புவனேஸ்வரி தேவி

ந.பரணிகுமார்

புவனேஸ்வரி வசிக்கும் சிந்தாமணி க்ரஹம் உள்ளது. அதன் மத்தியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று உண்டு. அதன் நான்கு புறங்களிலும் சிருங்கார மண்டபம், முக்தி மண்டபம், ஞான மண்டபம், ஏகாந்த மண்டபம் என்னும் நான்கு மண்டபங்கள் உள்ளன. அவற்றிற்கு எதிரே பூந்தோட்டமும் புஷ்கரணியும் உண்டு. அங்கு எப்போதும் அகில், சந்தனம் போன்ற தூபங்களின் வாசனை கமழும். இந்த மண்டபங்களைச் சுற்றி மஹாபத்மாடவீ எனும் தாமரை நிறைந்த ஓடையிலிருந்து பூக்களின் நறுமணம் வீசிக் கொண்டே இருக்கும்.  சிருங்கார மண்டபத்தில் ஜகதாம்பிகை வீற்றிருந்து தேவகான அமுதத்தைப் பருகுவாள். முக்தி மண்டபத்திலிருந்து ஆத்மாக்களின் பாசத்தைப் போக்க முயல்வாள். ஞான மண்டபத்திலிருந்து ஞானோபதேசம் தந்தருள்வாள். ஏகாந்த மண்டபத்தில் இருந்து உலகைக் காப்பதற்குரிய சிந்தனையைச் செய்து கொண்டிருப்பாள்.

தேவி புவனேஸ்வரி வசிக்கும் இடம் மணித்வீபம் எனப்படுகிறது. உலகங்கள் எல்லாம் உருவாகக் காரணமாகிய புவனேஸ்வரி உலகங்களைப் படைப்பதற்கு முன் தான் தங்குவதற்குரிய இடம் வேண்டுமென எண்ணி அந்த நினைப்பிலேயே இந்த மணித்வீபத்தைப் படைத்தாள். நவரத்தினங்களால் ஆன பதினெட்டு பிராகாரங்களைக் கொண்டது இந்த த்வீபம். மூவுலகிலும் இதற்கு ஈடான அழகு வாய்ந்த நகரம் கிடையாது.

சங்கநிதி, பத்மநிதி இரண்டிற்கும் நடுவில் தேவி புவனேஸ்வரரின் மடியில் அமர்ந்து அருள்கிறாள். ஸ்ரீசக்ரதாடங்கங்களை அணிந்து தாமரை போன்ற முகத்துடன், சந்திரப் பிரபை, சூரியபிரபையைத் தலையில் சூடி அருட்காட்சியளிக்கிறாள். சந்தனக்குழம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ போன்ற வாசனைத் திரவியங்கள் பூசிய ஸ்தனங்கள், சங்கு போன்ற கழுத்து, மாதுளை முத்துகள் போன்ற பற்கள், ரத்தினங்கள் இழைத்த கிரீடங்கள், கங்கையின் சுழல் போன்ற நாபிக் கமலம், மாணிக்கக் கற்களால் ஆன மோதிரம், தாமரை தளம் போன்ற முக்கண்கள், இச்சா, க்ரியா, ஞான சக்திகள் துலங்கத் திகழ்கிறாள்.

நவரத்னப் பிராகாரம் ஒன்று உண்டு.அங்கே  ஸ்ரீதேவிக்குரிய மந்திரங்களும், மகாவித்யைகளும் நிறைந்துள்ளன. மேலும் ஆவரண தேவதைகள், ஆபரண தேவதைகள் போன்றோர் சகல விதமான அணிகலன்களோடு கோடி சூர்யப் பிரகாசமாகக் காட்சியளிப்பர். சப்த கோடி மகா மந்திரங்களும் அங்கேதான் வசிக்கின்றன.

காலமாக விரிந்தவள் காளி. தலமாக விரிந்தவள் புவனேஸ்வரி. கால வெள்ளத்தில் புவனவெளிகளை பூத்து மலரச் செய்தவள் புவனேஸ்வரியே. புவனேஸ்வரி பீஜமான ஹ்ரீம் இல்லாத மந்திரமே இல்லை எனலாம்.

பிரம்மலோகத்திற்கும் மேலே மணித்வீபம் அமைந்துள்ளது. வைகுண்டம், கைலாயம், கோலோகம் போன்றவற்றை விட மணித்வீபம் பெருமை பெற்றது. அது ஸர்வலோகாதிகம் என்றும் அழைக்கப்படுகிறது. அமிர்தக் கடலின் நடுவே அத்தீவு உள்ளது. அதற்கு வடக்கே இரும்பு மதில் ஒன்று உண்டு. அது உறுதியும் உயரமும் கொண்டது. பொற்பிரம்புகளைப் பிடித்த பலர்

ஆரவாரத்தோடு அங்கு காவல் காப்பர்.

தேவி மஹாத்மியத்தில் தேவர்கள் தேவியைத் துதிக்கும் நமோதேவ்யை என ஆரம்பிக்கும் துதியில் ‘நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ’ என ஐந்து முறை வருகிறது. பராசக்தி பஞ்சபூதங்களிலும் உறைபவள். படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் என ஐம்பெரும் தொழில்களையும் புரிபவள். எனவேதான் தேவர்கள் அவளை ஐந்து முறை வணங்குகிறார்கள் போலும்.  தைத்ரீய உபநிஷத் ஐந்து கோசங்களிலும் வேறுபட்டதாயும் பிரம்மம் என்றதுமான பரமாத்ம வடிவம் புவனேஸ்வரியே என்கிறது.

Related Stories: