மன்னார் கோவிலில் அருள்பாலிக்கிறார் திருமண தடை நீக்கும் வேதநாராயணர்

நெல்லை மாவட்டம் மன்னார்கோவில் ராஜகோபாலசாமி குலசேகர ஆழ்வார் திருக்கோயில் பழங்கால சிறப்புமிக்கதாகும். புராண காலத்தில் வேதபுரி எனவும், சோழர்கள் காலத்தில் ராஜேந்திர விண்ணகர் என்றும் அழைக்கப்பட்டு தற்காலத்தில் மன்னார்கோவில் என்று அழைக்கப்படுகிறது இந்த தலம். இருபுறமும் காவிரி நதிக்கரை சூழ அனந்த சயனத்தில் அடியவர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ரெங்கநாதரின் திருத்தலமான திருவரங்கத்திற்கு இணையான பெருமை உடையது, இந்த வேதபுரி திருத்தலம். இக்கோயில் மூலவர் மற்றும் தாயார் சிலைகளை பிரதிஷ்டை செய்தவர்கள் ப்ருகு மற்றும் மார்கண்டேய மகரிஷிகளாவர். மூலவரின் சிலைகள் சுதை வடிவத்தில் மூலிகைகளால் ஆன வர்ண கபால திவ்யத் திருமேனியாகும்.

Advertising
Advertising

இங்கு காண்பதற்கு அரியவகை விமானமான அஷ்டாங்க விமானத்தின் கீழே ஸ்ரீவேதநாராயணர் நின்று, இருந்த, கிடந்த திருக்கோலங்களில் மூன்று அடுக்குகளில் இருக்கிறார். சப்த பிரகாரங்களை உள்ளடக்கிய கோயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. குலசேகரஆழ்வார் இறைவன் மீது கொண்ட அன்பால் தனது அரச பதவியை துறந்து பல திவ்ய தேசங்களுக்கு சென்று இறுதியில் இந்த வேதபுரி வந்தடைந்தார். வேதநாராயணர் பார்ப்பதற்கு அரங்கநாதனை போலவே காட்சியளித்தாலும் ராமபிரான் காலத்திலேயே விபீஷணாழ்வார் மங்களா சாஸணம் செய்த வேதநாராயணர் திவ்ய அழகில் மயங்கி இங்கு பல கைங்கரியங்களை மேற்கொண்டு இறுதியில் இத்திருத்தலத்திலேயே பரமபதம் அடைந்தார்.

குலசேகர ஆழ்வாரின் திருவாராதனப் பெருமாளான ராமபிரான், சீதா, லெட்சுமணன் ஆகிய விக்கிரகங்கள் இன்றும் இக்கோயிலில் இருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். குலசேகர ஆழ்வாருக்கு மற்ற ஆழ்வார்களை விட தனிச்சிறப்பாக அந்த பெருமாளையும் சேர்த்து அவரது பெயரை குலசேகர பெருமாள் என்று அழைப்பதும் உண்டு. கோயிலில் பெருமாள் சன்னதி போல் அவரது அருகிலேயே கொடிமரத்துடன் கூடிய தனி சந்நிதி அமைந்துள்ளது. ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு பன்னாயிரப்படி என்ற அழகிய உரை தயாரித்து வழங்கிய வாதிசேகரி அழகிய மணவாள ஜீயர் அவதரித்த திருத்தலம் என்ற சிறப்பு இந்த கோயிலுக்கு உள்ளது.

ஆழ்வார் அமுத மொழியாம் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வார் அருளி செய்தது பெருமாள் திருமொழி என்றும், ஆழ்வார் வடமொழியில் செய்த அற்புத கருத்துக்கள் அடங்கிய துதி நூல் முகுந்த மாலை என வழங்கப்படுகிறது. இந்த கோயிலில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் பிள்ளைத் தொண்டுப் பாதை உள்ளது. சிறிய துளை போன்ற இந்தப் பாதையில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் நுழைந்து, பெருமாளைப் பிரார்த்தித்தால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்! மண்டப விதானத்தில், 12 ராசிகளுக்கு உரிய கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்கின்றனர் பக்தர்கள். ஸ்ரீவேதநாராயணரை, புரட்டாசியில் வந்து வணங்கினால், கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்கலாம். திருமணத்தடை அகலும்; வியாபாரம் சிறக்கும் என்கின்றனர் பக்தர்கள். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் தென்காசி செல்லும் வழியில் இந்த கோயில் அமைந்துள்ளது. காலை 6.30 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 7 மணிவரையிலும் கோயில் பூஜைகள் நடைபெறுகின்றன.

Related Stories: