தடைகளை தகர்ப்பாள் தண்டு மாரியம்மன்

கோவை

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து அவினாசி சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தண்டு மாரியம்மன் கோயில்.முகப்பில் அழகிய மூன்று நிலை ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் மகா மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம். அடுத்துள்ள அர்த்தமண்டப நுழைவாயிலில் துவாரபாலகிகள். கருவறையில் அன்னை தண்டு மாரியம்மன் வடக்கு திசை நோக்கி அமர்ந்த நிலையில் புன்னகை தவழும் இன்முகத்துடன் அருட்பாலிக்கிறாள். மேல் இரண்டு கரங்களில் கதையையும், கத்தியையும் தாங்கி, கீழ் கரங்களில் சங்குடனும், அபய முத்திரையுடன் திகழ்கிறாள். இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறாள்.

கருவறை கோஷ்டத்தின் கிழக்குப்பகுதியில் ராஜகணபதியும், எருமை தலைமீது வெற்றிக் களிப்புடன் நின்றிருக்கும் துர்க்கையும், தென்பகுதியில் தட்சிணாமூர்த்தியும், மேற்கே மகாலட்சுமியும், பால முருகனும் அருட்பாலிக்கின்றனர்,நுழைவாயிலில் மகிஷாசுர மர்த்தினியும், கஜலட்சுமியும், சரஸ்வதியும், லட்சுமியும் அருள் பொங்க காட்சி தருகின்றனர்.அன்னையின் விமானத்தில் சமயபுரம் மாரியம்மன், காமாட்சியம்மன், விசாலாட்சி, சரஸ்வதி, கருமாரியம்மன், தனலட்சுமி, அயன மாரியம்மன், காயத்ரி, கோமாரி, லட்சுமி, தண்டு மாரியம்மன் ஆகியோர் திருமேனிகள் அழகுற கொலுவிருக்கின்றன,

அன்னையின் சந்நதிக்கு மேற்கு திசையில் அரசமரத்தின்கீழ் கற்பக விநாயகர் அருட்பாலிக்கிறார். கிழக்குப் பகுதியில் நவகிரக நாயகர்கள் தனி மண்டபத்தில் உள்ளனர். வடகிழக்குப் பகுதியில் கருப்பராயனையும், முனியப்பனையும் தரிசிக்கலாம்.‘தண்டு’ என்றால் படைவீரர்கள் தங்கும்கூடாரம்  என்று பொருள். ஒருசமயம் திப்பு சுல்தானின் படை வீரர்கள் கோவை கோட்டை மதிலுக்குள் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்படை வீரர்களில் ஒருவனின் கனவில் அன்னை காட்சி அளித்தாள். நீர்ச்சுனையும், வேப்ப மரங்களும், செடி கொடிகளும் நிறைந்திருந்த ஒரு வனப்பகுதியின் நடுவே காட்சியளித்த அன்னையின் உருவம் அந்த வீரனின் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.

பொழுது விடிந்ததும், தனது நண்பர்களுடன் அந்த அடர்ந்த காட்டில் அன்னையைத் தேடி அலைந்தான். அந்த வீரன். அவனது அலைச்சல் வீண் போகவில்லை. ஒரு வேப்ப மரத்தின் அடியில் அன்னையைக் கண்டான். உவகை மிகுதியால் ஆனந்தக் கூத்தாடினான். அங்கேயே ஒரு மேடை அமைத்து அன்னையை எழுந்தருளச் செய்தான். தான் கூடாரத்தில் உறங்கியபோது கனவில் தோன்றிய அன்னை என்பதால் தண்டு மாரியம்மன் என்றழைத்தான். அங்கேயே ஆலயமும் அமைந்தது.அன்று முதல் தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைக் களைந்து அருட்பாலித்து வருகிறாள் அன்னை. தினமும் நான்கு கால பூஜைகள் இக்கோயிலில் நடக்கின்றன. காலை 6 முதல் மதியம் 1 மணி வரையிலும் மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். தலவிருட்சம் தொரட்டி மரம்.

இந்த ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையன்று பூச்சாட்டுடன் தொடங்கப்படுகிறது. 13 நாட்கள் நடைபெறும் இந்ததிருவிழாவின்போது அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நான்காம் நாள் மற்றும் எட்டாம் நாள் திருவிழா பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை.இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம், ‘சக்தி கரகம்.’ அன்று காலை 6 மணிக்கு கோவை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள கோனியம்மன் திருக்கோயிலிலிருந்து `சக்தி கரகம்' புறப் படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரங்களில் தீச்சட்டி ஏந்தி, சக்தி கரகத்துடன் பக்தி பரவசத்துடன் வருவார்கள். மனம் சிலிர்க்க வைக்கும் காட்சி இது. 11வது நாளன்று காலை 6 முதல் இரவு 8 மணி வரை தமிழ் முறை லட்சார்ச்சனை நடக்கும். அன்று அன்னைக்கு பலவிதநறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து பலவகை மலர்களால் அன்னைக்கு சிறப்பு அலங்கார­­­­­­­மும் நடைபெறும். தன்னை நம்பும் பக்தர்களுக்கு நல்லருள் புரிந்து பக்தர்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்கும் தடைகளை தகர்த்தெறிந்து காத்தருள் புரிகிறாள் தண்டு மாரியம்மன்.

Tags : Thaar Mariamman ,
× RELATED தனியார் கார் பார்க்கிங் சார்பில்...