காவிரிக்கரையில் அருள்பாலித்து முன்வினை பாவம் போக்கும் மோகனூர் அசலதீபேஸ்வரர்

நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவிலும், பரமத்தி வேலூரிலிருந்து கிழக்கே 17 கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கிறது மோகனூர். மோகூர் என்னும் பெயரிலும், வில்வகிரி ஷேத்திரம் என்ற பெயரிலும் விளங்கி வந்த ஊரே இப்போது மோகனூர் என வழங்கப்படுகிறது. இத்தலத்தில் மதுகரவேணி அம்பாள் சமேதராய் அருள்பாலித்து நிற்கிறது அசலதீபேஸ்வரர் கோயில். ‘‘பழங்காலத்தில் தயிர் விற்கும் குமராயியை தெரியாதவர்களே அந்த ஊரில் இல்லை. சிறியவர்கூட அவளை குமராயி என்றே அழைத்தனர். இரண்டு பானைகளில் தயிரை நிரப்பி, தலையில் வைத்தபடி, வீதி வீதியாக செல்வாள். தயிரை விற்று முடித்து, காவிரிக்கரைக்கு வருவாள்.

பானையில் ஒட்டிக் கொண்டிருக்கும் தயிரை அப்படியே வழித்தெடுத்து, அருகில் உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வாள். ஒருநாள், இதேபோல் தயிரை வழித்து அபிஷேகம் செய்து சிவனாரை வணங்கி திரும்பிய போது, அபிஷேகத்தில் குளிர்ந்து போன இறைவன், ‘இந்தா தயிருக்கு காசு’ என்று சொல்லி கொடுக்க… நெகிழ்ந்து போனாள் குமராயி. கெட்டியாக, சத்து மிகுந்த, தரமான தயிரைக் கொடுத்ததால், வியாபாரம் சிறப்புற நடந்தது. வாழ்க்கையும் செம்மையாயிற்று. தயிர் விற்ற காசை சிறுக சிறுக சேர்த்து, சிவனாருக்கும் கூடவே அம்பாளுக்கும் ஆலயம் எழுப்பி விரிவாக்கினாள்,’’ என்பது இந்த கோயில் சொல்லும் தலவரலாறு.

மூலவருக்கு அசலதீபேஸ்வரர் என்ற பெயர் சூட்டப்பட்டதிலும் பெரும் பொருள் இருக்கிறது. சலனம் என்றால் அசைவது. அசலனம் என்றால் அசையாமல் இருப்பது. இங்கே, கருவறையில் உள்ள தீபம் ஒன்று, அசையாமல் எரிந்தபடி ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. இதனால், சுவாமிக்கு அசலதீபேஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது என்று கூறுகின்றனர் சிவனடியார்கள். காசியில் விஸ்வநாதர் சன்னதியில் இறைவனை தரிசித்து விட்டு அப்படியே திரும்பினால், புண்ணிய கங்கை நதியை தரிசிக்கலாம். இதேபோல், இங்கு அசலதீபேஸ்வரரை தரிசித்து விட்டு, காவிரி நதியை வணங்கலாம். இப்படி வழிபடுவதால், முன்வினை யாவும் நீங்கி, நிம்மதியும் அமைதியும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

பீஜாவாப மகரிஷி என்பவர், இங்கே காவிரிக்கரையில் கடும் தவம் செய்து சிவலிங்கத்தை பூஜை செய்து வந்தாராம். பரணி தீபத் திருநாளில், இங்கே சிவனாருக்கு தீபம் ஏற்றி வழிபட்டதும், அப்படியே வானில் பறந்தபடி திருவண்ணாமலைக்குச் சென்று அண்ணாமலையாருக்கும் தீபம் ஏற்றி வழிபட்டு வணங்கியதும் மோகனூருக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. எனவே, இன்றைக்கும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இங்கே விமரிசையாக கொண்டாடப்படுகிறது. காசிக்கு நிகரான தலம், திருவண்ணாமலைக்கு நிகரான தலம் என்றும் போற்றப்படுகிறது. பழைய தமிழ் நூல்களில் காணப்படும் கொங்குகுமரி என்னும் இடமும் இதுவே எனலாம்.

கோயிலில் சரபேஸ்வரர் சந்நிதி வடக்கு வாசலில் அமைந்துள்ளது. இந்த சந்நிதியில் ராகு கால பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ராகு காலத்தில் 11 வாரம் தவறாமல் தொடர்ந்து வழிபட்டால் தங்கள் மனதில் ஏற்படக்கூடிய மனபயம் போகும். குழந்தை பாக்கியம், உடல் பிணி தீருதல், எதிரிகள் தொல்லை விலகுதல், வியாபார விருத்தி, உயர்பதவி, தொழில் மேன்மை, படிப்பு, இழந்த சொத்துக்கள் திரும்பக் கிடைத்தல் போன்றவை நடைபெறும் என்பதும் ஐதீகம். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும்.

Related Stories:

>