மன நோய்களை விரட்டி ஆனந்த வாழ்வு அருளும் யோக ஆஞ்சநேயர்

சோளிங்கரில் அருள்பாலிக்கிறார்.

இரண்யகசுபுவின் மகன் பிரகலாதனுக்கு இறைவனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை. ஹரி எனும் பரம் பொருள் எங்கும், எதிலும் வியாபித்துள்ளார் என்பது அவனது உறுதியான கருத்து. ஆனால் அவன் தந்தை இரண்யகசுபுவுக்கு ’தான்’ தான் பரம் பொருள் என்று வாதிடுவார்.  இறைவன் எல்லா இடத்திலும், ஒவ்வொரு துரும்பிலும் உள்ளதாகக் கூறிய பிரகலாதனை நிரூபணம் செய்யச் சொன்னார். துரும்பில்லை தாங்கள் பேசும் பேச்சிலும், ஒவ்வொரு வார்த்தையிலும், எழுத்திலும், எழுப்பப்படும் ஒலியிலும் ஹரி உள்ளார் என்றான் பிரகலாதன். ஆத்திரமடைந்த அவன் தந்தை ’இருந்தால் வரச்சொல் என்று கொக்கரித்த வண்ணம் அருகிலிருந்த தூணை தன் கதையால் ஓங்கி அடித்தார்.

பாதி மனிதனாகவும், பாதி சிங்கமாகவும் இறைவன் ஹரி அத்தூணிலிருந்து வெளிப்பட்டார். அந்த அந்தி மாலை நேரத்தில், வெளியும் உள்ளும் இல்லாமல் வாசற்படியில் கீழும் [பூமி], மேல் (ஆகாசம்) இல்லாமல் தனது மடியிலேயே, மனிதனும், விலங்குமில்லாத நரசிம்மராக இரண்யகசுபுவை வதம் செய்தார் பெருமாள். ஸ்ரீநரசிம்மரை வழிபடுவது கொடுமையான தீயசக்திகளையும் அழிக்க வல்லது என்பது ஐதீகம். ஸ்ரீநரசிம்மரின் மற்றொரு சாந்த ஸ்வரூபம் யோக நிஷ்டையில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மர். இப்படிப்பட்ட ஸ்ரீயோக நரசிம்மர் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் அருள்பாலித்து வருகிறார். தாயாரின் திருநாமம் அமிர்தவல்லி.

 

யோக நரசிம்மர் அருள்பாலிக்கும் மலையின் எதிரே மற்றொரு சிறிய மலையில் அருள்பாலிக்கிறார் யோக ஆஞ்சநேயர். பெரிய மலையிலிருந்து கீழே இறங்கி சற்றே தூரத்தில் சுமார் இருநூறு அடி உயரமாக காணப்படுவதால் சிறிய மலை என்று அழைக்கப்படுகிறது. அம்மலையின் மீது ஸ்ரீயோக ஆஞ்சநேயருக்கான கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மேற்கு நோக்கி  ஸ்ரீயோக ஆஞ்சநேயர் குடிகொண்டுள்ளார். ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்ரீயோக நரசிம்மரை பார்த்த வண்ணம் யோக நிலையில் உள்ளார்.

நான்கு திருக்கரங்களுடன் யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயரின் மீது இரு திருக்கரங்களையும் பகவான் ஸ்ரீயோக நரசிம்மரால் கொடுக்கப்பட்ட சங்கும் சக்கரமும் அலங்கரிக்கின்றன. சன்னதி எதிரில் தெரியும் துவாரத்தின் வழி நோக்கினால் ஸ்ரீயோக நரசிம்மர் குடி கொண்டுள்ள கோயில் தெரியும். நித்யம் பகவானை தியானித்து யோக நிலையிலுள்ள ஸ்ரீயோக ஆஞ்சநேயரை கண் குளிர தரிசிக்கலாம். இங்குள்ள திருக்குளம் ’ஹனுமத் தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

தலப்புராணம்

ஸ்ரீயோக நரசிம்மருக்கு சோளிங்கரை தவிர வேறு இடங்களிலும் கோயில்கள் உண்டு. ஆனால் யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோயில். அவர் இங்கு யோக மூர்த்தியாக மட்டுமல்லாமல், அஹிம்சை மார்க்கத்தை நிலை நாட்டியவரும் ஆவார். இந்திரதூமன் எனும் அரசர் ஒருமுறை கவரிமானை வேட்டையாட அதனை துரத்திக் கொண்டே சோழசிம்மபுரம் காட்டுக்குள் நுழைந்தார். அவர் துரத்தி வந்த மான் அங்கு சின்ன மலையில் ஏறத்தொடங்கியது. மன்னனும் விடாமல் மலை மீது ஏறினான். ஆனால் அவன் கண்முன்னே அம்மான் ஜோதி ஸ்வரூபமாக மாறி பின் மறைந்துவிட்டது. ஆச்சரியமடைந்த மன்னர் அன்று முதல் அஹிம்சையை பின்பற்றினார். ஸ்ரீயோக நரசிம்மரின் விருப்பப்படி மன்னனை அஹிம்சை பாதையில் திருப்ப, ஸ்ரீயோக ஆஞ்சநேயர் மானை ஆட்கொண்டு ஜோதி ஸ்வரூபமாக மன்னருக்கு அருளினார். ஸ்ரீயோக ஆஞ்சநேயர், மனநோயாளிகளை குணப்படுத்தும் வலிமையுள்ளவர். நோயாளிகள் இந்த கோயிலில் உள்ள ’ஹனுமத் தீர்த்தம்’ என்னும் குளத்தில் நீராடிய பின் ஸ்ரீயோக ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வேண்டும். நம்பிக்கையுடன் இதை செய்தால் மனநோய்கள் தீர்ந்து, மனநிலை சரியாவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

Related Stories: