ஜோதியுள் கலந்த சுடர்கள்!

அருணகிரி உலா - 60

Advertising
Advertising

மயேந்திரப் பள்ளியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள தலம், இன்று ஆச்சாள்புரம் என்றழைக்கப்படும் நல்லூர்ப் பெருமணம். ‘நல்லூர்ப் பெருமண மேய நம்பானே’ - ஞானசம்பந்தர்.‘‘வைகாசி மூலத்தன்று, திருநீலநக்கநாயனார், முருகநாயனார், திருநீலகண்டயாழ்ப்பாணர், சிவபாத இருதயர் முதலானோர் தீயுட் புகுந்த பின்னர் தம் காதலி தோத்திர பூர்ணாம்பிகையைக் கைப்பற்றி சம்பந்தப் பெருமான் சிவஜோதியுள் புகுந்து ஒன்றி உடனாய் முக்தி பெற்ற தலம்’’ என்பார் உ.வே.சா அவர்கள். இதைக் கேட்டபின் ஆச்சாள்புரம் சென்றடையும்போது நமக்கு உடலெல்லாம் புல்லரிக்கிறது.

‘‘ஆச்சாள் (அம்பிகை), சம்பந்தர் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் வெண்ணீறளித்துச் சிவ ஜோதியுள் கலக்கச் செய்ததால் ஆச்சாள்புரம் என ஆயிற்று’’ என்றும் குறிப்பிட்டுள்ளார் உ.வே.சா அவர்கள். சிதம்பரத்திலிருந்தும் ஆச்சாள்புரத்திற்குச் சுலபமாக வரலாம். சிதம்பரம் - சீகாழிச் சாலையில் கொள்ளிடம் புதிய பாலத்தைக் கடந்து ஊருக்குள் சென்று பெயர்ப்பலகையைக் கவனித்து இடப்புறம் திரும்பி 8 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். இறைவி, திருவெண்ணீற்றுமையம்மை என்ற சுவேத விபூதி நாயகி.

இறைவன், சிவலோகத் தியாகேசர். வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமதக்ன முதலான முனிவர்கள் பதினாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் செய்ய, சுவாமி கருணை கூர்ந்து சிவலோகம் காட்டினார் என்பது புராணக் குறிப்பு. கல்வெட்டுகளில் அம்பிகையின் நாமம் சொக்கியார் என்று காணப்படுகிறது. ஐந்து நிலைகளை உடைய ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் விநாயகரை வணங்கி, கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி இவற்றைக் காண்கிறோம். விசாலமான முன் மண்டபம் நம்மை வரவேற்கிறது. வலது ஓரத்தில் சனீஸ்வரரும், தூணில் ஹனுமானும் காட்சியளிக்கின்றனர்.

சம்பந்தரின் திருமண ஐதீக விழா ஆண்டுதோறும் நடக்கிறது. முன்மண்டபத்தில் காலையில் உபநயனச் சடங்கும், மாலையில் திருமண விழாவும், வீதியுலாவும், பின்னிரவில் சிவஜோதியில் ஐக்கியமாகும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. தனிச்சந்ந0தியில் சம்பந்தப் பெருமான் தோத்திர பூர்ணாம்பிகையுடன் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். ஜோதியில் கலப்பதற்கு முன்னால் அவர் பாடிய பதிகம் ‘காதலாகிக் கசிந்து’ எனும் பாடலுடன் துவங்குகிறது. நுழைவாயிலில் குட்டி முருகன் காட்சி அளிக்கின்றான். உள்ளே துவார விநாயகரும், பாலமுருகனும் உள்ளனர். கருவறையில் சிவலோகத் தியாகேசர் அழகிய லிங்கத் திருமேனியாகக் காட்சி அளிக்கிறார்.

சுவாமி சந்நதியின் மேற்புறம் வண்ணச் சுதையில் சம்பந்தர் ஜோதியில் ஐக்கியமான காட்சி உள்ளது. கருவறைக் கோட்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகியோரை வணங்கலாம். பிராகார வலம் வரும்போது அறுபத்து மூவர், முருகன், சோமாஸ்கந்தர் ஆகியோரைத் தரிசிக்கிறோம். அன்று திங்கட்கிழமையாதலால் பக்தர் கூட்டம் ‘ரிண விமோசனர்’ எனப்படும் லிங்கம் உள்ள சந்நதியில் அமைதியாக அமர்ந்திருக்க, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததைக் கண்டு மகிழ்ந்தோம். மகாலட்சுமி, கோஷ்டத்தில் உள்ள பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோரை வணங்கி வரும்போது நடராஜர், பைரவர், சட்டநாதர், சூரியன் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

விசாலமான வெளிப்பிராகாரத்தில் மாவடி விநாயகரை வணங்கி, முருகன் சந்நதியை அடைகிறோம். வள்ளி-தெய்வானையுடன் காட்சி அளிக்கும் அவன் சந்நதியில் தலத்திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம்.‘மூலமுண்டக அனுபூதி’ எனத் துவங்கும் இப்பாடலின் முதல் நான்கு அடிகள் யோகக் கருத்துகள் நிரம்பியனவாக உள்ளன. ‘‘மூலாதாரக் கமலத்திலுள்ள அனுபவ ஞானத்தைத் தரும் மந்திரம், சூரிய சந்திர அக்னி மண்டலங்கள், ஆறாதாரங்கள் ஆகிய அனைத்தும் ஒடுங்கும் பரவெளியில் பல வகையான தாளங்கள், சந்தங்கள் கலக்கும் நடன தரிசனத்தைக் கண்டு, நூறு கோடி சந்திரர்களின் ஒளிபோன்ற சிவப் பேரொளியை சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ?’’ என்று முருகனைக் கேட்கிறார் ஞானசம்பந்தர்.

சிவஜோதியில் கலந்த தலத்தில் இவ்வாறு அவர் பாடியிருப்பது மிகப் பொருத்தமாக உள்ளது. ‘‘சத கோடி சந்த்ர ஒளி சந்தியாதோ’’ என்கிறார்.

(‘‘சந்திரவெளிக்கு வழி அருள்வாயே’’ - கொங்கணகிரித் திருப்புகழ்) பாடலின் பிற்பகுதி:

‘‘சூலி, அந்தரி, கபாலி, சங்கரி,

    புராரி, அம்பரி, குமாரி, எண்குண

    சுவாமி பங்கி, சிவகாம சுந்தரி உகந்த சேயே

சூர சங்கர குமார இந்திர

    சகாய அன்பர் உபகார சுந்தர

    குகா எனும் சுருதி ஓலம் ஒன்ற நடனங்கொள் வேலா

சீல வெண்பொடி இடாத வெஞ்சமணர்

    மாள வெங்கழுவிலேறும் என்று பொடி

    நீறிடும் கமல பாணி சந்த்ரமுக கந்தவேளே

தேவ ரம்பை அமுதீண மங்கை தரு

    மான் அணைந்த புய தீர சங்கர

    தியாகர் வந்துறை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே’’

பொருள்: சூலாயுதத்தை ஏந்தியவள், பராகாச வடிவை உடையவள், கபாலம் ஏந்தியவள், சங்கரி, முப்புரம் எரித்தவள், சிதாகாசத்தில் உறைபவள், இளையவள், எண் குணத்தவரான சிவபெருமான் பங்கில் இருப்பவள் ஆகிய சிவகாமசுந்தரி விரும்பும் குழந்தையே! சூரனைச் சங்கரித்த குமரனே! இந்திரனுக்கு உதவி செய்தவனே! அடியார்களுக்கு உபகாரியே! அழகா, குகா என்று வேதங்கள் முறையிட்டு ஒலிப்ப திருநடனம் செய்யும் வேலவனே! தூய வெண்ணீற்றை அணியாதவர்களும், பொல்லாதவர்களுமான சமணர்கள் கழுவில் ஏறுமாறு திருவிளையாடல் புரிந்து, அடியார்களுக்கு வெண்பொடியை அளித்த தாமரை போன்ற கரத்தை உடையவனே!

சந்திரன் போன்று ஒளி வீசுகின்ற முகத்தை உடைய கந்தப்பெருமானே! தேவரம்பை போன்றவளும், பாற் கடலமுதுடன் பெறப்பட்ட லக்ஷ்மியாகிய மான் ஈன்ற வள்ளியை அணைந்த புயத்தை உடையவனே! சங்கர தியாகர் எனும் சிவபெருமான் வந்து உறைகின்ற நல்லூர் எனும் தலத்தில் அமர்ந்துள்ளவனே! (சிவலோகத் தியாகர் என்பது ஆச்சாள்புர சிவபெருமான் திருநாமம். ஆனால் கும்பகோணத்திற்கடுத்த நல்லூர் எனும் தேவாரம் பெற்ற தலத்தில் வீதிவிடங்கத் தியாகர் மூன்று நாள் வந்துறைந்ததாக நல்லூர்ப் புராணம் கூறுவதால், இப்பாடல் அங்கு பாடியதாக இருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது)

தனிவாயில், சுற்று மதிலுடன் இறைவி சந்நதி உள்ளது. பலிபீடம், நந்தியை வணங்கி, முதல் சுற்றில் விநாயகர் சண்டிகேஸ்வரியை வணங்கி அம்பிகையைத் தரிசித்து மகிழலாம். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் ‘வெண்ணீற்றுமை பிள்ளைத் தமிழ்’ பாடியுள்ளார். தருமபுரம் ஆதீனத்தாரால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள காரணத்தால் இன்று நாம் இறைவன் இறைவியரைத் தரிசித்து மகிழ முடிகிறது. ‘‘அப்பா சம்பந்தப் பெருமானே, எல்லா வீட்டுத் திருமணங்களுக்கும் அழையா விருந்தாளியாகச் சென்று உணவு உண்ணும் நான் உன் திருமணத்திற்கு வராமல் இருந்து விட்டேனே,

அப்படி வந்திருந்தால் எனக்கும் சிவலோகப் பதவி கிட்டியிருக்குமே’ என்று ஒரு புலவர் புலம்பினாராம்! ஆச்சாள்புரத்தை விட்டுப் புறப்படும்பொழுது நம் மனத்திலும் அப்படி ஒரு எண்ணம் தோன்றி மறைவது நிஜம்தானே! சிதம்பரம் என்றால் திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக நமது நினைவுக்கு வருவது கல்விக் கோயிலாகிய அண்ணாமலைப் பல்கலைக்கழகம்தான். பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து நேரே சென்றால் இறுதியில் சாலை ஓரத்தில் அமைந்துள்ளது, அருணகிரியார் பாடல் பெற்ற திருவேட்களம் எனும் ஆலயம். இறைவன், பாசுபதேஸ்வரர்;

இறைவி, சற்குணாம்பிகை எனும் நல்ல நாயகி. இறைவன், அர்ஜுனனது தவத்தை மெச்சி பாசுபதாஸ்திரம் கொடுத்த தலம். அர்ஜுனன் இறைவனைச் சாடியபோது கோபம் கொண்ட உமையவளை அமைதிப்படுத்தி ஈசன் அவளை ‘சற்குணா’ என்றழைத்தார் என்பது புராணம். பாசுபதாஸ்திரம் வேண்டிக் காட்டில் தவம் செய்துவந்த அர்ஜுனனும், வேடன் உருவில் காட்டிற்கு வந்திருந்த சிவபெருமானும் ஒரேநேரத்தில் ஒரு பன்றி மீது அம்பு எய்கின்றனர். இருவரும் அதன் மீது உரிமை கொண்டாடுகின்றனர். போர் மூண்டது. (எனவே இத்தலத்திற்கு மஹா யுத்த களம் என்ற பெயரும் உண்டு என்கிறார் உ.வே.சா.)

அர்ஜுனன் காண்டீபத்தினால் வேடன் தலையில் அடித்தான். பின்னர் வந்திருப்பது சிவபெருமானே என்றுணர்ந்து அவரை வணங்குகிறான். (சுவாமியின் சிரசில் உள்ள பள்ளத்தில் தீர்த்தம் நிறைந்துள்ளது) அர்ஜுனனின் தவத்தை மெச்சி இறைவன் அவனுக்குப் பாசுபதாஸ்திரத்தை வழங்கினார். லிங்கம், ‘பார்த்தப் பிரசுரலிங்கம்’ எனப்படுகிறது. பாசுபதாஸ்திரம் ஏந்திய சிவனது உற்சவ விக்ரஹமும், அர்ஜுனனுடைய உற்சவ விக்ரஹமும் இங்குள்ள மிகத் தொன்மையான திருவுருவங்கள். (குளம் தோண்டியபோது கிடைத்தவை) மஹாபாரதம் வனபர்வத்தில் இந்நிகழ்ச்சி விவரிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்த நாளில், அர்ஜுனனுக்கு இறைவன் பாசுபதாஸ்திரம் வழங்கிய ஐதீக விழா கோயிலில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நாங்கள் காலை ஒன்பதரை மணியளவில் கோயிலை அடைந்தபோது 300 வருடங்களுக்கும் மேலான பழமை வாய்ந்த அர்ஜுனன் விக்ரஹத்திற்குப் பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அர்ஜுனன் வேட்டையாடக் காட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். மாலை 4 மணிக்கு வேடன் வேடுவச்சி புறப்பாடு, 6 மணிக்கு வேடனும் அர்ஜுனனும் பன்றியைச் சம்ஹாரம் செய்வது,

8 மணிக்கு சுயரூபம் காட்டி அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அளிப்பது என்று நிகழ்ச்சி நிரலில் எழுதப்பட்டிருந்தது. பாசுபத மூர்த்தியை கிராத மூர்த்தி என்றும் அழைப்பர்; இவ்வடிவில் சிவபெருமான் வில், அம்பு, கோடாரி, மான் ஆகியன ஏந்தி, ஜடாமகுடமும் கொண்டிருக்கிறார். கிழக்கு நோக்கிய திருக்கோயில். கொடி மரம், பலிபீடம், நந்தியை வணங்கி, நுழைவாயிலின் இடப்புறமுள்ள துவார கணபதியையும், வலப்புறமுள்ள தண்டபாணியையும் தொழுகிறோம். வலப்புறம் சற்குணாம்பாள் எனும் நல்ல நாயகியை வணங்கலாம்.

கருவறையில் பாசுபதேஸ்வரர் சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். கோட்டத்தில், உச்சி விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை (துர்கா லட்சுமி) மற்றும் தனிச்சந்நதியில் சண்டிகேஸ்வரரைத் தரிசிக்கிறோம். பிராகார வலம் வரும்போது சித்தி விநாயகரைத் தரிசிக்கலாம். தேவார மூவர், மணிவாசகர், மீனாட்சி-சொக்கநாதர், ஆதிபாசுபதேஸ்வரர் இவர்களை வணங்கி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானை வணங்குகிறோம். இத்தலத்தில் அருணகிரியார் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.

‘‘மாத்திரையாகிலு நாத்தவறாளுடன்

    வாழ்க்கையை நீடென மதியாமல்

மாக்களை யாரையும் ஏற்றிடு சீலிகள்

    மாப்பரிவே எய்தி அநுபோக

பாத்திரம் ஈதென மூட்டிடும் ஆசைகள்

    பாற்படு ஆடகம் அது தேடப்

பார்க்கள மீதினில் மூர்க்கரையே கவி

    பாற்கடலானென உழல்வேனோ

சாத்திரம் ஆறையும் நீத்த மனோலய

    சாத்தியர் மேவிய பதவேளே

தாத்தரி தாகிட சேக்கெனு மா நட

    தாட்பரனார் தரு குமரேசா

வேத்திர சாலமதேற்றிடு வேடுவர்

    மீக்கமுதா மயில் மணவாளா

வேத்தமதா மறை ஆர்த்திடு சீர் திரு

    வேட்கள மேவிய பெருமாளே’’

என்பது ஒரு பாடல்.

- சித்ரா மூர்த்தி

(உலா தொடரும்)

Related Stories: