திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும்  திருக்கல்யாண உற்சவத்தையொட்டி நேற்று மாலையில் தோள் மாலை மாற்றும் வைபவம்  நடந்தது. அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த 8ம் தேதி தொடங்கியது. தினமும்  சுவாமி, அம்பாளுக்கு யாகசாலை பூஜை, சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று  முன்தினம் மாலை திருச்செந்தூர் கோயில் கடற்கரையில், கந்தசஷ்டியின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது.

7ம் திருவிழாவான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 3.30  மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 5.15  மணிக்கு கோயிலில் இருந்து தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பட்டார்.  வீரராகவபுரம் தெரு, தெற்கு ரதவீதி வழியாக தெப்பக்குளம் அருகே உள்ள தபசு  மண்டபத்தில் வந்திறங்கினார். மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் கோயிலில் இருந்து புறப்பட்டு தபசு மண்டபத்தில் தெய்வானை அம்பாளுக்கு காட்சி  கொடுத்தார்.

தெற்கு ரதவீதி மேல ரதவீதி சந்தியில் தோள்மாலை மாற்றும் வைபவத்தை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் சுவாமி, அம்பாள் ரத வீதிகள், மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து இரவில் கோயிலை அடைந்தனர். மேலகோபுர  வாசலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் வைதீக  முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் மொய் எழுதி பிரசாதம் பெற்றனர்.

Related Stories: