×

கன்னி விமர்சனம்

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் மூலிகைகள் இருக்கும் பகுதியில் அஸ்வினி சந்திரசேகர் தனது அம்மா, அண்ணன், அண்ணி மற்றும் அவர்களின் மகள்களுடன் வசிக்கிறார். அப்போது மூலிகையின் ரகசியத்தையும், மாந்திரீக விஷயத்தையும் அறிந்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கத் துடிக்கும் சில மருத்துவர்கள், அடியாட்களை அனுப்பி அண்ணன் மற்றும் அண்ணியைக் கொல்கின்றனர். பிறகு அஸ்வினி சந்திரசேகரைக் கொல்ல அடியாட்கள் துரத்துகின்றனர்.

தனது பூர்வீகத்தை விட்டுவிட்டு, அண்ணன் மகள்களை அழைத்துக்கொண்டு, மலைக்காட்டிலுள்ள தாத்தா வீட்டுக்குச் செல்கிறார் அஸ்வினி சந்திரசேகர். அதிக ஆட்கள் நடமாட்டமோ, வாழ்வதற்கான அடிப்படை வசதிகளோ இல்லாத அங்கு வசிக்கும் அவரை கொல்ல அடியாட்கள் முயற்சிக்கின்றனர். அவர்களிடம் இருந்து அஸ்வினி சந்திரசேகர் உயிரை காப்பாற்றிக்கொண்டாரா? மூலிகைகளையும், மாந்திரீக ரகசியங்களையும் காப்பாற்றினாரா என்பது மீதி கதை.

சேம்பி என்ற மலைக்கிராமத்துப் பெண்ணாக மிகச்சிறப்பாக நடித்துள்ள அஸ்வினி சந்திரசேகருக்கு விருதுகள் கிடைக்கும். அவரது அண்ணன் மணிமாறன், அண்ணி தாரா கிரிஷ் ஆகியோர் அற்புதமாக நடித்துள்ளனர். வில்லனாக வரும் ராம் பரதன், மலைவாசி மனிதராகவே மாறியுள்ளார். மற்ற வேடங்களில் நடித்தவர்களும் மனதில் பதிகின்றனர். நிஜமான ஹீரோ லொகேஷன்கள்தான். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகிலுள்ள புலஹள்ளி மற்றும் ஜவ்வாது மலைப் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் இதயத்தை வருடுகின்றன.

இயற்கை வெளிச்சத்தில் ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். காட்சிகளுக்கேற்ற யதார்த்தமான ஒளிப்பதிவு, அனைத்துச் சம்பவங்களையும் மனதில் ஆழமாகப் பதியவைக்கின்றன. பாரம்பரியமான இயற்கை வைத்தியத்தைப் போற்றும் மூலிகைகள் குறித்தும், பல்வேறு அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கும் இடங்களைச் சுற்றியும், மாந்திரீக விஷயத்தைப் பற்றியும் பேசியிருக்கும் இப்படத்தை தனது பின்னணி இசையால் உச்சத்தைத் தொட வைத்துள்ளார், இசை அமைப்பாளர் செபாஸ்டியன் சதீஷ்.

பாடல்கள் கதையையொட்டி இருக்கின்றன. மாயோன் சிவா தொரப்பாடியின் இயக்கம் மென்மையாகவும், அழுத்தமாகவும் இருக்கிறது. ஆனால், சித்த மருத்துவத்தின் மகிமை பற்றி அழுத்தமாகச் சொல்லவில்லை. பல காட்சிகள் விஷூவல் ட்ரீட்டாக கடந்து செல்கின்றன. எனினும், பாரம்பரிய வைத்திய முறையின் சிறப்புகளைச் சொல்ல முயன்ற அவருக்கு பாராட்டுகள். மலையில் நடக்கும் சம்பவங்களை மலைவாசிகளோ, காவல்துறையோ கண்டுகொள்ளாதது ஏன்? வெளிநாட்டு டாக்டர்கள் பேசும்போது சப்-டைட்டில் போட்டிருக்கலாம்.

The post கன்னி விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ashwini Chandrasekhar ,Kanni ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்