×

நெஞ்சகமே கோயில்! நினைவே சுகந்தம்!

இறைச்சுவை இனிக்கும் இலக்கிய தேன் - 24

‘அங்கு இங்கு எனாத படி எங்கும் பிரகாசமாய்
   ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நினந்தது எது?
தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம்
தங்கும் படிக்கு இச்சை வைத்து உயிர்க்கு உயிராய் தழைத்தது எது ?’’

- என்று ஆண்டவனின் பெருமையைப் பாடுகின்றார், தாயுமானவர். எல்லாமாகிக் கலந்து நிறைந்த கடவுக்கு நாம் படைக்கும் ஏற்ற காணிக்கைதான் என்ன? அவர்  ஏற்கும் காணிக்கைதான் என்ன? தட்டு நிறைய பூவும் பழமும் ஏந்தி, பகட்டாக பட்டாடை உடுத்தி பலர் வியக்க ஆலயத்தில் படாடோபமாக வலம் வருபவர்களைப்  பார்த்து சிவபெருமான் சிரிக்கின்றார் என்று கூறுகின்றது தேவாரம்.

‘பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே!

அதே சிவபெருமான் எவர் உள்ளத்தை ஏற்ற இடமாகத் தேர்வு செய்கிறார் தெரியுமா? அதையும் அந்த தேவாரத்தின் முதல் இரண்டு அடிகள் குறிப்பிடுகின்றது.

‘நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்!

உள்ளார்ந்த அன்பும், இதயம் கலந்த ஈடுபாட்டையுமே இறைவன் விரும்புகின்றான். அணுவளவும் அன்புணர்ச்சி இல்லாமல்  தன் எலும்புகளையே விறகுகளாக்கி  தன் சதைகளையே அறுத்து ஒருவர் இறைவனுக்குப் படைத்தாலும் அவரால் திருவருளைப் பெற இயலாது என்கின்றார், திருமூலர்.

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போல் கனவில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங் குழைவார்க்கு அன்றி
என் பொன் மணியினை எய்த ஒண்ணாதே!

திருமந்திரத்தின் மேற்கண்ட பாடல் ஆடம்பரமாகச் செய்யப்படும் வேள்விகள், சிற்றுயிர்களைப் பலிகொடுத்தல் போன்ற செயல்களால் ஒரு போதும்  இறையருளைப்பெற இயலாது என்பதை உணர்த்துகின்றது.  ‘இறைவன் விரும்பும் மலர் எது’? என்பதை சொற்சுவையும், பொருட் சுவையும் மிளிர ‘யாழ்நூல்’  இயற்றிய இலங்கை விபுலானந்த அடிகள் அதி அற்புதமாகப் பாடல் ஒன்றில் பகர்கின்றார். வினா - விடை வடிவில் அமைந்துள்ள இலக்கியத்தேன் சொட்டும்  அப்பாடலை அனுபவிப்போமா?

 ‘வெள்ளை நிற மல்லிகையோ?
வேறெந்த மாமலரோ?
வள்ளல் பிரானார்க்கு
வாய்த்த மலர் எதுவோ?
வெள்ளை நிறப் பூவும் அல்ல!
வேறெந்த மலரும் அல்ல!
உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது!
காப்பவிழந்த தாமரையோ!
கழுநீர் மலர்த் தொடையோ!
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு
வாய்த்த மலர் எதுவோ?
காப்பவிழ்ந்த மலரும் அல்ல!
கழுநீர்த் தொடையும் அல்ல!
கூப்பியகைக் காந்தளடி
கோமகனார் வேண்டுவது!’

பழவகைகளாலும், பலவகையான மலர்மாலைகளாலும் சுவை மிகுந்த நிவேதனங்களாலும் நாம் இறைவனை ஆராதிப்பதும் அர்ச்சனை செய்வதுமே ஒருவகையில்  அர்த்தமில்லாத ஒன்று தானோ என்று சிந்திக்கிறார் பக்தர் ஒருவர். காஞ்சி மகா முனிவர் தம் அருளுரையில்இது பற்றி கூறுவதைக் காண்போம். ‘ஈஸ்வரா! நான்  உனக்கு உபசாரம் செய்வதாக நினைத்து பூஜை செய்தாலும் உண்மையில் அபசாரம் அல்லவா செய்வதாகத் தோன்றுகிறது.

மூவுலகும் விரிந்து பரந்த உன் பாத கமலங்களை நீரூற்றித் துதிக்க என் சின்னஞ்சிறு பாத்திரத்தின் தண்ணீர் போதுமா? விண்ணும், மண்ணும் பரந்திருக்கும் உன்  திருமேனியை அலங்கரிக்க நான் போர்த்தும் சிறிய ஆடையால் ஆமோ? உன்னை நமஸ்காரம் செய்தால் என் காலை நீ இல்லாத பக்கமாக என்னால் நீட்ட  முடியவில்லையே! சரி! உன்னை பிராத்திக்கலாம் என நினைத்தால் என் மன ஆசையை அறியாதவனாகவா நீ இருக்கின்றாய்.  எல்லாம் ஆன நீயேதான்  நானாகவும் இருக்கின்றாய் என்று தெரிந்து கொண்டு நான் வாழ்வதற்கு நீதான் அருள் புரிய வேண்டும். தாயுமானவரின் தமிழ் இதை அற்புதமாக  எடுத்துரைக்கின்றது.

பண்ணேன் உனக்கான பூசை ஒரு
வடிவிலே
பாவித்து இறைஞ்ச ஆங்கே
பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப்
பனிமலர் எடுக்க மனமும்
நண்ணேன் அலாமல் இரு கைதான் குவிக்க எனில்
நாணும் என் உளம் நிற்றி நீ
நான் கும்பிடும் போது அரைக்கும்பி டாதலால்
நான்பூசை செய்யல் முறையோ
மேலும் இறைவனுக்கு உகந்த வழிபாடு. எது என்பதையும் சொல்கின்றார்
தாயுமானவர்.
நெஞ்சகமே கோயில்! நினைவே சுகந்தம்! அன்பே
மஞ்சன நீர்! பூசை கொள்ளவாராய்!
பராபரமே!

வாக்கிற்கு அருணகிரியார்வடிவேலனுக்கு ஒரு வினோதனமான மாலையைச் சூட்ட விரும்பி அம்மாலையை எதை எதைக் கொண்டு அமைக்கிறார் என்று  பார்க்கலாமா?திருப்புகழில் அந்த செந்தமிழ் மந்திரமாலையின் செய்முறை விளக்கத்தை விவரிக்கின்றார்.

‘ஆறுமுகப் பெருமானே! என்றும் உங்களையே எண்ணி மகிழும் என் உள்ளமாகிய பூவே அந்த உன்ன மாலையின் குஞ்சமாக அமைய வேண்டும். தொடுக்கும்  கயிறு என்ன தெரியுமா? தூய அன்பு நாரினால் அது அமைய வேண்டும். தாங்கள் வெற்றி வடிவேலினால் ஓங்காரத்தை எழுதிய என் நாவில் ஒலிக்கும்  ஓசையால் அம்மாலை ஒளிவிட வேண்டும் ஞானமே நறுமணமாக, வாசனையாக அம்மாலையில் வீச வேண்டும். அறிவாகிய வண்டே அந்த மாலையைச் சுற்ற  வேண்டும். இதுவே என் விருப்பம். அதை நிறைவேற்றுவீர்’ என வேண்டுகிறார்.

ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
மானபூ வைத்து நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டி யொருஞான
வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
மாசிலோர் புத்தியளிபாட
மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
வாளபா தத்தி லணிவேனோ

மேற்கண்ட முறையில் வித்தியாசமாக, வித்தகமாக அமைந்த அற்புதச் சொற்பத அரிய மாலையை தன் பன்னிரண்டு தோள்களிலும் அணிந்து தோற்றம்  தருகிறான், வேலவன் என்று பெருமிதம் பொங்கப் பேசுகின்றார் அவர்.

‘மல்லேபுரி பன்னிருவாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே!

மேற்கண்ட விதம் கந்தர்அனு பூதியில் பாடும் அருணகிரியார் தித்திக்கும் திருப்பரங்குன்றம் திருப்புகழ் ஒன்றிலும் அதைப் பதிவு செய்கின்றார்.

இருக்கு மந்திர மெழுவகை முனிபெற
உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கித மிலகிய அறுமுக  எழில்வேளென்
றிலக்க ணங்களு மியலிசை களுமிக
விரிக்குமம்பல மதுரித கவிதனை
யியற்று செந்தமிழ் விதமொடு புயமிசை புனைவோனே!

‘நாவுக்கரசர்’ என ஆண்டவனாலேயே பட்டம் சூட்டிப் பாராட்டு பெற்றவர் அப்பர். அவர் தேவாரத்தில் தெரிவிக்கின்றார்.

காயமே கோயிலாகக்
கடிமனம் அடிமையாக‌
வாய்மையே தூய்மையாக‌
மனமணி இலிங்கமாக‌
நேயமே நெய்யும்பாலா
நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனார்க்குப்
போற்றவிக் காட்டினோமே!

அருளாளர்கள் காட்டிய வழியில் நாம் அன்றாடம் ஆராதனை மேற்கொண்டால் இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

(இனிக்கும்)

Tags :
× RELATED காமதகனமூர்த்தி