தீரா நோய்களை தீர்க்கும் திருத்தலங்கள்: வைத்திய வீரராகவர்

திருவள்ளூர்

திருமால் மூலவர் எவ்வுள் கிடந்தான் எனும் வீரராகவப்பெருமாளாகவும், உற்சவர் வைத்திய வீரராகவனாகவும்  தாயார் கனகவல்லியாகவும்  விஜயகோடி விமானத்தின் கீழ் திருவருள்புரியும் திருத்தலம்  திருவள்ளூர்.   தொண்டை மண்டலத்தில் உள்ள மிக முக்கிய திவ்ய தேசம். இத்தலத்து குளம்(தீர்த்தம்) கங்கையை விட புனிதமானது.

இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம்.  அதனால் இத்திருக்குளம் ஹ்ருத்தாபஹரணி என வணங்கப்படுகிறது. ஆறுகால பூஜைகள் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது. மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். சுமார் 15 அடிநீளத்திலும் 5 அடி உயரத்திலும் பெருமாள் சயனம் கொண்டுள்ளார். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சந்நதிகள் இத்தலத்தில் மிகவும் விசேஷம்.

மிகவும் பழமையான தலம். இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. சாலிஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் அருகில் உள்ள புனித குளக்கரையில் 1 வருடம் தவமிருந்தார்.   தை மாதம் அன்று தனது பூஜைகளை முடித்து விட்டு தன் உணவிற்கான மாவை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு ஒரு பங்கை கொடுக்க இருந்தார். வயதான அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார். அந்த கிழவரும்  அதை  உண்டு பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் கேட்க முனிவரும் மகிழ்ச்சியோடு மீதி மாவையும் தந்தார்.

முனிவரும் அன்று முழுவதும்  விரதம் இருந்து அடுத்த நாள் முதல் 1 வருடம் கழித்து  மீண்டும் தவம் செய்தார்.  ஒரு வருடம் கழித்து முன்பு போல் மறுபடியும் நிவேதனம் செய்த பின் விருந்தாளி வருவாரா என்று எதிர்பார்த்திருக்க, அதேபோல் அதே கிழவர் வந்து மாவு கேட்க, முனிவரும் தந்தார். பிறகு படுத்துறங்க அந்த கிழவர் ‘எவ்வுள்’ என்று வினவ முனிவரும் தன் இடத்தையே காட்டி ‘இவ்விடம் படுத்துக் கொள்ளவும்’ என்றார்.

மறுகணமே அந்த அந்தணர்  வடிவத்தில் வந்த பகவான் சயனத்திருக்கோலத்தில் காட்சி தந்தார். முனிவரிடம் ‘வேண்டும் வரம் கேள்’ என கூற இங்கு வந்து தங்களை தரிசிக்கும் பக்தர்களுக்கு அவரது பிரச்னைகளை தீர்த்து, நோய்களைத் தீர்த்து, பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைக்கும்படி கேட்க, பகவானும் அவ்வாறே அருளி இங்கு எழுந்தருளியதாக இத்தல வரலாறு கூறுகிறது.

தையலாள் மேல் காதல் செய்த தாளவன் வாளரக்கன் பொய்யிலாத பொன்முடிக ளொன்ப தோடொன்றும் அன்று செய்த வெம்போர் தன்னிலங்கோர் செஞ்சரத் தாலுருள எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே,

என  திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலம். வைத்திய வீரராகவர் - பிணி தீர்க்கும் வீரராகவர். 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும் குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது. இது தவிர கல்யாணம், குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர செல்வம் பெருக இத்தலத்து பெருமாள் திருவருட்பாலிக்கிறார். பிரம்மோற்சவம், பவித்ர உற்சவத்தின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசித்து பிணி நீங்கப்பெறுகின்றனர்.

Related Stories: