காவிய வரமருளும் வீர நாராயணர்

கர்நாடகா - கடக்

பெங்களூரிலிருந்து 420 கிலோமீட்டரிலும், ஹூப்ளியிலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலும் கடக் அமைந்துள்ளது.  தமிழ்நாட்டிலிருந்து ராமானுஜர் கர்நாடகாவின் கொண்டனூர் பகுதிக்கு வந்தபோது, அந்தப் பகுதியை பிடிதேவா என்ற  ஜெயின் மத மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய இளவரசியின் மகளுக்கு பேய் பிடித்திருந்தது. ஜெயின் துறவிகளால் என்ன செய்தும் அகற்ற இயலவில்லை.இந்த விஷயம் ராமானுஜருக்கு தெரிந்ததும், அவர் அந்த  இளவரசியை வரச் செய்து, அதேசமயம் எம்பெருமான் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்து குணப்படுத்தி விட்டார்.  இதனால் மகிழ்ந்த மன்னன் ஜைன மதத்தை விட்டு விலகி, வைணவ மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டான். ராமானுஜருக்கு பரம சீடராகி, அவர் விருப்பப்படி கீழ்க்கண்ட ஐந்து விஷ்ணு கோயில்களை கட்டினான். இவை பஞ்ச  நாராயண ஷேத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.

1. சென்னகேசவர் கோயில் - பேலூர், 2. செல்வ நாராயணர் கோயில் - மேல்கோட்டை, 3. நம்பி நாராயண கோயில் -  தொண்டனூர், 4. வீர நாராயணர் கோயில் - கடக், 5. கீர்த்தி நாராயணர் கோயில் - தலக்காடு, இவற்றில் வீர நாராயண  கோயிலை தான் நாம் தற்போது தரிசிக்க உள்ளோம்.இந்த கோயிலில் விஜயநகர, சாளுக்கிய மற்றும் ஹொய்சாலா  கட்டிடக்கலை பின்பற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.பிரதான கோபுரம் விஜயநகர பாணியிலும், துவஜஸ்தம்பம் மற்றும்  முன் மண்டபம் ஹொய்சால  கால பாணியிலும், உள் மண்டபம், கர்ப்ப கிரகம் சாளுக்கிய பாணியிலும் அமைந்துள்ளது.  நாலு நிலைகளுடன் கூடிய கோபுரத்தை கடந்து உள்ளே நுழைகிறோம். இருபுறங்களிலும் விஸ்தாரமாக அமைந்துள்ள  பகுதியை கடந்து கோயிலினுள் செல்ல முயற்சிக்கும் போது துவஸ்தம்பம் மற்றும் கருட சந்நதியை தாண்டி, மெயின்  மண்டப வாசலை அடைகிறோம். இரு யானைகள், இருபுறமும் மண்டியிட்ட பாணியில் நம்மை வரவேற்கின்றன.

அவற்றின் கல் தந்தங்கள் உடைபட்ட நிலையில் உள்ளன. முன் மண்டபத்தை இருபுறமும், தூண்கள் நடுவில் தாங்க,  அவற்றின் இடையே அமைக்கப்பட்டுள்ள, டைல்ஸ் போடப்பட்ட பாதை வழியாக உள் மண்டபம் நோக்கி செல்கிறோம்.  அதனையும் கடந்து கர்ப்ப கிரகம் உள்ளது. அங்கு நின்றகோலத்தில் கிழக்கு பார்த்தபடி காட்சி தருகிறார் வீர நாராயணர்!  போர்க்கோலம். நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரைப் பூ ஏந்தியுள்ளார். அவரை ஒட்டி ஸ்ரீதேவி,  பூதேவியும் இருபுறமும் நிற்கின்றனர்.கர்நாடகத்தின் சிறப்ேப மஞ்சள் செவ்வந்திதான். அதனை மீட்டர் மீட்டராக  வாங்கி, மாலையாக்கி, கம்பீரமாக நிற்கும் வீர நாராயணருக்கு அணிவித்துள்ளனர். வயிற்றுக்கு மேல், முகம், நீங்கலாக  கைகள், கருவிகள் உட்பட வெள்ளிக்கவசம் சாத்தியுள்ளனர். தலையில் தங்க கில்ட் பூசப்பட்ட கிரீடம் உள்ளது.

இந்த கோயிலில் உள்ள குழலூதும் கண்ணன் என்ற வேணுகோபாலன் கவனிக்கப்பட வேண்டியவர். வடக்கு பார்த்து  நமக்கு காட்சி தரும் வேணுகோபாலனின் பின்னால் மரக்காட்சி, பக்கத்தில் பசு மாடு, கோபியர் என சுற்றி கூட்டம்.  அற்புதமான காட்சி. அடுத்து தெற்குப் பார்த்து யோக நரசிம்மர் உள்ளார். கர்ப்ப கிரகத்துக்கு மேலே வெளியே கலசத்துடன்  கூடிய விமானம் எழுப்பப்பட்டுள்ளது. மிகப் பழைய கோயில் என்பதால் கர்நாடகாவின் தொல்பொருள் இலாக்கா வசம்  இந்த கோயில் உள்ளது. முன் மண்டபத்தை தாங்கும் ஒரு தூண் மிக முக்கியமானது. இங்கு சக்ரவர்த்திநரனப்பா, சாய்ந்தபடி மகாபாரதத்தை கன்னடத்தில் எழுதியதாக கூறப்படுகிறது. இதனால் இவரை குமார வியாசர் என  சிறப்பு பெயரிட்டு அழைக்கின்றனர். ஒரு காலத்தில் கடக், கல்வி கற்கும் முக்கிய இடமாக இருந்ததாக இங்கு உள்ள  சில கல்வெட்டுகள் கூறுகின்றன. அவர் எந்த தூணில் சாய்ந்தபடி எழுதினாரோ, அந்த தூணில் அவருடைய உருவம்  செதுக்கப்பட்டுள்ளது. கோயில் காலை 6 மணி முதல் 2 மணி வரை மற்றும் பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 8.30  மணி வரை திறந்திருக்கும். பெங்களூரிலிருந்து சித்ர துர்கா ஹவேரி வழியாக கடக்கை அடையலாம்.  

- ராஜிராதா

Related Stories: