கல்யாண வேங்கடரமண பெருமாள்

தான்தோன்றிமலை - கரூர்

கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் கரூருக்கு தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தான்தோன்றிமலை. இங்கு திருப்பதி வெங்கடாஜலபதியே ‘கல்யாண வேங்கடரமண சுவாமி’ எனும் திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளார். குன்றின் மேல்புறம் குடையப்பட்டுள்ள குடைவரையில்

கல்யாண வேங்கடரமண பெருமாள், மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருட்பாலிக்கிறார். பெருமாள், லட்சுமியை தனது மார்பில் தாங்கியிருக்கிறார். இதனால் இங்கு தாயாருக்கு தனி சந்நதி இல்லை. கரூரை தலைநகராக கொண்டு மூன்றாம் குலோத்துங்கச் சோழன் ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் டங்கணாச்சாரி என்பவர் வசித்து வந்தார். இவர் அரசவையின் சிறந்த சிற்பியாகவும், சைவப் பற்றாளராகவும் திகழ்ந்தார். அவரது மனைவி சுந்தராம்பிகை. இந்த தம்பதியருக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை.

ஒரு நாள் டங்கணாச்சாரி, அரசவைக்கு சென்றிருந்தார். சுந்தராம்பிகை வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது தெருவில் ‘கோவிந்தா... கோவிந்தா...’ எனும் சப்தம் கேட்டது. அவள் தெருவை பார்த்தபோது ஒரு கூட்டம் கோவிந்தா... கோவிந்தா... என்று உரக்க கத்திக்கொண்டே சென்றது. அந்த கூட்டத்தின் நடுவில் நெற்றியில் திருநாமத்துடன் ஐந்து வயது சிறுவன் ஒருவன் தென்பட்டான். கூட்டத்தில் ஒரு பெண்மணியிடம் இதுகுறித்து சுந்தராம்பிகை விசாரித்தாள். அதற்கு அந்த பெண்மணி, ‘‘அந்த சிறுவன் எனது மகன்தான். எனக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. திருப்பதி வெங்கடேசனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டோம். குழந்தை பிறந்தது. ஐந்தாவது வயதில் குழந்தையையும் அழைத்துக்கொண்டு பெருமாளுக்கு காணிக்கை செலுத்த திருப்பதி செல்கிறோம்’’ என்றாள்.

இதனைக் கேட்ட சுந்தராம்பிகை, தானும் திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டி அதே பிரார்த்தனையை செய்து கொண்டாள். வெங்கடாஜலபதியும் அருள்புரிந்தார். சுந்தராம்பிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு குண்டலாச்சாரி என்று பெயரிட்டாள். குழந்தைக்கு ஐந்து வயதானது. பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டிய காலம். இதுவரை கணவரிடம் பிரார்த்தனை பற்றி கூறவில்லை. தற்போது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூறினாள் சுந்தராம்பிகை. கோபத்தில் கொந்தளித்தார் டங்கணாச்சாரி. ‘‘சிவபெருமானை தவிர உலகில் வேறு தெய்வம் இல்லை. நான் திருப்பதிக்கு போக மாட்டேன். உன்னையும் போக விட மாட்டேன்’’ என்று எச்சரித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். சுந்தராம்பிகையோ மனம் வருந்தி கண்ணீர் வடித்தாள். குண்டலாச்சாரி தனது தாய் அழுவதை கண்டு, ‘‘ஏனம்மா அழுகிறாய்?’’ என்று கேட்டான். தனது இக்கட்டான நிலையை தனது மகனிடம் சுந்தராம்பிகை கூறினாள்.

அதைக் கேட்ட குண்டலாச்சாரி, ‘‘அம்மா நீ அழாதே!. திருப்பதி சீனிவாசப் பெருமாளை, நமது ஊரிலுள்ள மலைக்கு வரவழைக்கிறேன். நாம் பிரார்த்தனையை இங்கேயே நிறைவேற்றலாம்’’ என்றான். மகனின் விளையாட்டுப் பேச்சைக் கேட்ட தாய்க்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. அன்று இரவு எல்லோரும் தூங்கியவுடன் குண்டலாச்சாரி, தனது தந்தை வைத்திருந்த, சிற்பம் செதுக்குவதற்கான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மலைக்குச் சென்றான்.

மலையின் மீது ஆலயம் எழுப்ப அடி அளந்து கொண்டிருந்தான். அப்போது சந்நியாசி ஒருவர், அவன் முன் தோன்றி, ‘‘குழந்தாய்! இங்கு வந்து என்ன செய்கிறாய்?’’ என்று கேட்டார். குண்டலாச்சாரி, ‘‘நான் இங்கே கோயில் அமைத்து, திருப்பதி சீனிவாசப் பெருமாளை அழைக்கபோகிறேன்’’ என்று கூறினான்.

இதனை கேட்ட சந்நியாசி, ‘‘உன்னால் இந்தக் காரியம் முடியக்கூடியதல்ல.

என்னிடம் ஆட்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களை வைத்து கோயில் அமைத்து விடலாம். நீ நாளைக்கு இங்கே வா!’’ என்று கூறினார். குண்டலாச்சாரி வீட்டிற்குச் சென்று தூங்கினான். எப்போதும் போல் டங்கணாச்சாரி அதிகாலையில் எழுந்து மலைப்பக்கம் சென்றார். அங்கு ஒரு கோயில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ‘‘ஒரேநாளில் கோயில் அமைப்பது என்பது மன்னனை தவிர வேறு யாராலும் முடியாதே! மன்னன் என்னிடம் சொல்லாமல் இக்கோயிலை கட்டி விட்டாரே’ என்று வருந்தினார். காலை விடிந்ததும் அரசவைக்கு சென்று கோயில் அமைக்கப்பட்டிருப்பது பற்றி கேட்டார். மன்னனும் தனக்கே தெரியாமல் விஷ்ணு ஆலயம் கட்டியவனை கண்டுபிடித்து தண்டிப்பதாக கூறிவிட்டு சென்றான். டங்கணாச்சாரி, கடுங் கோபத்தில் இருந்தார். அன்று இரவு மலைக்குச் சென்றார்.

கோயில் கட்டியவர்கள் எப்படியும் வருவார்கள் என்பதால் அங்கு பதுங்கி இருந்தார். அப்போது குண்டலாச்சாரி ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கோயில் வாசலில் நுழைந்தான். இருட்டில் யார் என்று அறியாமல் டங்கணாச்சாரி, சிறுவன் குண்டலாச்சாரியை வாளால் வெட்டி வீழ்த்தினார். அதன் பிறகு யாரும் வராததால் வீட்டிற்கு வந்து உறங்கினார். மறுநாள் காலையில் தன் மகனை காணாது சுந்தராம்பிகை துடித்தாள். இதற்கிடையில் மலையின் மீது தலை துண்டித்து கிடந்த குண்டலாச்சாரியை, அந்த பகுதி மக்கள் பார்த்து தூக்கி வந்தனர். பெற்றோர் கதறி அழுதனர். அப்போது அங்கு ஒரு சந்நியாசி தோன்றினார். அவர் டங்கணாச்சாரியைப் பார்த்து, ‘‘கொஞ்சம் துளசி இலையைப் பறித்துக் கொண்டு வா!. உன் மகனை பிழைக்க வைக்கிறேன்’’ என்று கூறினார். அதைக் கேட்டதும் டங்கணாச்சாரி, தனது இரு காதுகளையும் பொத்திக்கொண்டு ‘‘நான் துளசியை கையால் தொடமாட்டேன்’’ என்றார்.

இதனை கேட்ட மக்கள் கோபம் அடைந்து ‘‘இந்த இக்கட்டான நேரத்திலும் நீங்கள் வைராக்கியம் பேசுவது சரியல்ல’’ என்று சொல்லவும், அரைமனதுடன் துளசியை பறித்துக்கொண்டு வந்து கொடுத்தார் டங்கணாச்சாரி. அதை வாங்கிய சந்நியாசி, குண்டலாச்சாரியின் தலையையும் உடலையும் சேர்த்து வைத்து கழுத்துப் பகுதியில் துளசிச் சாற்றை பிழிந்து ஊற்றினார். உடனே குண்டலாச்சாரி உயிர் பெற்று எழுந்தான். அதனை கண்டோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். சுந்தராம்பிகை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தனது மகனுக்கு உயிர் கொடுத்த சந்நியாசியின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். கோயில் கட்டப்பட்ட நிகழ்ச்சியையும், தான் வெட்டப்பட்ட நிகழ்ச்சியையும் குண்டலாச்சாரி தனது பெற்றோர் முன்னிலையில் எடுத்துக்கூறினான். அதனைக் கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர். சிறுவன், அவனது பெற்றோர், மன்னன் உள்பட பலரும் சந்நியாசியுடன் மலையேறிச் சென்றனர். ஆனால் மலை மீது சென்றவுடன் சந்நியாசி மறைந்துவிட்டார்.

குகையின் நடுவே பகவான் திருப்பதி வெங்கடேச பெருமாள் காட்சியளிப்பதை கண்டு அனைவரும் வணங்கினர். அப்போது அசரீரி ஒலித்தது. ‘‘குண்டலாச்சாரி என்மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையைக் கண்டு மகிழ்ந்ததால்தான், நான் இங்கே பிரசன்னமாகியிருக்கிறேன். இனி நீங்கள் உங்கள் பிரார்த்தனைகளை இங்கேயே செலுத்துங்கள். நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்’’ என்று கூறினார் பெருமாள்.

தொகுப்பு: ஆர். அபிநயா

Related Stories: