீலிவனேஸ் வரர் ஆலயத்தில் வாழை மரத்திற்கு தாலி கட்டி

மாங்கல்ய தோஷ நிவாரணம் பெறுகிறார்கள். இங்கு சப்த கன்னியரும் தவமியற்றி, இத்தல அம்பிகையின் அருள் பெற்றதால், இவர்களை தரிசிக்க, திருமண வரம் எளிதில் கிட்டுகிறது.

கரூர், குளித்தலையில் உள்ள கடம்பவனேஸ்வரரின் கருவறையிலேயே சப்தகன்னியரும் கொலு வீற்றிருக்கின்றனர். இவர்களில் சாமுண்டியே துர்க்கையாக இத்தலத்தில் வழிபடப்படுகிறாள்.

திருச்சி, லால்குடிக்கருகே,மணக்கால் நங்கையாரம்மன் ஆலயத்தில் பேரழகு மிக்க சப்தகன்னியரை தரிசிக்கலாம். நவராத்திரி முடிந்த 10ம் நாள் இங்கு நிறைவேற்றப்படும் தயிர்ப்பாவாடை பிரார்த்தனை வித்தியாசமானது.

Related Stories: