பாவங்களை போக்கும், குழந்தை வரம் அருளும் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் வழியில் திருவிடைமருதூரில் உள்ளது மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்.  மூலவர் மகாலிங்கேஸ்வரர். தாயார் பிருஹத் சுந்தரகுசாம்பிகை.காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமமாக கருதப்படுகிறது. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்து இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர், தன்னைத்தானே அர்ச்சித்துக்கொண்டு பூஜை விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்குப் போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார்.

இந்த ஆலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாசுரனை கொன்ற பாவம் நீங்க மூகாம்பிகை இத்தலத்து சிவபெருமானை வழிபட்டாள்.

தலத்தின் சிறப்பு:

திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை, வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில், அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்துகொண்டிருக்கும்போது வழியில், உறங்கிக்கொண்டிருந்த ஒரு அந்தணன், குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான்.

இச்சம்பவம்  அவனறியாமல் நடந்திருந்தாலும், ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அத்துடன், அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது.

சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன், மதுரை சோமசுந்தரரை வணங்கி இவற்றில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டினான். மதுரை சோமசுந்தரரும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த அரசனுக்கு, தன் நாட்டின் மீது சோழ மன்னன் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன், சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான்.

அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்தொடர்ந்து கோயிலுக்குள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன.ஆனால், திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள்புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பாண்டிய நாடு திரும்பினான். இதனால் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று, மேற்கு கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்து, தேவாரப் பதிகங்களை பாராயணம் செய்வதால் மழை பொழியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோவிலில் அஸ்வமேதப் பிராகாரம், கொடுமுடிப் பிராகாரம்,  ப்ரணவப் பிராகாரம் என்று மூன்று பிராகாரங்கள் உள்ளது. இம்மூன்று பிராகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.இக்கோயிலில் 32 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் ஒரு ஏக்கர் பரப்பில்  உள்ள காருண்யாம்ருத தீர்த்தம் மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே, கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது. தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாவவிமோசனம் பெறலாம்  என்பது ஐதீகம். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடினால் குழந்தை வரம் கிடைக்கும்.பிரமஹத்தி தோஷம் மற்றும் பல தோஷங்களை தீர்க்கும் தலமாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது.

Related Stories: