×

கடைசி உலகப்போர் விமர்சனம்

2028ல் ஐ.நா சபையில் இருந்து விலகி, சீனா தலைமையில் சில நாடுகள் ‘ரிபப்ளிக்’ என்ற கூட்டமைப்பை உருவாக்குகின்றன. மூன்றாம் உலகப்போர் நடக்கும் வேளையில், இந்தியா எதிலும் சேராமல் நடுநிலையுடன் இருக்கிறது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் நாசரின் உறவினர் நட்டி, தன்னை ‘கிங் மேக்கர்’ என்று சொல்லி, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுவருகிறார். ஐ.நா சபை ஆயுதப் பயிற்சி சிறப்புப்பிரிவு அதிகாரி தமிழரசன் (ஹிப்ஹாப் ஆதி), மாநில கல்வி அமைச்சராகப் பதவி ஏற்கவுள்ள நாசரின் மகள் அனகாவை காதலிக்கிறார்.

எளிய கல்வி முறையை அமல்படுத்த முயற்சிக்கும் அனகாவை நட்டி கடுமையாக எதிர்க்கிறார். பிறகு கமிஷனுக்காக, துறைமுகத்தில்இருக்கும் சர்வதேசப் பொருளை வெளியில் எடுக்க, தமிழ்நாட்டில் ஒரு கலவரத்தை தூண்டுகிறார். அதில் சிக்கிய ஹிப்ஹாப் ஆதி, தீவிரவாதி என்று கைது செய்யப் படுகிறார். அப்போது நாட்டில் ‘அவசரநிலை’ அறிவிக்கப்படுகிறது. இதை சாதகமாக வைத்து ரிபப்ளிக் நாடுகள் இந்தியாவை மிகக்கொடூரமான முறையில் தாக்குகின்றன.

மூன்றாம் உலகப் போரை, உலகின் கடைசி உலகப் போராக ஹிப்ஹாப் ஆதி எப்படி மாற்றுகிறார் என்பது மீதி கதை. தனது கேரக்டரில் நிறைவாக நடித்துள்ள இயக்குனர் ஹிப்ஹாப் ஆதி, நட்டியையே ஹீரோவாக்கி விட்டார். உலகம் தோன்றிய கதையை சொல்லி, ‘கிங் மேக்கர்’ அவதாரத்தை எடுத்து, ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார் நட்டி. தவிர நாசர், தலைவாசல் விஜய், அனகா, ஹரீஷ் உத்தமன், கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், முனீஷ்காந்த், அழகம் பெருமாள், சிங்கம்புலி, சாரா ஆகியோர் கொடுத்த கேரக்டருக்கு பங்கமின்றி நடித்துள்ளனர்.

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் சிக்கிய தமிழ்நாடு சின்னாபின்னமாக அழிகின்ற காட்சிகளிலும், போர்க்கள களேபரமும் விஎஃப்எக்ஸ் மூலம் நன்கு கையாளப்பட்டுள்ளன. ரிபப் ளிக் கட்டுப்பாட்டில் சிக்கிய மக்கள், சாப்பாட்டுக்கே வழியின்றி தவிக்கும் காட்சியில் நெஞ்சம் கனக்கிறது. அர்ஜூன் ராஜாவின் ஒளிப்பதிவு, காட்சிகளை சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. பின்னணி இசையில் ஹிப்ஹாப் ஆதி விறு
விறுப்பை அதிகரித்துள்ளார். ஆர்.கே.நாகு கலை இயக்கம், பிரதீப் ஈ.ராகவ் எடிட்டிங், மகேஷ் மேத்யூவின் ஸ்டண்ட் காட்சிகள் கவனிக்க வைத்திருக்கின்றன. அழுத்தம் இல்லாத காட்சிகள், படத்தின் நல்ல நோக்கத்தை தடுமாற வைக்கிறது.

The post கடைசி உலகப்போர் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : China ,UN ,World War III ,India ,Tamil Nadu ,Chief Minister ,Nasser ,Natty ,King Maker ,World War ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED உலகின் மிகப்பெரிய உட்புற ஸ்கை ரிசார்ட் சீனாவில் திறப்பு!!