கொடைரோடு ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில்களை நிறுத்த வேண்டுகோள்

நிலக்கோட்டை: கொரோனா ஊரடங்கு காரணமாக, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. ரயில்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு கொடைரோடு ரயில் நிலையத்தில் 35 ரயில்கள் நின்று சென்றன. தற்போது வைரஸ் தொற்று குறைந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி ஆறு மாதத்திற்கு மேலாகியும், தினமும் இயங்கி வந்த திண்டுக்கல்-மதுரை, திருநெல்வேலி-ஈரோடு, மயிலாடுதுறை, பாலக்காடு-மதுரை பேசஞ்சர்கள் ரயில்கள் இயக்கப்படவில்லை. ஏற்கனவே இந்த ரயில் நிலையத்தில் நின்று சென்ற தேஜஸ், குருவாயூர், அனந்தபுரி, முத்துநகர், திருப்பதி உட்பட பெரும்பாலான அதிவிரைவு ரயில்கள் நிற்பதில்லை. இதனால் இப்பகுதியில் உற்பத்தி செய்யக்கூடிய பூக்கள், பழங்களை மதுரை, கோவை, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்ல விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த ரயில் நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தை இயக்கி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட டாக்ஸி ஓட்டுனர்கள், சிறு குறு தட்டு வியாபாரிகள் தற்போது வருவாய் இன்றி முற்றிலும் முடங்கியுள்ளனர்.ஆங்கிலேயர்களால் துவக்கப்பட்டு, எப்போதும் பரபரப்பாக காணப்படும் கொடைக்கானல்ரோடு ரயில் நிலையத்தில், தற்போது ரயில்கள் நின்று செல்லாததால் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். மேலும் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்….

The post கொடைரோடு ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில்களை நிறுத்த வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: