அச்சம் தீர்ப்பாள் அய்யாளம்மன்

திருச்சியில் காவிரிக் கரையோரம் பரிசல் துறையில் அய்யாளம்மன் கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலய முகப்பில் ராஜகோபுரம் இல்லை. ஆலயம் முன்பு இரண்டு குதிரை சிலைகள் கம்பீரமாக உள்ளன. உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. வடக்கு பிராகாரத்தில் கருப்பண்ணசாமி அருட்பாலிக்கிறார். சுமார் 300 ஆண்டுகள் பழமையான அரசமரத்தில் சூல உருவில் இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். கிழக்கில் மதுரை வீரன், பொம்மி, வெள்ளையம்மாளும் தெற்கில் சப்த கன்னியர் திருமேனிகளும் உள்ளன. கருவறையில் அய்யாளம்மன் அருட்பாலிக்கிறாள்.

கேரள மாநிலத்தில் ஏழு அம்மன்களை பக்தியோடு முறையாக ஆராதனை செய்து வந்தார் ஒரு பூசாரி. அவருக்கு தேவையான ஆலய பராமரிப்பு பணிகளை அவரது மனைவி கவனித்துக் கொள்ள அவர்களுக்கு குழந்தை இல்லை. ஒருநாள் அவர்கள் அம்மன் முன் அமர்ந்து தங்களுக்குப் பின் இந்த ஆலயத்தை கவனித்துக் கொள்ளவும் அம்மன்களுக்கு பூஜை செய்யவும் எவரும் இல்லையே என்ற வேதனையும் அவர்களை வாட்டியது. அம்மன் மனமிறங்கி அவர்கள் முன் தோன்றி ஒர் எலுமிச்சை பழத்தைக் கொடுத்து இரண்டு பேரையும் உண்ணும்படி கூறிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றாள்.

இரண்டு பேரும் அந்தப் பழத்தின் சாற்றை அம்மன் சொன்னபடியே பருகினர். அம்மன் அருள்படி அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர்ந்து சிறுவனானான். பல நேரங்களில் தந்தையுடன் அவனும் ஆலயம் செல்வதுண்டு. அப்படி ஒரு நாள் அந்த சிறுவன் தந்தையுடன் ஆலயம் சென்றான். இரவு அர்த்த சாம பூஜையை முடித்த பூசாரி கதவை இழுத்து பூட்டிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டார். சிறுவனோ அசதியோடு கோயிலின் ஒருபுறம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். பூசாரி அதை கவனிக்கவில்லை. வீட்டிற்கு வந்த பூசாரி மனைவியிடம் மகன் எங்கே என்று கேட்க அவளோ அவன் உங்க கூடத்தானே வந்தான் என்று கூற பூசாரிக்கு ஏக அதிர்ச்சி.

“ஐயோ, பையன் உள்ளேயே படுத்து தூங்கியிருப்பானே. நடு சாமத்தில் அம்மன் நடமாடினால் அதைக் கண்டு பையன் பயந்து விடுவானே? இப்போது என்ன செய்வது?” என்ற பூசாரி செய்வதறியாது தவித்தார். “போய் பையனை அழைத்து வாருங்கள்” என்றாள் அவர் மனைவி. ‘‘அர்த்த சாம பூஜை முடிந்து ஆலயத்தை பூட்டிவிட்டேனே. இனி எப்படி திறப்பது?” தயங்கினார் பூசாரி. “எனக்குத் தெரியாது. முதலில் போய் பையன அழைத்து வாருங்கள்” என்று கோபத்தோடு கத்தினாள் அவர் மனைவி. வேறு வழியின்றி புறப்பட்டார் பூசாரி. கோயில் கதவில் இருந்த பூட்டை திறந்தார்.

தவறு செய்கிறோமே என்று அவர் மனம் படபடத்தது. கதவைத்திறந்த பூசாரி உள்ளே நடந்தார். பிராகாரத்தில் பையன் உறங்கிக் கொண்டிருந்தான். அவனை மெல்ல எழுப்பினார் பூசாரி. பையன் எழுந்தான். மறுவினாடி ஏதோ சத்தம் கேட்கவே திரும்பினார் பூசாரி. அம்மன் நின்று கொண்டிருந்தாள். விசுவரூபமெடுத்து முகத்தில் கோப கனலுடன் நின்று கொண்டிருந்தாள். உக்கிரமாய் பூசாரியைப் பார்த்தாள் அன்னை. பயந்த பூசாரி பயத்துடன் தாயே என்றார் தயங்கிய குரலில். ‘‘அர்த்த சாம பூஜை முடிந்து பின் பூட்டிய கதவை ஏன் திறந்தாய்?’’ வார்த்தைகளில் அனல் பறக்க கேட்டாள் அம்மன்.

‘‘பையனை விட்டுவிட்டுப் போய்விட்டேன். நடுச் சாமத்தில் அவன் எழுந்து பயந்தால் என்ன செய்வது என்று’’ வார்த்தைக் தடுமாறிக் கொண்டே வந்தது பூசாரிக்கு. ‘‘ஓகோ, நடை திறக்க இவன்தான் காரணமா?’’ என்ற அம்மன் கோபாவேசத்துடன் பையனை தூக்கினாள். கண் இமைக்கும் நேரத்தில் அவனை இரண்டாகக் கிழித்து தூக்கி வெளியே எறிந்தாள். இதைக் கண்ட பூசாரியின் உடல் வெடவெடத்தது. இவ்வளவு உக்கிரமான அம்மனையா, நான் இதுவரை பூஜை செய்து வந்தேன்? தன்னையே கேட்டுக்கொண்டார் பூசாரி. பையன் இறந்த துக்கம் தாளாத பூசாரி கோயிலை இழுத்து பூட்டினார். பத்து நாட்கள் துக்கம் அனுசரித்தார்.

பூஜை, அபிஷேகம் எதுவுமே நடைபெறவில்லை. இதற்கிடையே ஏழு மரப்பெட்டிகள் செய்து தயாராக வைத்திருந்தார் பூசாரி. பதினோறாம் நாள் கோயிலைத் திறந்தார். கருவறைக்குச் சென்றார். உள்ளே கருவறையில் இருந்த ஏழு அம்மன்களையும் தனித்தனியாக ஒவ்வொரு பெட்டியில் போட்டு பூட்டினார். பின் அவைகளை கொண்டு போய் அருகேயிருந்த ஆற்றின் மணலில் குழிதோண்டி புதைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். சில நாட்கள் கடந்த நிலையில் கனமழை கொட்டியது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அம்மன் சிலைகள் இருந்த பெட்டிகள் காவிரி ஆற்றில் கலந்து, ஸ்ரீரங்கத்தின் காவிரிக் கரையில் ஒதுங்கின.

ஒரு பெட்டி மட்டும் தென்புறம் உள்ள மேலச் சிந்தாமணியில் ஒதுங்கியது. அன்று இரவு பக்தர் ஒருவருக்கு அருள்வந்தது நான் கரையில் ஒதுங்கி உள்ளேன். நான் வைஷ்ணவியின் அம்சம். எனக்கு கோயில் கட்டுங்கள். என்னை அய்யாளம்மன் என்று அழையுங்கள் எனக்கூற - ஊர் மக்கள் அந்தப் பெட்டியை எடுத்து கரையோரம் பரிசல்துறையில் அந்த அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினர். அந்த ஆலயமே அய்யாளம்மன் கோயில். ஸ்ரீரங்கத்தின் கரையிலும் அருகாமையிலும் ஒதுங்கிய மற்ற ஆறு பெட்டிகளும் இதேபோல் ஊர் மக்களால் கரையேற்றப்பட்டு தனித்தனி கோயில்கள் கட்டப்பட்டன.

திருவரங்கத்து அம்மன், செல்லாயி அம்மன், காஞ்சாயி அம்மன், மாணிக்க நாச்சியார், மண்ணாயி அம்மன் என்ற பெயரில் கோயில்கள் உள்ளன. தன்னை ஆராதிக்கும் பக்தர்கள் மனதில் எழும் பயத்தையும் குழப்பத்தையும் நீக்கி அவர்கள் வாழ்க்கை ஒளிமயமாக அமைய அய்யாளம்மன் அருள்புரிகிறாள். திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் காவிரி கரையோரம் உள்ளது இந்த கோயில். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ.தொலைவில் உள்ளது.

- ஜெயவண்ணன்

Related Stories: