கம்யூனிஸ்ட் பெண் பிரமுகரை எரித்து கொல்ல முயற்சி

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை எட்வர்ட் பார்க் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி (52). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து, தனியாக வசித்து வருகிறார். மேலும், ஓட்டேரி பிரிக்ளின் ரோடு திருவிக தெரு சந்திப்பு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 11 மணிக்கு இவர், கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இவரது தோழி ராணியின் கணவர் குமார், பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென ரேணுகா தேவி மீது ஊற்றி தீக்குச்சியை கொளுத்தி போட்டுள்ளார். ஆனால், தீக்குச்சி கீழே விழுந்தது. உடனே ரேணுகாதேவி சுதாரித்துக் கொண்டு கத்தி கூச்சலிட்டார்.சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரேணுகாதேவி மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர், குமாரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமாரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ரேணுகாதேவியின் தோழி ராணி, தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இதற்கு ரேணுகாதேவி தான் காரணம் என நினைத்து அவரை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிக்க வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்….

The post கம்யூனிஸ்ட் பெண் பிரமுகரை எரித்து கொல்ல முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: