கோயம்பேடு கட்சியின் கோட்டை தேய்ந்து வரும் கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கோயம்பேடு கட்சியின் கோட்டைனு சொன்ன இடத்துலேயே ஓட்டையாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கோயம்பேடுகாரரின் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டது. ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில், மனைவியின் தொகுதியில் நின்ற கோயம்பேடு கட்சி தலைவர் அபார வெற்றி பெற்றார். இதனால் இந்த மாவட்டம் கோயம்பேடுகாரரின் கோட்டை என்று அந்தஸ்த்து பெற்றது. இதே மாவட்டத்தில் பெருமாள் பெயரைக்கொண்டவரும் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக தேர்வானார். தமிழகத்தில், இந்த மாவட்டம் தான் கோயம்பேடுகாரரின் கட்சியின் கோட்டை என்று சொல்லி வந்தாங்க. தற்போது கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டதாம். தேய்ந்துபோன கட்சியால் மாஜி எம்எல்ஏவும், கட்சி தலைமையுடன் ஏற்பட்ட விரக்தியால் ஒதுங்கி, இதுவரை பயணித்தது போதும் நீங்கள் இனி சுதந்திரமாக பயணியுங்கள் என்று கட்சியினரையும் உசுப்பேத்தி விட்டாராம். மேலும் கட்சி தலைமையையும் சமூக வலைதளங்களில் விமர்சித்தாராம். இதனிடையே கட்சி தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் ஒதுங்கி வரும் மாஜி எம்எல்ஏ, பக்கத்து மாவட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மட்டும் கலந்து கொண்டு வருகிறாராம். அண்மையில் கடலூர் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அவர், கோட்டை மாவட்டத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தாமல் புறக்கணித்து விட்டாராம். கேயம்பேடுகாரர் கட்சியின் பவர்ஃபுல் மேனே ஒதுங்கி விட்டதால், நாம் ஏன் இனியும் பயணிக்க வேண்டும் என்று இருக்கும் இடம் தெரியாமல் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாற்றுக் கட்சியில் ஐக்கியமாக தயாராகிட்டாங்க.. இனி நம்ம கட்சியின் கோட்டை அந்த மாவட்டம் என்று கோயம்பேடுகாரர் கூற முடியாது என்கிறார்கள், அவரது கட்சியை சேர்ந்தவர்களே…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கோவை என்றாலே கலெக்ஷனுக்கு குறைவே இருக்காது போல…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதியில் உள்ள ஒரு இளநிலை பொறியாளர், மாநகராட்சிக்கு உள்ளேயும், மாநகராட்சிக்கு வெளியேயும் எந்தெந்த வகையில் பில் போட்டு, எப்படியெல்லாம் பணம் சுருட்டலாம் என வியூகம் வகுத்து செயல்படுவதில், படு கில்லாடியாம். சமீபத்தில், மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ஒருவர், பாதாள சாக்கடை இணைப்பில் அடைப்பு ஏற்பட்டுள்ளது, அதை சரிசெய்ய வேண்டும் என விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த இந்த பொறியாளர், மேற்பார்வை கட்டணம், ஆண்டு பராமரிப்பு கட்டணம், தார்ச்சாலையை வெட்டி அகற்ற கட்டணம் என சம்பந்தமே இல்லாமல் ரூ.40 ஆயிரம் பில் போட்டு அசத்திவிட்டாராம். இந்த பணம் அரசுக்கு போய் இருந்தால் பரவாயில்லை. ஆனால், மாறாக, இவரது பாக்கெட்டிற்கு நிறைகிறது. இப்படி அன்றாடம் வசூல் குவிக்கும் இவர், மாநகரில் பணக்கார பொறியாளராக வலம் வருகிறாராம். கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் சந்து, பொந்தெல்லாம் நுழைந்து, எங்கெங்கு விதிமீறல் நடக்கிறதோ, அங்கெல்லாம் ஆப்பு வைக்கும் மாநகராட்சி கமிஷனர் கண்ணில் இவர் இன்னும் சிக்கவில்லை என்பதுதான் ஹைலைட்…’’என்றார் விக்கியானந்தா.‘‘பூட்டு மாவட்டத்தில் இலையின் தொண்டர்கள் கடும் அப்செட்டில் இருக்காங்களாமே, ஏனாம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘பூட்டு மாவட்டத்தில் இலைக்கட்சிக்கான உட்கட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் மேற்கு மாவட்டத்தில் ஏற்கனவே கட்சியில் முக்கிய பதவி வகிப்பவர்களுக்கே மீண்டும் கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறதாம். இதனால் காலந்தோறும் கட்சிக்கென உழைத்து வரும் நிர்வாகிகள், தொண்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர். முந்தைய மின்துறைக்காரரிடம் விசுவாசம் காட்டி வந்த ஒரு நபர், அவரது பதவி பறி போனதும், முந்தைய வனத்துறைக்காரரிடம் பாசத்தை பொழிந்து வந்தாராம்… சேலத்துக்காரருக்கும் தீவிர ஆதரவாளர் என்பதால் அவர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் பதவியில் தொடர்கின்றனராம்… எந்த பக்கம் காத்தடிக்கிறதோ அங்கே சாய்ந்து, வருவாய் பார்த்து வருபவர்களுக்கு பதவியை கொடுக்கும் தலைமை, காலங்காலமாக உழைத்த நம்மை கண்டு கொள்ளவில்லையே என மூத்த நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். இதனால் இவர்கள் கட்சிப்பணியில் போதிய தீவிரம் காட்டாமல் உள்ளனர். அதிருப்தியடைந்துள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களில் பலர் கட்சி மாறும் திட்டத்தில் உள்ளனராம்…’’‘‘என்னது கடல் காணாமல் போச்சா… ’’ – விவரம் புரியாமல் குழம்பிய கேள்வியை கேட்டார் பீட்டர் மாமா.‘‘கடல் காணாமல் போகல… கடல் அட்டை தான் காணாமல் போச்சு, விஷயத்தை சொல்றேன் அப்புறமாவது கேள்வி கேட்பதில் தெளிவாக இரு… வெளிநாடுகளில் மருந்து பொருளாக பயன்படுத்துவதால் வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் கடலோர மாவட்ட கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசாரால் பிப்ரவரி மாதம் கைப்பற்றப்பட்டதாம். மாரியம்மன் கோயிலுக்கு தென்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த இது ரூ.20லட்சம் மதிப்பிலான 1,600 கிலோ கடல் அட்டை, சுறாமீன் இறக்கைகள் இருந்ததாம். இதில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் கடலோர மாவட்ட வனச்சரக அலுவலர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்ததாம். இதுதொடர்பாக மேல் விசாரணைக்காக சில தினங்களுக்கு முன் கடலோர காவல் குழும போலீசார் ஆய்வு செய்தபோது, ரூ.2 லட்சம் மதிப்பிலான 400 கிலோ கடல் அட்டை காணவில்லையாம். மேல் நடவடிக்கைக்காக அரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த 1,600 கிலோ கடல் அட்டையில் 400 கிலோ எப்படி காணாமல் போச்சு என்று மண்டையை பீய்த்து கொள்கிறார்களாம். கருப்பு ஆடுகளின் வேலையாக இருக்குமோ என்று யோசித்து வருகிறார்களார். இதனால, கடலோர காவல் குழும போலீசார் அதிர்ச்சியில் இருக்காங்க. இதுதொடர்பாக ரகசியமாக விசாரணை நடத்தி வரும் கடலோர காவல் குழும போலீசார் வனச்சரக அலுவலக பணியாளர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.    …

The post கோயம்பேடு கட்சியின் கோட்டை தேய்ந்து வரும் கதையை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: