சிவமாக்கும் சங்காபிஷேகம்

சங்காபிஷேகம்  16-12-2019

ஆலயங்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். கல்லினாலோ அல்லது பஞ்சலோகத்தினாலோ வடிக்கப்பட்ட கடவுளின் விக்கிரகத்திற்கு பால், தயிர், தேன், கனி வகைகள் என்று நானாவித திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகின்றது. இதன் பின்னணியில் ஆழ்ந்த தத்துவம் பொதிந்துள்ளது. அந்தத் தத்துவம் தான் அனாதியான இந்து மதத்தின் தனிப்பெரும் சிறப்பு.ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை  அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையில் தான் திருக்கோயில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

கார்த்திகை மாதம் சிவபெருமானை தீப ஒளியால் மகிழ்விக்க வேண்டும் என்பது சிவாகம சாத்திரங்கள் கூறுகின்றன. கார்த்திகை மாதத்தில் தீப ஒளியாலும், யோகாக்னியாலும் ஏற்படும் வெப்பத்தைச் சமன் செய்யவும் சிவ ரூபத்தைக் குளிர்விக்கவும் சங்காபிஷேகம் செய்ய வேண்டும் என்பது அவசியமாகிறது. ஜோதிடப்படி கார்த்திகை மாதம் சூரியன் தன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். சந்திரனும் நீசத்தில் இருப்பதும் தோஷம் என்பதால் தோஷத்தை நீக்க சங்காபிஷேகம் நடைபெறுகிறது.ஆண்டவனுக்கு ஏது தோஷம் என்று கேட்கலாம். ஆனால் தோஷம் நமக்குத்தான். சங்காபிஷேகத்தைப் பார்த்தாலோ, சிவமூர்த்தத்திலிருந்து விழும் தீர்த்தத்தைப் பருகினாலோ நம் உடல்நிலை சமன் நிலை அடையும். தோஷம் நீங்கும் பிணிகள் அண்டாது. ஆகவே தான், கார்த்திகை மாதத்தில் சிவலாயங்களில் 108, 1008 என்ற எண்ணிக்கையில் சங்காபிஷேகங்கள் நடக்கும்.

அபிஷேகம் செய்யும் விதமவாழை இலை மீது தானியங்களைப் பரப்பி அதன் மீது சங்குகளை ஒழுங்கு முறையாக வைத்து நீர் வார்த்து மாவிலை, தர்ப்பை நுனிகளை விட்டு சங்குக்கு பூஜை செய்து சுவாமிக்கு அபிஷேகிப்பர். சங்காபிஷேகம் நடக்கும் முக்கியமான கோயில்கள் திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு, திருவானைக்கோயில், பேரூர், போளூர், திருவேடகம், திருப்பாதிரிப் புலியூர், ராமேஸ்வரம், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆகிய கோயில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.ஒருவலம்புரிச் சங்கு கோடி இடம்புரிச் சங்குகளுக்கு சமம். எனவே சுவாமிக்கு வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் செய்தால் விசேஷமானது. அதிலும் கோடி வலம்புரிச் சங்குகளுக்குச் சமமானதாக கருதப்படும். அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாகச் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர்.

கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாகக் காட்சி தருகிறார். அதனால் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவன் கோயில்களில் இறைவனைக் குளிர்விக்க சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவபூஜையில் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்காபிஷேகத்தைக் கண்டால் ஜஸ்வரியம், லட்சுமி கடாட்சம் நிறையவே கிடைக்கும். இதனைப் புலிப்பாணி சித்தர்.

‘‘சிவனார்க் கேத்த நாளதனிலே

சங்காபிடேகம் கண்டுய்ய

ரிசியருடனே சனகனு மதிலை

யாண்டானு மருபியென   நிற்ப

கண்டு புளங் காகித மெய்தினமே ’’

என்று பாடுகிறார். சிவராத்திரி காலத்தில் இம்மையிலும் நன்மை பயக்கும் சிவனாருக்கு பலவித ஹோமங்களும், சங்காபிஷேகமும் நடப்பதை பற்பல ரிஷிகளுடன் தசரத மகாராஜனும் அரூபமாக இருந்து தொழுவதை நேரில் பார்த்து இன்புற்றோம் என்று பேசிமகிழ்கிறார் புலிப்பாணி சித்தர்.

- பெருமாள் நாயுடு

Related Stories: