சாந்தமூர்த்தியாக அருள்பாலிக்கும் அன்னை ஏழுலோகநாயகி

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள மணலூர் கிராமத்திற்குள் லீலை புரிய அடியெடுத்து வைத்தாள். கிராமத்து அழகான குளத்திற்குள் இறங்கினாள். கரையில் அமர்ந்து ஏதேதோ குடும்பக் கவலையில் மூழ்கியவர்களுக்கு சட்டென்று தீர்வு கிடைத்தது. தியானத்திற்காக போராடிய சில சந்நியாசிகள் தம்மை மறந்து அங்கேயே கிடந்தனர். குடும்பஸ்தர்கள் யாரிடமோ தம் மனக்குறை எல்லாவற்றையும் சொல்லிவிட்டதுபோல பாரம் இறங்கிவிட, வீட்டிற்குத் திரும்பினார்கள். இரவு நேரங்களிலும், மனித நடமாட்டம் இல்லாத காலங்களிலும் சிறிய பெண்ணொருத்தி காலில் கொலுசு மாட்டிக்கொண்டு ஓடுவதுபோன்று ஓசை, குளத்து நீரில் கேட்டபடி இருந்தது. முதலில் அது பிரமைதான் என்றே எல்லோரும் அலட்சியமாக இருந்து விட்டனர். ஆனால், தொடர்ந்து அந்த ஓசை எல்லோருக்கும் தெளிவாகக் கேட்டபோது, ‘ஆஹா, குளத்திற்குள் சக்தி வீற்றிருக்கிறாள். அவள் வெளிப்பட விரும்புகிறாள்’ என்று உணர்ந்து உரத்துச் சொன்னார்கள்.

ஊரார் திகைத்தனர். சரி, தேடிப் பார்ப்போம் என்று குளத்திற்குள் இறங்கினர். ஓசை எங்கு வருகிறது என காதை கூர்மையாக்கி நீருக்குள் அலைந்தனர். நீருக்குள்ளேயே மெல்லிய வெளிச்சம் பூசியதுபோன்ற ஒரு இடத்தில் அகிலமனைத்தும் காக்கும் அம்பிகை சிலை வடிவில் மெல்லிய புன்முறுவல் பூத்த முகத்தோடு காட்சி தந்தாள். தலையில் மெலிதாகத் தெரிந்த ரத்தக் கசிவை பார்த்த பக்தர்கள் மிரண்டனர். நீரைக் குடைந்து நீந்தியவர்கள் சிலையை அள்ளி எடுத்து கரை சேர்த்தனர். அப்போது எங்கிருந்தோ ஒரு குரல் எல்லோரையும் வானோக்கி நிமிர்ந்து பார்க்க வைத்தது. என்னை ஊரின் வடக்கு நோக்கி எடுத்துச் செல்லுங்கள். உரல், உலக்கை சத்தம் கேட்காத இடத்தில் என்னை அமர்த்துங்கள். நான் எப்போதும் உங்களைக் காப்பேன் என்று ஆணையிட்டாள் அன்னை. ஏழுலோக நாயகி எனும் திருப்பெயர் இவளுக்கு ஏன் ஏற்பட்டது? இந்த அன்னையின் திருவுருவம்தான் காரணம். பிராம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, ஐந்த்ரீ, சாமுண்டி என்று அழைக்கப்படும் சப்த மாதர்களின் ஒன்று சேர்ந்த உருவமே ஏழுலோகநாயகி ஆகும்.

பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம் காத்தவளே என்ற அபிராமி அந்தாதியின் போற்றுதலுக்கேற்ப ஈரேழு உலகங்களையும் ரட்சிப்பதால் இவளை ஏழுலோகநாயகி என்றழைக்கின்றனர். இந்த அன்னையின் சிலை அபூர்வமானது என்கின்றனர். சோழர்காலத்திய வேலைப்பாடுகள் நிறைந்தது என்றும் கூறுகின்றனர். சோழர்களோ, பல்லவர்களோ சிவாலயங்கள் கட்டுவதற்கு முன்பு, குறிப்பிட்ட எல்லையில் காளிக்கு கோயில் எழுப்பி, தேவி மகாத்மியம் போன்ற அம்பாளின் வீரத்தைப் பேசும் புராணங்களை பாராயணம் செய்து அங்கு காளியன்னையின் சாந்நித்தியத்தை நிறுத்துவார்கள். பலியிடுதலும் இருக்கும். அதுபோல திருமாந்துறை கோயில் கட்டும்போது ஊரின் எல்லையை காக்க நிறுவப்பட்டதே இந்த ஆலயம் என்றும், காலப்போக்கில் மறைந்து மீண்டும் வெளிப்பட்டிருப்பதாகவும் சிலர் கருதுகின்றனர். பார்ப்பதற்கு சிறிய கோயில்தான். ஆனால், அருள்வதிலும், கீர்த்தியிலும் மிகப் பெரிது. ஆரம்ப காலத்தில் மக்கள் இந்த ஆலயத்திற்கு செல்லவே அஞ்சியிருக்கிறார்கள். ஆனால், இப்போது அன்னை சாந்தமூர்த்தியாக எல்லோரையும் அழைத்து அருள்பாலிக்கிறாள்.

இயற்கை எழில் சூழ்ந்த வனப் பகுதியில் தனி ராஜ்யம் நடத்துகிறாள். சப்த மாதாக்களுக்கு இருப்பது போலவே இந்த ஆலயத்திலும் அன்னைக்கு இருபுறமும் விநாயகர், வீரபத்திரர் திகழ, அம்பிகை வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். நல்ல உயரமான கம்பீரக் கோலம். எட்டு திருக்கரங்களிலும் சூலம், வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், மணி, உலக்கை முதலிய ஆயுதங்களை ஏந்தியிருக்கிறாள். ஒருகரத்தால் தன் பாதத்தைச் சுட்டி தன்னிடம் சரணடையச் சொல்கிறாள். வலது காலை மடித்தும், இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்திருக்கும் கோலம் சிலிர்பூட்டுகிறது. கேசத்தில் நெருப்பு ஜ்வாலை பறப்பது போன்ற அமைப்பும், சற்று தலையை சாய்த்து பார்க்கும் கருணைக் கோலமும் உள்ளத்தை உருக்குகிறது. கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சூரியனார் கோயிலுக்கு செல்பவர்கள் அருகிலுள்ள இக்கோயிலையும் தரிசிக்கலாம்.

Related Stories: