திருமணத் தடை நீக்கும் திருவேங்கடமுடையான்

சிவகங்கையில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது அரியக்குடி. இங்கு 500 ஆண்டுகள் பழமையான திருவேங்கடமுடையான் கோயில் உள்ளது. இந்த கோயில் தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் வீற்றிருக்கிறார். கோயிலின் வடக்குப்பகுதியில் ‘கல் கருடன்’ என்று அழைக்கப்படும் கருடாழ்வார் சிலை சிங்கங்களுடன் உள்ளது.

Advertising
Advertising

தல வரலாறு

பண்டைய காலத்தில் அரியகுடியில் சேவுகன் செட்டியார் என்ற பெருமாள் பக்தர் வசித்து வந்தார். ஒவ்வொரு வருடமும் அவர் அரியக்குடியிலிருந்து திருப்பதிக்கு நடந்தே சென்று பெருமாளை தரிசனம் செய்து வந்தார். திருப்பதி செல்லும் போது அப்பகுதி மக்கள் தரும் காணிக்கை பொருட்களையும் எடுத்து சென்று கோயில் உண்டியலில் அவர் செலுத்தி வந்தார். வயது முதிர்ந்த நிலையில் அவர் திருப்பதிக்கு நடந்து சென்றார். கோயிலுக்கு மலையேறி செல்லும் வழியில், திடீரென மயங்கி விழுந்தார். அவர் முன் தோன்றிய பெருமாள் “சேவுகா தள்ளாத வயதில் இனி மலையேறி வரவேண்டாம். நீ இருக்குமிடத்திற்கு நானே வருகிறேன்” என கூறி மறைந்தார்.

ஊர் திரும்பிய பின்னர் அவரது கனவில் மீண்டும் தோன்றிய பெருமாள், “நாளை நீ மேற்கே செல். எனது இருப்பிடம் உனக்கு தெரியும்” என்று தெரிவித்தார். இதன்படி மறுநாள் மேற்கு திசையில் சேவுகன் செட்டியார் நடந்து சென்றபோது ஒரு இடத்தில் ஒரு துளசி செடி இருப்பதை பார்த்தார். அந்த இடத்தை சீர் செய்த போது, ஒரு பெருமாள் சிலையை கண்டெடுத்தார். இதையடுத்து அப்பகுதியிலேயே திருவேங்கடமுடையான் கோயில் என்ற பெயரில் பெருமாளுக்கு கோயில் எழுப்பினார். திருப்பதியில் உள்ளது போன்று பெருமாளை தனியாக பிரதிஷ்டை செய்ய விரும்பாத அவர், பெருமாள் சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரது சிலைகளையும் பிரதிஷ்டை செய்தார்.

*****

 சித்திரை மாத பிறப்பன்று திருமஞ்சனம், சித்ரா பவுர்ணமியன்று சுவாமி வீதியுலா, வைகாசி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், கிருஷ்ணஜெயந்தி, புரட்டாசி மாத ‘கோவிந்தா போடும்’ நிகழ்ச்சி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் ஆகியவை விசேஷ தினங்களாகும். இவற்றில் ‘கோவிந்தா போடும்’ வழிபாடு நிகழ்ச்சி பிற வைணவ கோயில்களில் நடைபெறுவது இல்லை. புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று நடக்கும் இந்த வழிபாடு புகழ்பெற்றது. அன்றைய தினம் அப்பகுதியை சேர்ந்த நகரத்தார்கள் கோயிலுக்கு வருகின்றனர். பின்னர் கோயிலின் முன்பு களிமண்ணால் செய்த பெரிய குவளையில் பசு நெய்யை வார்த்து, அதில் புதிய துணிகளை போட்டு அக்னி வளர்க்கின்றனர்.

தொடர்ந்து பெருமாளின் திருநாமமாகிய ‘கோவிந்தா’ கோஷத்தை முழங்கியபடி அக்னியை வலம் வருகின்றனர். பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் உள்ளிட்ட பல விழாக்கள் நடக்கின்றன. மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தில் கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. ஆடி சுவாதியன்று கருடனின் ஜென்ம நட்சத்திரமான “மகா சுவாதி” நடக்கிறது. திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க மூலவரை வணங்கி பக்தர்கள் வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் பக்தர்கள் வழிபடுகின்றனர். தினமும் 6 கால பூஜைகள் நடக்கின்றன. கோயில் நடை தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

Related Stories: