வெற்றி தருவான் ஸ்ரீவேணுகோபாலன்

செங்கம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை பேரரசர் முதல்பாமரன் வரை சகலரும் எளிமையாக விதம் விதமாக வழிபட்டிருக்கிறார்கள். கிருஷ்ணன் தவழ்ந்த தருணம் முதல் துவாராதீசனாக தேரில் வலம் வருதல் வரை எல்லாமுமே வழிபாட்டிற்குரியவைதான். என் கண்ணா இங்கே வா... என்று யசோதாம்மாவின் கண்டிப்புக்கு கண் கசக்கி அழுவான். நந்தகோபரின் அன்பிற்கு குழைந்தான். கோபியரின் காதலனானான். அரக்கியொருத்தி ஏமாற்ற எத்தனித்தபோது உயிரை உறிஞ்சினான். நட்பின் இலக்கணத்தை குசேலர் மூலம் காட்டினான். பாண்டவர்களுக்கு ராஜதந்திரியானான்.

ரத்த ஆறு பெருகும் முன்னரே பாரதப் போரில் கீதையான ஞான வெள்ளத்தை பாய்ச்சினான். பீஷ்மரின் தியான மூர்த்தியாகி நின்றான். உத்தவரோடு ஞான நண்பனாய் வலம் வந்தான். பிரேமையான பக்திக்கு வசப்பட்டான். நாமத்தை சொன்னவருக்கு தன்னையே கொடுத்து தானாக்கிக் கொள்ளும் விந்தையை நிகழ்த்தினான். ஞான பரிபூரணனான ஸ்ரீ கிருஷ்ணன் வெவ்வேறு கோலங்களோடு பல்வேறு தலங்களில் அருட்கோலோச்சுகிறான். அப்படித்தான் செங்கம் என்கிற செங்கண்மா தலத்தில் ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதியாக கம்பீர அழகு காட்டியருள்கிறார்.

அது பாரதப்போர் முடிந்த சமயம். ஸ்ரீ கிருஷ்ணர் தென் வங்கக் கடலோரத்தில் குடும்பத்தோடு ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தார். கலியுகம் முழுவதும் அல்லிக்கேணியில் அமர்ந்து அர்ச்சாவதார ரூபமாக அருள்பாலிக்கலாம் என்று உறுதியோடுதான் பயணத்தைத் தொடங்கினார். மெல்ல நகர்ந்து அக்காலத்திய ஏகசக்ரபுரி என்கிற தற்போதைய செங்கத்திற்குள் தம் திருப்பாதத்தை பதித்தார். ஊரே திரண்டது. பேரரசன் முதல் சிறு மன்னன் வரை எல்லோரும் கூடிக் குளிர்ந்து தரிசித்தனர்.

காடுகளுக்குள் மறைந்து தவமிருந்த முனிவர்களும் ரிஷிகளும் சித்தர்களும் கிருஷ்ணச் சாரல் வீசுகிறதே என்று ஊருக்குள் குவிந்தனர். அந்த திவ்ய தரிசனம் எல்லோருக்குள்ளும் கல்வெட்டாகப் பதிந்தது. செவி வழிச் செய்தியாகவே பல நூறு தலைமுறைகள் தொடர்ந்தன. நாயக்கர்களின் காலமும் நெருங்கியது. ‘‘ஆஹா... அப்படியா... என்று ‘தளவாய் திம்மப்ப நாயக்கர்’ வியந்தார். கிருஷ்ணரிடம் பெரும் பக்தி பூண்டிருந்வர் அவர். எப்படியாவது தன் பக்தியை கோபுரமாகக் கொட்டி நிறைத்துவிடத் துடித்தார். கிருஷ்ணன் உள்ளுக்குள் உந்தி அருள் செய்வித்தான். கோயில் பணியும் தொடங்கியது. வேகமாக வளர்ந்து நிறைவுற்றது. அப்படிப்பட்ட அரியதொரு ஆலயத்தை நாமும் தரிசிப்போமா!  

ஊரின் நடுவே நூறடி உயரமுள்ள ராஜ கோபுரம் கம்பீரமாக நிமிர்ந்திருக்கிறது. உள்ளே நுழைந்தவுடனே மாபெரும் மைதானத்தின் மையத்திலுள்ள கற்கோயில் நம்மை ஈர்க்கிறது. கோயில் வளாகத்தின் விஸ்தீரணமும் நேர்த்தியான சந்நதிகளின் அழகும் வியப்படையச் செய்கிறது. தாயைத் தேடி ஓடும் சேயைப்போல கோயிலின் மகாமண்டத்திற்குள் நுழைகிறோம்.

மண்டபப் படியேறும் முன்பே ‘சற்று நில்லுங்கள்’ என்பதுபோல அசரடிக்கும் அழகோடு யாளியின் சிற்பம். மண்டபப் படிகளின் பக்கவாட்டில் நாலு கால்பாய்ச்சலோடு ஓடும் யாளியும், தன் முகத்தை பின் பக்கம் திருப்பி கோபாவேசத்தோடு வாய் பிளந்து நாக்கை நீட்டி அலறும் சீற்றத்தையும் கல்லில் ஓட விட்டிருக்கிறார்கள். சற்று உள்ளே நகர்ந்து பார்க்க சிற்பக் காடுகளாக அந்த மண்பமே விரிந்திருக்கிறது.

விரற்கடையளவு சிற்பம் முதல் ஆளுயர சிலை வரை குழைத்து குழைத்து இழைத்திருக்கிறார்கள். ஏதோ களிமண்ணை பிசைவதுபோல கல்லை வைத்துக் கொண்டு அநாயாசமாக விளையாடியிருக்கிறார்கள்.தசாவதாரத்தை ஒரு தூண் முழுவதும் வரிசையாக வடித்திருக்கிறார்கள். இரண்ய கசிபுவின் வயிற்றை கிழிக்கும் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தையும், வாமனரின் தேஜஸையும், கிருஷ்ணரின் சிருங்காரத்தையும் கற்களில் உலவவிட்டிருக்கிறார்கள்.

உதட்டில் பொருத்திய புல்லாங்குழலோடு சங்கு சக்ரத்தோடு காட்சிதர கண்ணன் ஒரு காலை மடித்து திரிபங்க நிலையில் நிற்கிறான். மடித்த காலின் பாதத்தை பசு தன் நாவால் வருடுகிறது. இந்த சிற்பத்தை வேறெங்கும் காண முடியாது. இது அத்ரி மகரிஷிக்காகவே கிருஷ்ணன் காட்டிய அபூர்வ கோலம். இந்த மண்டபத்தை மட்டும் கல் கல்லாய் தடவிப் பார்த்து முழுவதும் அறிந்து ரசிக்க சில மாதங்களாகும் எனில் மிகையில்லை. இந்த மண்டபத்திலேயே தளவாய் திம்மப்ப நாயக்கரின் சிலையையும் காணலாம்.

அடுத்து அர்த்த மண்டபத்தை அடைகிறோம். அழகான அலங்காரங்களோடு உற்சவத் தாயாரான கனகவவல்லித் தாயாரை தரிசிக்கிறோம். அருகேயே ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் உற்சவப் பெருமாளாக சேவை சாதிக்கிறார். அதற்கு அடுத்ததாக கருவறையில் ஸ்ரீ ருக்மிணி பாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி சுவாமி ஆச்சரியமாக காட்சி தருகிறார். வேணுகோபாலன் பார்த்தசாரதியாக சாரத்யம் செய்பவனாக கையில் சாட்டையோடு நிற்கிறார். இடது கரம் வரத ஹஸ்தம் காட்ட, தலையை சற்றே திருப்பி குதிரைகளை செலுத்துபவர்போல சேவை சாதிக்கும் அழகு உள்ளம் நெகிழ்த்தும். ஏன் இப்படியொரு மூர்த்தத்தை இங்கு பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

பார்த்தசாரதியாக காட்சி தந்தான் என்று புராணம் கூறினாலும், நாயக்க மன்னரின் பக்தியே அதற்கு அடிப்படையான காரணமாகும். வேணுகான கண்ணனை ருக்மிணி, பாமாவோடு சாரத்யம் செய்யும் கோலத்தோடேயே அவர்கள் உபாசித்த வண்ணம் இருந்திருக்க வேண்டும். மூவரும் இப்படி நின்ற கோலத்தில் அருள்பாலித்துக் கொண்டிருப்பதை எப்போதும் தரிசித்தபடி இருக்கலாம். இந்த சந்நதியில் கமழும் பச்சைக்கற்பூரமும் துளசியின் வாசமும் உள்ளத்தை குளிர்விக்கிறது. பிரச்னை... பிரச்னை... என்று குமுறும் மனமானது எண்ண ஓய்ச்சல்களெல்லாம் இல்லாது கிருஷ்ண சாந்நித்தியத்தில் அடங்குகிறது. பேரமைதி நம்மைச் சூழ அங்கிருக்கும் பிரவாகமான சக்தியொன்று நமக்குள் புகுகிறது.  

இப்படியாக மூன்று மண்டபங்களையும் விட்டுப் பிரிய மனமில்லாது பிராகாரத்தை வலம் வருகிறோம். முதலில் தனிச் சந்நதியில் பேரருளோடு கனகவல்லித் தாயார் அருளைப் பொழிகிறாள். அடுத்ததாக ஆண்டாள், ஆழ்வார்கள், ராமானுஜர் சந்நதி என்று ஒவ்வொன்றாக தரிசிக்கிறோம். ஏறக்குறைய 1600ம் வருடம் இக்கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. மெல்ல நகர்ந்து கோயிலின் கொடிமரத்திற்கு கீழ் விழுந்து பரவுகையில் வேணுகானம் செவிக்குள் புகுந்துநெஞ்சத்தை நிறைக்கிறது. இத்தலம் திருவண்ணாமலை பெங்களூரு பாதையில் திருவண்ணாமலையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

படங்கள்: சு. திவாகர்

கிருஷ்ணா

Related Stories: