×

தியேட்டர்களில் ரீபிளேஸ் தமிழ் படங்களை தட்டித் தூக்கிய மலையாள படங்கள்

சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக தமிழ் படங்களை நீக்கிவிட்டு தியேட்டர்களில் மலையாள படங்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. இந்த மாற்றத்துக்கு ஒரே காரணம், சமீபத்தில் வெளியான மலையாள படங்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்ததுதான். பிப்ரவரி 9ம் தேதி ‘பிரேமலு’ என்ற மலையாள படம் ரிலீசானது. நஸ்லன் கஃபூர், மமிதா பைஜு என்ற இரு இளம் ஜோடி நடித்திருக்கிறார்கள். கிரிஷ் ஏ.டி. என்பவர் இயக்கியுள்ளார். இதில் எந்த பிரபலமும் நடிக்கவில்லை.

படம் வெளியாகும் வரை இப்படியொரு படம் வருவதே யாருக்கும் தெரியாது. ஆனால், ரிலீசான சில நாட்களிலேயே டாக் ஆஃப் தி டவுனாக இப்படம் மாறியது. தென்னிந்தியா முழுக்கவே பிரேமலு ஜுரம் ரசிகர்களை வாட்டி வதைக்க, ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். தொடர்ந்து பிப்ரவரி 22ம் தேதி ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற மலையாள படம் வந்தது. இதுவும் பிரேமலு போல் அதிகம் அறிமுகம் இல்லாத முகங்கள் நடித்த படம்.

சிதம்பரம் இயக்கிய படம். இந்த படமோ கேரளாவில் கூட சுமாராக ஓட, தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபீசில் அதகளம் செய்ய ஆரம்பித்தது. குணா படத்தையும் தமிழையும் (வசனங்கள் மூலம்) இந்த படம் கொண்டாடி இருப்பது தமிழ் ரசிகர்களுக்கு படம் நெருக்கமாக ஒரு காரணம். ஆனால், முக்கிய காரணம், இந்த படத்தின் திரைக்கதைதான். நிஜமாக நடந்த சம்பவத்தின் பின்னணியில் உருவாகியிருந்த இந்த கதையை தமிழ் ரசிகர்கள் வேறொரு கட்டத்துக்கு கொண்டு சென்றனர். விளைவு, தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.50 கோடி வசூலை இப்படம் பார்த்தது. சமீபத்தில் வந்த எந்த தமிழ் படமும் இந்த வசூலை நெருங்க முடியவில்லை.

மற்றொரு புறம், மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’, பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’, கடந்த வாரம் வெளியான பஹத் பாசிலின் ‘ஆவேஷம்’, வினீத் சீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் நடித்த ‘வருஷங்களுக்கு சேஷம்’ ஆகிய படங்களும் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.  இதனால் கடந்த இரண்டரை மாதமாக வாரத்துக்கு 5 முதல் 7 தமிழ் படங்கள் வரை வெளிவந்தும் எந்த படமுமே ஓடவில்லை. இதனால், தமிழ்நாட்டில் அந்த படங்களை தியேட்டர்களிலிருந்து நீக்கிவிட்டு, இந்த மலையாள படங்களை திரையிடும் நிலை உருவாகியுள்ளது.

The post தியேட்டர்களில் ரீபிளேஸ் தமிழ் படங்களை தட்டித் தூக்கிய மலையாள படங்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Tamil Nadu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நீட் தேர்வை மையப்படுத்தி உருவான அஞ்சாமை