தொழிலாளர்கள் ஓய்வு காலத்தில் பயன்பெறும் வகையில், வருங்கால வைப்பு நிதி திட்டம் இந்தியாவில் 1952ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இபிஎப் அல்லது பிஎப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி, ஊழியர்களின் சேமிப்பில் முக்கிய பங்கு வகிப்பதாகும். இத்திட்டத்தின் கீழ் ஊழியர்களின் மாத ஊதியத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனமும் அதே 12 சதவீத தொகையை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும்.ஊழியர்கள் மற்றும் நிறுவனம் செலுத்தும் தொகையானது, வருங்கால வைப்பு நிதியாக வட்டியோடு பரிணமிக்கும். பணிக்காலம் முடிந்த பிறகு, இத்திட்டத்தின் கீழ் ஊழியர்கள் மொத்த தொகையையும் பெற்றுக் கொள்ள முடியும். தொழிலாளர்கள் அவசர தேவை அடிப்படையில் மருத்துவ செலவு, சுப செலவுகளுக்கு கூட வருங்கால வைப்பு நிதியில் இருந்து குறிப்பிட்ட அளவு நிதியை பெற்று கொள்ள முடியும். வாழ்க்கையில் திடீர் செலவுகளை கூட வருங்கால வைப்பு நிதியை வைத்து சரிக்கட்டிவிட முடியும். ஒன்றிய அரசின் தொழிலாளர் அமைச்சகம் அதிலும் தற்போது கை வைக்க தொடங்கியுள்ளது. பி.எப். திட்டத்தில் ஊழியர்கள் செலுத்தும் தொகைக்கான வட்டி விகிதத்தை, 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைத்துள்ளனர். வருங்கால வைப்பு நிதியை இப்படி அதிரடியாக குறைத்திருப்பது தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பிற்கு பின்னர் இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம் வேதனைகளை மட்டுமே சுமந்து வருகிறது. இத்தகைய சூழலில் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றினாற்போல், தொழிலாளர்களின் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. வட்டி விகிதம் குறைப்புக்கு உருப்படியான காரணங்களும் இல்லை.நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் ஓரளவுக்கு வளர்ச்சிப் பாதையிலே பயணிக்கிறது. அதுமட்டுமின்றி, வருங்கால வைப்பு நிதி வாரியம், பங்கு சந்தையிலும், கடன் சந்தையிலும் செய்துள்ள முதலீடுகள் மீது 15 சதவீதம் வரை வருவாய் ஈட்டியுள்ளது. அத்தொகையில் இருந்து 8.5 சதவீதம் வட்டி கூட வழங்க மறுப்பது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு 6.5 சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது என்பதை காரணம் காட்டி வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியையும் குறைப்பது ஏற்று கொள்ளத்தக்கதல்ல. இந்தியாவில் 1990 தொடங்கி 2000ம் ஆண்டு வரை வருங்கால வைப்பு நிதி முதலீடுகளுக்கு 12 சதவீத வட்டி வழங்கப்பட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியது போல், தற்போது அதற்கான வட்டி தொகை 8.1 சதவீதமாக மாறியிருப்பது தொழிலாளர்களை கண்டிப்பாக பாதிக்கும். நாட்டின் முதுகெலும்பாக திகழும் தொழிலாளர்கள் வர்க்கத்திற்கு நிகழ்காலத்தை போல, வருங்காலமும் முக்கியம். அந்த வகையில் வருங்கால வைப்பு நிதிக்கு, நிறைவான வட்டி வழங்கப்படுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்….
The post தொழிலாளர்களுக்கு அநீதி appeared first on Dinakaran.