தொழுவோரை வளமாக்குவாள் எழுவரைமுக்கி சப்த கன்னியர்

நம்ம ஊரு சாமிகள் - உடன்குடி  தூத்துக்குடி

Advertising
Advertising

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த நாசரேத் எனும் ஊருக்கு அருகிலுள்ள கிராமத்துக்கு, எழுவரைமுக்கி என்று பெயர். என்ன... பெயரே காரணப் பெயராக உள்ளதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆம் உண்மையிலேயே நடந்த ஒரு சம்பவத்தை உள்ளடக்கியதே இந்த பெயர். ஊருக்கு வடபுறம் ஊருணி உள்ளது. குளத்தை விட பெரிதாய், ஏரியை விட பரப்பளவில் சிறிதாய் இருப்பதுதான் ஊருணி. கோடையிலும் நீர் அளவு குறைந்திருந்தாலும் வற்றாமல் இருக்கும் இந்த ஊருணிதான். பின்வரும் கதைக்கான களம். பல இனத்தவர்கள் வசித்தாலும் சாதியின் பெயரால் எந்தப் பிளவும், பகையும் உருவானதில்லை. மாறாக அண்ணன் தம்பியாய், அக்கா, தங்கையாய் உறவுதான் இருந்தது. பனை மரங்கள், வாழை தோட்டங்கள், தென்னந்தோப்புகள் என இயற்கை வளத்துடன் இருந்த இந்த கிராமத்தில் தோழமையோடு ஆண்கள், பெண்கள் பழகி வந்தனர்.

அப்படித்தான் ஏழு சிறுமிகளும் உற்ற தோழிகளாக வளர்ந்து வந்தனர். பருவம் வந்தபோதும் முந்தையதை விட பலமானது அவர்களின் நட்பு. அந்த ஏழுபேரும் காலையில் தனது வீட்டில் பெற்றோர் கட்டளைக்குட்பட்டு வீட்டு வேலைகளை செய்யும் அவர்கள். பகல் பத்து மணி ஆனதும் வீட்டிலுள்ள அனைவரின் துணிகளையும் எடுத்துக்கொண்டு ஊருணிக்கு சென்று துணி துவைத்து, விளையாட்டாக நீராடி எடுத்து முடித்துவிட்டு பன்னிரெண்டு மணி வாக்கில் வீடு திரும்புவர். மதியம் கஞ்சிதான்(பழைய சாதம்) உணவு. எவர் வீட்டில் கூட்டு அதிகம் இருந்ததோ. ஏழு பேரும் பங்கிட்டு கொள்வார்கள். பகல் 2 மணி முதல் 4 மணி வரை பல்லாங்குழி ஆடுதல், தாய கட்டை விளையாடுவது என பொழுதை கழிக்கும் ஏழுபேரும், மாலை நான்கு தாண்டியதும் சமையலில் இறங்கி விடுவார்கள்.

சமையலில் ஏற்படும் சந்தேகங்களுக்கு அவர்களது ஏழுபேரில் இருக்கும் நாலு பேரோடு பாட்டிகளிடம் விளக்கம் கேட்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்வார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் சமையலை விதவிதமாக செய்வார்கள். ஏன்? மாலையில் சமையல் என்றால் வேலைக்குப் போன தந்தையும், தாயும், உடன் பிறந்த ஆண்களும் மாலையில்தான் வீடு திரும்புவார்கள். அப்போது சாதம் சூடாக இருக்க வேண்டும் என்பதற்காக, கிராமங்களில் பெரும்பாலான ஏழை, எளியோர் வீட்டில் மாலையில்தான் சமையல் செய்வார்கள். சாப்பாட்டுக்கான இலையையும் அவர்களே ஊருணிக்கு துணி குறைவாக கொண்டு போகிற அன்று வெட்டி வருவார்கள். அவர்களுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் வாலிபன் ஒருவன் உதவி செய்வான். தை அமாவாசை, ஆடி அமாவாசை, கடைசி வெள்ளி முதலான நாட்களில் பாயாசத்துடன்தான் சாப்பாடு, அந்த நாட்களில் ஏழுபேரும் ஒருவரை மாற்றி ஒருவர் தங்கள் வீட்டு பாயாசத்தை கொண்டு கொடுத்து சுவை பார்க்கச் சொல்வார்கள்.

‘‘ஏட்டி, இது நான் செஞ்ச பாயாசம்’’ என்று ஒருத்தி கூறினாள். ‘‘புழுவாதட்டி, உன் ஆத்தா செஞ்சிருக்கும்’’ என்று உரிமையாய் அவர்களுக்குள் பேசுவதும் உண்டு. அப்பகுதியைச் சேர்ந்த ஊர் பெரியவர்கள் அவர்களிடம் உரையாடும்போது, உங்க ஏழு பேரும் ஒருத்தனதான் கட்டிக்கப் போறேளா, இப்படி பாசக்காற புள்ளைங்களா இருக்கேளே! என்று பெருமிதமாக கூறுவர். அந்தக் காலத்தில் கன்னிப்பெண் மாதவிடாய் நாட்களில் ஊருணியில் குளிக்க கூடாது. கன்னி தீட்டு தண்ணிக்கும் ஆகாது என்பது வழக்கில் இருந்தது. அதற்கு காரணமும் உண்டு, கோயிலுக்கு விரதம் இருப்பவர்கள் நீராட வரக்கூடும் என்பதாலும், பேய், பிசாசுகள் பிடித்து விடும் என்ற அச்சத்தாலும்கூட அதை எழுதப்படாத சட்டமாக வைத்திருக்கலாம். ஆகவே அந்த நாட்களில் ஏழுபேரில் எண்ணிக்கை குறையும். அவ்வாறு குறைவதை கூட அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டிகள்.

‘‘புள்ளங்களா, இன்னைக்கு என்ன நெட்டச்சி வரல, வெள்ளச்சியும் வரல இரண்டு பேருக்கும் வீட்டுக்கு ஆகாதா’’ என்று கேள்வி கேட்பார்கள். அந்த அளவுக்கு ஏழுபேரின் நட்பு வலுவாக இருந்தது. ஒரு நாள் பகல் பத்துமணி போல தோழிகள் ஏழு கன்னியரும் குளிப்பதற்காக வீட்டிலிருந்து ஊருணி நோக்கி நடந்து வருகின்றனர். செம்மண் வீதியில் ஆடு, மாடு போட்ட சாணம், புழுக்கை இவற்றை மிதித்து விடாமல் பார்த்து பார்த்து நடந்து வருகிறார்கள். முந்தைய நாள் அதிகமாக துணி துவைத்ததால், அன்று தலை துவத்த மட்டும் ஒரு துணியும், அணிந்த ஆடையும், குளித்த பின்பு அணிந்து வருவதற்கான ஆடையும் கொண்டு ஏழு பேரும் இடுப்பில் குடமும் கொண்டு வருகிறார்.

செம்மண் வீதியை பாவாடை துடைத்து வருவதுபோல் வந்த பெண்களை பார்த்து எதிரே வந்த ஒரு பெண், ‘‘ஏ, புள்ளங்களா, பாவாடையில ஒரு தும்ப எடுத்து இடுப்பில சொருகிட்டு போங்கட்டி, தெருவ தூத்துக்கிட்ட போறியோ’’ என்று கூற பதிலுக்கு ‘‘சரி அக்கா’’ என்று ஒருத்தியும் ‘‘சரி, சித்தி’’ என்று ஒருத்தியும், ‘‘சரி மைனி’’ என்று மற்றொருத்தியும், ‘‘சரி அத்தை’’ என்று நாலு பேரும் சொல்லிக்கொண்டு நடையை வேகமாக்கினார்கள். அந்த வழியாக ஆடுகளை ஓட்டி வந்த வாலிபன் அந்த ஏழுபேரையும் பார்த்து ‘‘இங்க என்ன ஓட்டப்பந்தயமா வச்சிருக்கு, இம்புட்டு விருசில போறியே, குளத்தில தண்ணி ஒண்ணும் வத்திப்போவாது. மெல்லமா போங்க’’ என்றான்.‘‘ஏல, உன் ஜோலிய பாத்திட்டு போல’’ என்றாள் ஒருத்தி. அப்போது ஆடு மேய்க்கும் வாலிபன். ‘‘தரை அதிருதுல்லா, பூமித்தாய் சாவம் போடுவா’’‘‘அது எங்களுக்கு தெரியும் நீ போ மாக்கான்.’’ என்றாள் மற்றொருத்தி.

‘‘ஏட்டி என்ன மாக்கான்னா’’ சொல்லுதே, (மாக்கான்னா முட்டாள் என்று அர்த்தம்)‘‘ஏல இந்தாரு ஏட்டி, ஓட்டின்னேன்னா பல்லு தட்டிப்போடுவோம்’’ என்றாள் இன்னொருத்தி. ‘‘உங்க கிட்டெல்லாம் மனுஷன் பேசுவானா’’ என்றபடி அந்த ஆடு மேய்க்கும் வாலிபன் தனது ஆடுகளை ஓட்டிக்கொண்டு வேறு திசை நோக்கி பயணித்தான். ஏழு கன்னியர்களும் ஊருணி வந்து சேர்ந்தனர். ஒருத்தி நீருக்குள் இடுப்பளவு இறங்கி விட்டு ‘‘ஏய், மேல உள்ள தண்ணி சுடுதுட்டி, உள்ளே குளிருதுட்டி’’என்றாள். ஏழு பேரும் கட்டிய உள்பாவாடையோடு ஊருணிக்குள் இறங்கி குளித்தனர். மற்ற துணிகளையும் மாத்த வேண்டிய துணியையும் ஊருணி கரையோரம் இருந்த ஆலமரத்தின் கீழ் வைத்திருந்தனர். தொட்டு விளையாட்டு காரணமாக குளிக்க இறங்கியவர்கள் நேரம் போனதே தெரியாமல் குளித்துக் கொண்டிருந்தனர்.

தன்னை மாக்கான் என்ற காரணத்தால் ஏழு பெண்கள் மீதும் கோபம் கொண்டிருந்த அந்த ஆடுமேய்க்கும் வாலிபன். அந்த பெண்களிடம் குறும்பு செய்ய வேண்டும் என்று எண்ணத்தோடு ஊருணி கரைக்கு வந்தான். ஊருணியில் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகள் அனைத்தையும்  மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டான். இதைப்பார்த்துவிட்ட பெண்கள் ஏழுவரும், ஆடைகளைக் கொடுத்துவிடும்படி கெஞ்சினர். அவன் கேட்கவில்லை. சிறிது தூரம் சென்று மரத்தின் பின்னே மறைந்து நின்று கொண்டான். பெண்கள் ஏழுபேரும் கண் கலங்கினார்கள். செய்வதறியாது திகைத்தனர். எப்படிக் கரையேறுவது? என்று புரியவில்லை. தண்ணீருக்குள்ளே நின்றதால் கால்கள் விறுவிறுத்துப்போனது. ஏழுவரும் பேசி, ஒரு முடிவுக்கு வந்தனர். அந்த முடிவின்படி ஏழு பேரும் ஊருணிக்குள் மூழ்கினார்கள். அதன் பிறகு அவர்கள் எழுந்திருக்கவே இல்லை.

சோதித்தது போதும் என்று தனக்குள் ஆசுவாசப்படுத்திக்கொண்ட ஆடுமேய்க்கும் வாலிபன் துணிகளோடு உருணிக்கு வந்து தேடினான். ஒவ்வொரு வரையும் பெயர் கூறி அழைத்தான். யாரும் எழுந்து வரவில்லை. கரையில் நின்று கத்தியவன். கடவுளை வேண்டி தான் அறியாது செய்த தவறை உணர்ந்து கதறினான். யாருக்கும் கேட்க வில்லை, கடவுளும் செவி மடுக்கவில்லை. ஏழு பேர் பெற்றோரிடமும் என்ன பதில் சொல்லுவோம். ஊரார்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் உரைக்கப்போகிறோம். இனி எப்படி இந்த மண்ணில் வாழப்போகிறோம். தனக்கும் கூட பொறந்தவள் இருக்காளே, விளையாட்டாக செய்த காரியம் ஏழுபேர் சாவில முடிந்து விட்டதே என்று மனம் வருந்திய வாலிபன், அந்த ஊருணியிலேயே வீழ்ந்து மாண்டான். ஊருக்குள் ஏழு பெண்களைக் காணாமல் பெற்றோர்கள் தேட, அன்றிரவு ஊர் பூசாரியின் கனவில் ஏழு பெண்களும் காட்சி தந்து வனப்பகுதியில் தெய்வமாய் தாங்கள் எழுந்தருளியிருக்கிறோம் எனச்சொல்லி, ‘எங்களை பூஜித்து வழிபட்டால், அந்த குடும்பத்தையும், இந்த ஊரையும் வளமாக்குவோம்’ என்று கூறினர். அதன்படி அந்த ஏழுபேருக்கும் கோயில் எழுப்பி அந்த ஊர்க்காரர்கள் வழிபட்டு வருகின்றனர்.

ஏழுபேர் ஊருணியில் மூழ்கி இறந்ததால் அந்த கிராமத்தின் பெயர் அன்று முதல் எழுவரைமுக்கி என்று அழைக்கப்பட்டது. அந்த கோயில் கன்னிக்கோயில் என்றும் சப்த கன்னியர்கள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. எழுவரைமுக்கி அருகேயுள்ள பெட்டைக்குளம் வனப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீசப்தகன்னியர் திருக்கோயில். ஆடு மேய்த்த வாலிபன் நினைவாக ஊருணியில் நடுகல் உள்ளது. எழுவரைமுக்கி கிராமத்தில் சப்தகன்னியருடன், அய்யனார் மற்றும் முத்துபார்வதி அம்மன் ஆகியோரையும் சேர்த்து ஒன்பது  தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர் முத்துபார்வதி அம்மன் கோயில் பூசாரி மணிப்பிள்ளை கூறும்போது, இங்குள்ள ஊருணியில் குளிச்ச 7 கன்னிமார்களின் துணிகளை ஆடு மேய்ச்சவன் எடுத்து வச்சுக்கிட்டான். அவன் கொடுக்க மறுத்ததுனால ‘நாங்கள் கல்லாய் சமைகிறோம். நீயும் கல்லாய்ப் போ’ என்று சபித்துவிட்டு ஏழு கன்னியரும் கல்லானார்களாம். அவங்க நீரில முங்கின அன்னைக்கு ராத்திரி  ஊரம்மன் கோயிலான முத்து பார்வதி அம்மன் கோயில் பூசாரியின் கனவில் தோன்றிய சப்த கன்னியர், ‘நாங்கள் ஊருணியில் இருந்து சற்று தொலைவில் கற்சிலையாய் கிடக்கிறோம். எங்களுக்கு நிலையம் போட்டு பூச பண்ணுங்க, ஊர் செழிக்கும்’ என்று கூறி மறைந்தார்களாம்.

‘‘கார்த்திகை இரண்டாவது செவ்வாய் தோறும் இங்கு பாயசத்தை பெருக்கி படப்பு கஞ்சி ஊத்துறோம். பூசாரியான நான் தான் முன்னாடி வருவேன், என்னைத் தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த ஏழு சிறுமிகளை பின்னாடி அலங்கரிச்சு அழைத்து வரவும், கணியான் பின் தொடர விழா நடக்கிறது. ஏழு சிறுமிகளுக்கும் கன்னிமார் நினைவாக குங்குமம், பூ, மஞ்சள் கொடுத்து கௌரவிக்கிறோம். அவர்களுக்கு பரிமாறிய பின்பு மற்றவர்களுக்கு பனை ஓலைப்பட்டையில் கஞ்சி வழங்குகிறோம்’’ என்கிறார். (பட்டை என்பது பனை ஓலையால் செய்யப்பட்டது) அருகிலுள்ள ஊரில் வசிக்கும் தம்பதியருக்கு வெகு நாட்களாகக் குழந்தை இல்லை. அவர்கள் இங்கு வந்து சப்தகன்னியரை வழிபட்டுச் செல்ல, இப்போது கருவுற்றிருக்கிறாள் அந்தப் பெண்மணி. இப்படி எண்ணற்ற சம்பவங்களை, சப்தகன்னியரின் அருளுக்கு உதாரணமாகச் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

 

படங்கள்: உடன்குடி கோ. சாமுவேல் ராஜ்

சு.இளம் கலைமாறன்

Related Stories: