வாசகர்களின் ஆன்மீக அனுபவம்

பாபாவின் அருள்

என்னுடைய இரண்டரை ஏக்கர் தென்னந்தோப்பில் ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் ஊற்று இல்லாமல் திடீரென நின்று போனது. பலமுறை இப்படி நேர்ந்திருந்தமையால் கடன் சுமையால் தத்தளித்துக் கொண்டிருந்தேன். தண்ணீர் இல்லாமல் மரங்கள் ஒவ்வொன்றாய் குடைசாய ஆரம்பித்தது. பலர் ‘‘இந்தத் தோப்பு விலைக்கு கிடக்குதாமே? என என்னிடம் நேரில் கேலி பேச ஆரம்பித்து விட்டனர். வேறு வழி தெரியவில்லை. அடிப்படையில் புட்டப்பர்த்தி சாயிபாபாவின் தீவிர பக்தன். சுவாமியை தரிசனம் செய்து விட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவோடு பகவானை சென்று தரிசித்தேன். வீடு வந்த அடுத்த நாள் புட்டப்பர்த்தி சாய்பாபா என் கனவில் வந்தார். வீட்டில் பூஜித்த அலங்காரத்தோடு அமர்ந்திருக்க, பக்கத்தில் மறைந்த என் அப்பாவையும் அழைத்து உன் குலதெய்வ பூசாரியை கூட்டிட்டு வா என்று சொல்ல, அவரும் வருகிறார். அவரிடம் பேசுகிறார் என் கனவு கலைகிறது. நான் அடுத்த நாள் பூசாரியிடம் ஆழ்குழாய் போட வேறு இடம் குறிக்க பணிக்கிறேன். நன்கு பலன் அளித்தன. சுவாமி குலதெய்வ வழிபாட்டை எப்போதும் கடைபிடிக்க வலியுறுத்துவார், அந்தப் புரிதலை எனக்கு கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கும் பாபா என நெஞ்சில் நீங்காத இடத்தில் அமர்ந்து விட்டார் என்பதே நிஜம்.

- ஆர். கே. லிங்கேசன், கன்னியாகுமரி.

இடரை விலக்கிய இசக்கி

எனது ஊருக்கு அருகில் செல்லும் மதுரை - குற்றாலம் சாலையில் அய்யாபுரம் பகுதியில் அமைந்துள்ளது மிகவும் சக்தி வாய்ந்த இசக்கி அம்மன் கோயிலாகும். இங்குள்ள அம்மனை சிறுவயது முதலே நான் பக்தியுடன் வணங்கி வருகிறேன். எனக்குத் திருமணமாகி, நான் கருவுற்ற சமயத்தில் என் உடல் நிலை குறித்தும், இவள் குழந்தைப் பேறில் மிகவும் சங்கடப்படுவாள் என்றும், நிச்சயம் ஆபரேஷன்தான் என்றும் என் மனம் புண்படும்படி பேசினார்கள். ஆனால், நான் வணங்கும் இசக்கி அம்மனை மிகவும், வேண்டி வணங்கி வந்தேன். எனது முதல் மகளும், இரண்டாவது மகளும், மூன்றாவதாக மகனும் வீட்டிலேயே சுகப்பிரசவமாகப் பிறந்தனர், இது பலருக்கு வியப்பைத் தந்தது. அம்மனின் அருளும் ஆசியும் கிடைத்தால் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும் என்பதை நான் உணர்ந்தது போல எல்லோருக்கும் இசக்கி அம்மனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.

- M.R. விஜயா, வேதம்புதூர்.

அண்ணாமலையாரால் ஆரோக்யம் பெற்றேன்

சுமார்  இருபதாண்டுக்கு முன்பு என் கணவர் வியாபார விஷயமாக வெளி யூர் சென்று இரவு திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். பௌர்ணமி நேரமாக இருந்ததால் ஆட்டோவுக்கு டிமாண்டாகி விட்டது. ஆகவே நடந்தே வீட்டுக்குச் சென்று விடலாம் என்று நினைத்து நடக்க ஆரம்பித்தார். பாதி வழியில் ஒரு டூ விலர் தம்பி வேகமாக வந்து அவரை இடித்துத் தள்ளிவிட்டு வேகமாக சென்று இருக்கிறான். நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் எப்படியோ சமாளித்து மெல்ல மெல்ல நடந்து வீட்டுக்கு வந்து சொன்னார். அந்த 11 மணி இரவில் எந்த டாக்டரும் கிடைக்கவில்லை. எனக்குத் தெரிந்த மஞ்சள் பத்தியம் போட்டு கை வைத்தியம் செய்து படுக்க வைத்தேன். அதிலிருந்து 3 மாசம் நாங்கள் பார்க்காத டாக்டர் இல்லை. நாட்டு வைத்தியம் ஆங்கில வைத்தியம் பிசியோ தெரபி என்று அலைந்து பணம் செலவானது. ‘மூன்று பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு சம்பாதிக்கிற ஆம்பிளைய வீட்டில் படுக்க வைப்பது சரியா’ என்று யோசித்தேன். எனக்கு சட்டென்று அண்ணாமலையார்தான் ஞாபகத்திற்கு வந்தார்.  ஒரு மண்டலம் எங்கள் ஊர் அண்ணாமலையார் கோயிலில் விளக்கு போட்டு நெய்தீபம் ஏற்றி கண்ணீர் மல்க கத்தி வந்தேன். ஒரு பெரியம்மா என்னைப் பார்த்தது என்னம்மா பிரச்னை என்று கேட்டார். நான் விவரம் சொன்னேன். இதுக்கு எதுக்கு கவலை படுறே? என்று சில வைத்திய முறைகள சொன்னார். அவர் சொன்ன மூன்றாம் நாளிலிருந்து   முன்பைவிட வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டார். அண்ணாமலையார் கருணை என்னவென்று சொல்ல? இப்போது என் மூன்று பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகி சுகமாக இருக்கின்றேன்.

- N. கிருஷ்ணவேணி நடராஜன், திருவண்ணாலை.

மாற்றம் தந்த மாசாணி

தெய்வ நம்பிக்கை உடைய என் பெயர் துளசி துரை. நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவள். நான் பணியில் இருந்த சமயம், எனக்கு பதவி உயர்வு பெற்ற சமயம் எனக்கு பணியிலிருந்த போது எனக்கு வழங்கப்பட்ட பதிவேடுகள் அனைத்தும் எனக்கு அடுத்த ஊழியரிடம் ஒன்று விடாமல் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு பதவி உயர்வு பெற்ற ஊருக்கு பணி விடை பெற்றுச் செல்ல முடியும். எனக்கு வழங்கப்பட்ட பதிவேடுகளில் ஒன்று மட்டும் கிடைக்கப் பெறவில்லை. என்னால் முடிந்த வரையில் தேடினேன் கிடைக்கவில்லை. இதனால் நான் அடைந்த மனத் துயரத்திற்கு அளவே இல்லை. அச்சமயம் என் அக்கா வந்து மாசாணி அம்மனை வேண்டிய பிறகு தேடு உடனே கிடைக்கும் என்றாள். அதுவரை மாசாணி அம்மனை நினைத்ததுமில்லை. என் மனம் பிரார்த்தனையில் ஈடுபட்டது. எனக்கு அலுவலகத்தில் ஞாயிறன்று முறைப்பணி வந்தது. அலுவலகத்தில் நான் மட்டுமே பணி செய்து வந்தேன். சுமார் 12 மணியளவில் என்னுள் ஒரு சிலிர்ப்பு வந்தது. என்னையும் அறியாமல் ஒருமையுடன் ஒரு இடத்தில் நின்றேன். அங்கு ஒரு பீரோ அலமாரியில் தேடினேன். அனைத்து பதிவேடுகள் பேப்பர்களுக்கடியில் நான் தேடிய பதிவேடு இருந்தது. 20  நாட்களாக தேடிய பதிவேடு கிடைத்ததும் நான் அழுத கண்ணீருடன் மாசாணிக்கு நன்றி செலுத்தினேன். அடுத்த நாளே பொள்ளாச்சி ஆனைமலைக்குச் சென்று அம்மனை தரிசித்தேன். பின்னர் பதவி உயர்வு கிடைக்கப்   பெற்று ஊருக்குச் சென்று பணியில் அமர்ந்தேன். எனது தெய்வ நம்பிக்கை பலித்தது.

- அ. துளசிதுரை, ஈரோடு.

வேண்டுதலை நிறைவேற்றினார் வேங்கடவன்

எங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத நிகழ்ச்சி. அது ஓர் உபநயனத்திற்காக நாங்கள் குடும்பத்துடன் திருப்பதி சென்றோம். பயணம் நிறைவாக இருந்தது. இரண்டு நாட்கள் தங்கி ஏழுமலையானை மனநிறைவுடன் தரிசித்தோம், உபநயனத்தன்று காலையில் ஏழுமலை யானை தரிசிக்கச் சென்றோம். தரிசனம் முடிந்து லட்டு பிரசாதம் வாங்கி மண்டபம் போக நினைக்கும் பொழுது அம்மாவைத் திடீரெனக் காணவில்லை. நான்கு மாடவீதிகளில் சென்றுப் பார்த்தோம். எங்கும் அவர் தென்படவில்லை. கண்ணீர் மல்க நின்றபொழுது சில பக்தர்கள் பாலாஜி இருக்குமிடத்தில் யாரும் காணாமல் போகமாட்டார்கள். அம்மா இல்லாமல் சென்னை செல்வதா, நினைக்கவே முடியவில்லை அழுகை அழுகையாக வந்தது. அப்பொழுது ஒலிப்பெருக்கியில் ஓர் அறிவிப்பு சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்மணி ‘ராம் பக்சா’ என்ற இடத்தில் இருப்பதாகவும், அவர் எங்கள் பெயர்களைக் கூறினார்கள் எனக்கேள்விப்பட்டேன். பிறகு நாங்கள் அந்த இடத்திற்கு விரைந்தோம். அங்கு அம்மாவைக் கண்டதும் எங்கள் ஆனந்தத்திற்கு அளவேது. ஆபத்பாந்தவன் அநாதரட்சகன் பாலாஜி எங்களை அம்மாவிடம் கொண்டு வந்து சேர்த்தார். அவர் கருணையே கருணை இந்நிகழ்ச்சியை, ஏழுமலையானின் கருணையை எங்களால் மறக்க இயலாது.

 - T.S. லலிதா, சென்னை - 600081.

Related Stories:

>