திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அஷ்டலிங்க தரிசனம்

பஞ்ச பூதத்தலங்களுள் ஒன்றாக திருவண்ணாமலை திகழ்கிறது. அக்னி தலமாதலால் கார்த்திகை தீபம் இங்கு விசேஷமாகக் கொண்டாடப் படுகிறது. தீபத் திருநாளில் மகாதீபம் காண திருவண்ணாமலை செல்வோர் அங்கு கிரிவலப் பாதையில் அருளும் அஷ்டலிங்கங்களைத் தரிசித்தால் வாழ்வில் வளங்கள் சேரும் என நம்பப்படுகிறது. அந்த அஷ்டலிங்கங்களைப் பற்றிய தகவல்கள் இங்கே:

இந்திரலிங்கம்

தேவேந்திரன் இந்த லிங்கத்தை வழிபட்டுதான் தன் பதவியைக் காப்பாற்றிக் கொண்டாராம். கிரிவலப் பாதையில் இந்த லிங்கத்தை தரிசித்தால் உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்கிறார்கள் அனுபவசாலியான பக்தர்கள்.

அக்னிலிங்கம்

பல யுகங்களாக திருவண்ணாமலையை அங்கப்பிரதட்சிணம் செய்ததால் பதினோரு ருத்ரர்களில் அடங்கிய மூன்று ருத்திர மூர்த்திகளின் திருமேனி நெருப்பாகக் கொதிக்க ஆரம்பித்தது. அவர்கள் மூவரும் ஒரு புனிதமான செவ்வாய்க்கிழமை அன்று திருவண்ணாமலையை வலம் வந்து இந்த அக்னி லிங்கத்தை வழிபட்டு தங்கள் தேகத்தின் உஷ்ணத்தை நீக்கி, குளிர்ந்தார்கள். இந்த லிங்கத்தை வழிபட்டால், மூர்க்க குணம் விலகுவதோடு, எதிரிகள் தொல்லையும் இருக்காது.

எமலிங்கம்

எமதர்மராஜன் திருவண்ணாமலையை கிரிவலம் வருகையில் ஓரிடத்தில் அவர் பாதம் பட்ட  அடிச்சுவடுகளெல்லாம்  தாமரைப்பூக்களாக மலர்ந்தன. அவ்விடத்தில் ஜோதிமயமான லிங்கம் தோன்ற அதுவே எமலிங்கம் ஆயிற்று. இந்த எமலிங்கத்தை வணங்கினால், துர்மரணம் ஏற்படாது; முக்கியமாக மரண பயம் விலகி மனம் அமைதியுறும்.

நிருதிலிங்கம்

பலயுகங்களாக நிருதீஸ்வரர் என்பவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தார். அப்படி அவர் வலம் வருகையில் ஒரு நாள் தென்மேற்குத் திசையில் ஒரு குழந்தையின் மழலை ஒலியும், பெண்ணின் சலங்கை ஒலியையும் கேட்டார். அந்த தெய்வீக ஒலிகளின் சிலை ரூபமாக அமைந்திருக்கிறது இந்த லிங்கம். இதனை தரிசிப்பவர்கள் பிள்ளைப் பேறு பெறுவார்கள்; கலையில் ஆர்வம் உள்ளவர்கள் அதில் சிறந்து விளங்குவார்கள்.

வருணலிங்கம்

வருணபகவான் அண்ணாமலையை தன் முட்டிக்கால்களாலும், ஒற்றைக்காலாலும் வலம் வந்தார். அப்போது சூரிய லிங்கத்தை அடுத்த ஓரிடத்தை அவர் நெருங்கியபோது நீரூற்று ஒன்று வானத்தைத் தொடும் அளவு உயர்ந்தது. அந்நீரைத் தெளித்து அண்ணாமலையாரை வணங்கினார் வருணபகவான். அப்போது அங்கே ஒளிமயமான லிங்கம் ஒன்று தோன்றியது. அதுவே வருண லிங்கம் எனப்பட்டது. இந்த லிங்கத்தை வணங்குபவர்கள் வளம் பெறுவார்கள்.

வாயுலிங்கம்

வாயுபகவான் சுழுமுனையில் சுவாசத்தை நிலை நிறுத்தி, திருவண்ணாமலையை வலம் வரத் தொடங்கினார். அவர் அடி அண்ணா மலைப் பகுதியைத் தாண்டியவுடன் ஒரு சுகந்தமான நறுமணம் வீசுவதை உணர்ந்தார். ஒரு குறிப்பிட்ட திதியில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில், குறிப்பிட்ட ஹோரையில் பஞ்சகிருத்திகா என்ற செடியில் பூ பூக்கும். அந்த நேரத்தில் ஏற்பட்ட நறுமணமே அவர் உணர்ந்த வாசனை. அந்தப்பூக்களின் நடுவே வாயுபகவான் கண்ட சுயம்புலிங்கமே வாயுலிங்கம். இந்த லிங்கத்தை வழிபட்டால் மூச்சுக்குழல், நுரையீரல் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.

குபேரலிங்கம்

குபேரன் சிரசிற்கு மேல் தன் இரு கரங்களையும் கூப்பியவாறு திருவண்ணாமலையை வலம்  கொண்டிருந்த போது திருமாலும், திருமகளும் இணைந்து அருணாசலேஸ்வரரை சக்ரபாணி வடிவில் தரிசனம் செய்வதைக் கண்டார். அந்த இடத்தில் சுயம்புலிங்கம் தோன்றியது. அதுவே குபேரலிங்கம். இந்த லிங்கத்தை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

ஈசான்யலிங்கம்

பினாகீச ருத்ரர் என்ற தேவலோக யக்ஷன் ஒருவர் கண்களை மூடியவாறே பல யுகங்களாக திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அதிகார நந்தி பகவான் அருணாசலேஸ்வரரை வணங்கிய இடத்தில் சுயம்புவாகத் தோன்றிய லிங்கமே ஈசான்யலிங்கம். இந்த லிங்கத்தை தரிசித்தால், உயர் பதவியும், எத்துறையில் இருந்தாலும் அதில் தலைமை பொறுப்பேற்கும் வாய்ப்பும் கிடைக்கும். இவ்வாறு, எட்டு லிங்கங்களையும் வழிபட்டு அருணாசலேஸ்வரர் கோயிலுக்குச் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலையம்மனையும் வழிபட்டால் நம் துன்பங்கள் எல்லாம் விலகி நலம் பெறலாம்.

Related Stories: