போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருக்கும் திருப்போரூர்-மானாம்பதி சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

திருப்போரூர்: குண்டும், குழியுமான திருப்போரூர்-மானாம்பதி சாலையை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர்-மானாம்பதி சாலை 22 கிமீ தூரத்தில் உள்ளது. இந்த சாலையை செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகிறது. இந்த சாலையில் ஆமூர், சிறுதாவூர், முந்திரித்தோப்பு, வேலங்காடு, பொருந்தவாக்கம், அகரம், மானாம்பதி, ஆண்டிக்குப்பம், ஆனந்தபுரம், எச்சூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. திருப்போரூர்-மானாம்பதி சாலையில் கடந்த சில மாதங்களாக லாரி போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால், மானாம்பதியில் இருந்து திருப்போரூர் வரை 10 கிமீ தூரம் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும்குழியுமாக உள்ளன. மானாம்பதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர், சென்னை செல்ல மானாம்பதி வழியாக திருப்போரூர் வந்து அங்கிருந்து மாநகர பேருந்து மூலம் பயணிக்கின்றனர். இவர்கள் ஆட்டோ, பைக், சைக்கிள் உள்ளிட்ட  வாகனங்களில் வரும்போது சாலையில் ஆங்காங்கே  உள்ள பள்ளங்களில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.மேலும் இரவு நேரங்களில்  இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியுள்ளனர்.  பெரும்பாலானோர் பள்ளங்களில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுமட்டுமின்றி திருப்போரூரில் இருந்து சிறுதாவூர் வரை வனப்பகுதி உள்ளது. இந்த இடத்தில் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து காணப்படுகிறது. இவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. திருப்போரூரில் கந்தசுவாமி கோயில், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் பக்தவச்சலேஸ்வரர் கோயில்கள் உள்ளன. இந்த 3 கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் மேற்கண்ட சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மானாம்பதி – திருப்போரூர் இடையே பழுதான சாலையை  நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்து புதிய சாலை அமைத்து தரவேண்டுமென கோரிக்கை  வைக்கப்பட்டுள்ளது….

The post போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருக்கும் திருப்போரூர்-மானாம்பதி சாலையை சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: