கந்தசஷ்டி விழாவையொட்டி விராலிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின்  முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று  மாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர். அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்தி வழங்கியதாக கூறப்படும் விராலிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 8ம்தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா துவங்கிய நாள் முதல் முருகன் வள்ளி தெய்வானையுடன் காலை மாலை இரு வேளையும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.

விழாவின் முக்கிய விழாவான சூரசம்ஹாரம் விழா நேற்று (13ம் தேதி) மாலை சட்டமன்ற அலுவலகம் முன்பு நடைபெற்றது.  சிங்க முதத்தில் தோன்றும் சூரனை வேல் வாங்கி வதம் செய்யும் நிகழ்ச்சியும்  சூரன் மரமாக மாறும் நிகழ்ச்சியும், பின்னர் சேவல் மயிலாக மாறும் நிகழச்சியும் நடைபெற்றது. விராலிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில்  இருந்து  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா, அரோகரா கோஷத்துடன் முருகனை வழிபட்டனர். இன்று (14ம் தேதி) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இலுப்பூர் டிஎஸ்பி கோபாலசந்நிரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் அலுவலர்கள், மண்டகப்படிதாரரர்கள், உபயதாரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: