பல்லாவரம் பச்சையம்மன்

பழைய பல்லாவரத்தில் அமைந்துள்ளது பச்சையம்மன் மன்னாதீஸ்வரர் திருக்கோயில். பல்லாவரம் குவாரி ரோடு வழியாகச் சென்றால் திருக்கோயிலை அடையலாம் அல்லது திரிசூலம் ரயில் நிலையத்தில் இறங்கி ஊருக்குள் செல்லும் வழியில் சென்று ஹார்பர் ரோடு வழியாகச் சென்றால் எளிதில் கோயிலை அடையலாம் பச்சையம்மன் பல்லாவரத்தின் எல்லைக்குள் இருந்தாலும் அடுத்துள்ள திரிசூலம் கிராமத்துக்கும் உரியவள். இரண்டு ஊருக்கும் பொதுவானவள் எனவும் திரிசூலம் குளத்தில் இருந்து அக்னி கரகம் கிளம்பி வரும் எனவும் பழைய பல்லாவரம் பால்கேணி குளத்திலிருந்து கங்கை திரட்டி வந்து இரண்டு ஊரையும் சேர்ந்த சுமார் 400 பேருக்குக் குறையாமல் ஆடி 5ஆம் வாரம் திங்கட்கிழமை அன்று தீ மிதிப்புத் திருவிழா நடைபெறும் திருக்கோயிலாகும்.

தவம் மேற்கொண்ட பச்சையம்மன் இங்கும் கோயில் கொண்டாள். இயற்கையால் மக்கள் வேற்றிடம் குடிபெயர வனம் அடர்ந்து மண் மூடிப் போனது. மீண்டும் அம்மன் வெளிவர வேண்டிய காலம் உருவானது. பல்லாவரத்தை ஒட்டிய பகுதியிலிருந்த மக்கள் ஒவ்வொருவரின் கனவில் ஒவ்வொருநாள் தோன்றி தான் திரிசூலம் மலையிலிருந்து இறங்கும் ஓடைக்கரையில் கீழே குடியிருப்பதாகவும் தன்னை எடுத்து வணங்க, சகல சௌபாக்கியங்களும் வழங்க இருப்பதாகவும் கூறினாள்.

அதன் காரணமாக இரண்டு ஊராரும் சேர்ந்து அம்மன் குடிகொண்டுள்ள இடத்தைத் தேடினர். ஆலமரமும் வேப்பமரமும் சற்று தள்ளித் தள்ளி நிற்க ஓடை ஓரிடத்தில் வலம் சுழித்து ஓடியது. அவ்விடத்தில் பக்தர் ஒருவருக்கு அருள் வந்து அம்மன் நான் இங்கிருக்கிறேன் என குறிகாட்டியது. ஊரார் அனைவரும் கைகளால் காட்டை அழிக்க அவ்விடத்தில் அம்மன் மூதாட்டி ஒருத்தியிடம் பிரசன்னமாகி தான் தவம் செய்வதற்காக அங்கு வந்து குடியிருந்ததாகவும் அப்போதய மக்கள் கேட்டுக் கொண்டபடி அங்கே நிரந்தரமாகத் தங்கி அருள் புரிவதாகவும் தெரிவித்தாள்.

சிறிய கல்லால் ஆன கருவறை கட்டி மக்கள் வழிபட்டு வந்ததாகவும் பின்னர் கி.பி 1903ம் வருடம் முன் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. திரிசூலம் மலையிலிருந்து வரும் ஓடையின் வலப்புறம் கோயிலின் பெரிய பரப்பு அமைந்துள்ளது. கருவறையில் பச்சையம்மன் கிழக்குப்புறம் பார்த்து சிலாரூபமாக அமர்ந்த நிலையில் இருக்கிறாள்.கருவறை முன்புறம் வலதுபுறத்தில் விநாயகரும் இடது புறத்தில் சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் இருந்து அருள் வழங்குகின்றனர். சந்நதிக்கு நேர் எதிரில் வீரமுத்து சந்நதி அமைந்துள்ளது. மூலவர் சந்நதிக்கு வலதுபுறம் சுமார் 16 அடி உயரமுடைய வாழ்முனி சிலை சிரிக்கும் கோலத்தில் உள்ளது. காலடியில் பாதாளஅரக்கனும் பீடத்தில் வீரமுத்துவை அழிக்க முயல மனைவி வீராச்சியும் உயிர் பிச்சை கேட்டு நிற்கின்றனர். வாழ்முனிக்கு இடப்புறம் சப்த கன்னியர்கள் மன்னாதீஸ்வர லிங்கம் உள்ளது.

கோயில் அமைந்துள்ள பகுதிக்கு வடமேற்கில் மலையிலிருந்து நீர் வரும் கண்மாய் அமைந்துள்ளது தினமும் காலை 7.00 மணி முதல் 12.00 மணிவரையும், மாலை 5.00 முதல் 8.00 மணி வரையும் சந்நதி தரிசனத்திற்காகத் திறந்துள்ளது . ஞாயிறு திங்கள் வெள்ளி ஆகிய நாட்கள் மக்கள் வரத்து அதிகமாக இருக்கும் நாளாக உள்ளதுடன் பிரார்த்தனைக்காக வந்து முடிசெலுத்துபவர் பொங்கல் வைப்போர், காதுகுத்து செய்வோர் என பல குலதெய்வக்காரர்கள் பிரார்த்தனை நிறைவேற்றும் கோயில் இதுவாகும்.

அமாவாசை இரவு நள்ளிரவு 1.00 மணிக்கு பூஜை முடிந்தபிறகு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். விநாயகர் சதுர்த்தி, தைப்பொங்கல், வரலட்சுமி நோன்பு போன்ற முக்கிய நாட்களும் கொண்டாடப்படும் திருக்கோவிலாகும். ஆடி 5ஆம் வாரம் திங்கட் கிழமை தீமிதி உற்சவம், அக்னி கரகம் எடுத்து நடைபெறும் சிறப்புடையதாக விளங்குகின்றது.

Related Stories: